தற்போது திரைக்கு வந்துள்ள எழுத்தாளர் சந்திரா ஓர் இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் ‘கள்ளன்’. கதாநாயகனாக இயக்குநர் கரு. பழனியப்பன். மிக இயல்பாக நடித்திருக்கிறார். தேனி மாவட்டத்தின் இயற்கை காட்சிகள் படத்தில் ஒரு கதாபாத்திரமாக உலவுகிறது.
சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி என்பதைப் போல, திருட்டுத் தொழில் தன்னைச் சேர்ந்த நண்பர்களையும் கொன்றுவிடும் என்று சித்திரிக்கும் படம். காதல், கடத்தல் என தொடங்குகிறது.
ஒருகட்டத்தில் ஒரு பெண்ணின் பேராசையால் தோழமைகளின் உயிரை எடுக்கும் அளவுக்கு உச்சம் தொடுகிறது திரைக்கதை.
பெண் இயக்குநர் மென்மையான காதல் கதைகளைத்தான் சொல்வார் என்ற கருத்தை மாற்றியமைத்துள்ளார் சந்திரா. மாயாவின் நடிப்பு பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இதுதான் முதல் படமாம். அவரது எள்ளல் பேச்சும், நடிப்பும் படம் முடிந்த பிறகும் மனதில் நிற்கிறது.
எழுத்தாளர் தமிழ்மகன் சொல்வதைப்போல, ஒவ்வொரு குற்றமும் இன்னொரு குற்றத்தைக் கைபிடித்து அழைத்துச் செல்கிறது. சங்கிலித்தொடர் போல குற்றங்கள் விரிவதை அற்புதமாக சொல்லியிருக்கிறார் சந்திரா.
இயக்குநர் சந்திராவுக்கு பெரும் வெற்றிகள் காத்திருக்கின்றன. வாழ்த்துகள்…
சுந்தரபுத்தன்