கடந்த ஏப்ரல் -26-ஆம் தேதி தஞ்சாவூர் அருகே களிமேடு தேர் திருவிழாவின் போது ஏற்பட்ட விபத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அனைவரின் இல்லத்திற்க்கும், காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.
முன்னதாக இன்று காலை தஞ்சையிலிருந்து களிமேடு கிராமத்திற்கு சென்று தேர் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் இல்லத்திற்குச் சென்று ஆறுதல் தெரிவித்தார் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் தவத்திரு பொன்னம்பல அடிகளார் ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அடிகளார். தஞ்சை களிமேட்டில் நடைபெற்ற அசாதாரண சூழ்நிலை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நுாற்றாண்டு காலமாக அப்பர் சுவாமியை தன் நெஞ்சில் சுமந்தவர்கள் இந்த மக்கள். அப்பர் பெருமான் தொண்டையே தன் இறைப்பணியாக கொண்டவர், 7-ஆம் நுாற்றாண்டின் புரட்சித் துறவியாக திகழ்ந்தவர். சாதி பேதமற்ற சமுதாயத்திற்காக போராடிய அப்பர் பெருமானுக்கு கயிலாயக் காட்சியை அருகில் உள்ள திருவையாறில் தான் இறைவன் காட்சி கொடுத்தார். தஞ்சையில் தான் அப்பரும்-திருஞானசம்பந்தரும் எதிர் கொண்டு சந்தித்தனர்.
களிமேடு மக்கள் இந்த அசாதாரண சூழலில் இருந்து விரைவில் விடுபடவேண்டும். உயிரிழந்த ஆத்மாக்கள் இறைவன் காலடியில் இளைப்பாற வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி பிராத்தித்துக் கொள்கிறேன்.
எதிர்காலத்தில் இது போன்ற அசாதாரண சூழ்நிலை ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
பொதுவாக சைவ மடத் துறவிகள் துக்க நிகழ்வுகளில் ஒரு மாதத்திற்குப் பிறகுதான் கலந்து கொள்வது மரபு. மக்களின் சேவையே இறைவனுக்கு செய்யும் சேவை என்ற நோக்கில் அசாதாரண நிகழ்வு நடந்து அதனால் ஏற்பட்ட துயரில் உள்ள மக்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூற மரபுகளை விடுத்து குன்றக்குடி அடிகளார் களிமேடு சென்று உயிரிழந்த குடும்பத்தார்களைச் சந்தித்து அவர்களின் துயரங்களில் பங்கேற்று ஆறுதல் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி & படங்கள்
சிங்தேவ்