காரைக்காலில் அமைந்துள்ள பொய்யாத மூர்த்தி விநாயகர் கோயில் முகப்பு மண்டபத்தை இடிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவால் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட பகுதியில் புதுச்சேரி காவல்துறை ஐ.ஜி., காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இன்று (மார்ச் 25) ஆய்வு மேற்கொண்டனர்.
காரைக்கால் கைலாசநாதர் கோயில் வகையறாவைச் சேர்ந்த, பொய்யாத மூர்த்தி விநாயகர் கோயில் கோபுர வாயில் பகுதியில் முகப்பு மண்டபம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், அரசுத் துறைகளின் அனுமதியின்றி பொது இடத்தை ஆக்கிரமித்து இந்த மண்டபம் கட்டப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கடந்த 18-ம் தேதி நீதி மன்றம் அளித்த தீர்ப்பில், முகப்பு மண்டபத்தை 28-ம் தேதிக்குள் இடித்து அகற்றுமாறு உத்தரவிட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், முகப்பு மண்டபத்தை இடிக்கக் கூடாது என்று வலியுறுத்தியும் காரைக்கால் மாவட்ட இந்து அமைப்புகள் சார்பில் தொடர்ந்து பலகட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மக்கள் பிரதிநிதிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். எந்த நேரத்திலும் கோயில் முகப்பு மண்டபம் இடிக்கப்படலாம் சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருவதால் இந்து அமைப்புகளைச் சேர்ந்தோர் தொடர்ந்து கோயில் அருகிலேயே கூடியிருந்து வருகின்றனர். அசாதாரணமான சூழல் நிலவுவதால் புதுச்சேரியிலிருந்து கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்தச் சூழலில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா விடுப்பில் சென்றுள்ளதால், புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் இ.வல்லவன் காரைக்கால் ஆட்சியராக இன்று கூடுதல் பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும், புதுச்சேரி காவல் துறை ஐஜி வி.ஜே.சந்திரன் இன்று காரைக்கால் வந்து காவல் துறை உயரதிகாரிகள் ஆய்வு கூட்டத்தை நடத்தி நிலவரம் குறித்து கேட்டறிந்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் (பொ) வல்லவன் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டு கருத்துகள் கேட்டறியப்பட்டன. இதில் ஐ.ஜி.சந்திரன், மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யா, துணை மாவட்ட ஆட்சியர் எம்.ஆதர்ஷ், மண்டல காவல் கண்காணிப்பாளர்கள் ஏ.சுப்பிரமணியன், நிதின் கவுஹால் ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முகப்பு மண்டபத்தை இடிக்கக் கூடாது என்று வலியுறுத்தினர். நீதிமன்றம் அளிக்கும் உத்தரவின்படி செயல்பட வேண்டும் என்று சிலர் குறிப்பிட்டனர். தொடர்ந்து ஆட்சியரும், ஐ.ஜியும் கோயில் முகப்பு மண்டபம் கட்டப்பட்டுள்ள பகுதிக்குச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.