மனிதநேயத்திற்கு குந்தகம் ஏற்படாமல் தருமபுர ஆதினம் பட்டினபிரவேசம் நடத்த ஆவண செய்யப்படும் என முதல்வர் உறுதி அளித்துள்ளார் என முதல்வரை சந்தித்தபின் குன்றக்குடி ஆதினம் பேட்டி அளித்தார்.
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், பொம்மபுரம் ஆதீனம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள், தருமை ஆதீனம் தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினர்.
தருமபுரம் ஆதினம் பட்டினப்பிரவேசம் விவகாரம் தொடர்பாக அமைச்சர் சேகர் பாபுவுடன் குன்றக்குடி, மயிலம், பேரூர் ஆதினங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். முதல்வரை அவர் இல்லத்தில் பேரூர் ஆதினம் சந்தாலிங்கம மருதாசல அடிகளார்,சிவகங்கை குன்றக்குடி ஆதினம் பொன்னம்பல அடிகளார், விழுப்புரம் மாவட்டம் மயிலம் பொம்மபுர ஆதினம் சிவஞான பாலய சுவாமிகள் மயிலாடுதுறை ஆதினம் தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் சந்தித்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய குன்றக்குடி ஆதினம் பொன்னம்பல அடிகளார் “இந்த ஆண்டு மரபுப்படி பட்டினப்பிரவேசம் நடைபெற முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம். அதை ஏற்று ஏற்பாடு செய்ய முதல்வர் உறுதியளித்துள்ளார். வரும் காலங்களில் மனித நேயத்திற்கு குந்தகம் ஏற்படாமல் எந்த வித குறுக்கீடுகளும் இல்லாமல் பட்டின பிரவேசம் நடத்த ஆவண செய்யப்படும் என முதல்வர் உறுதி அளித்துள்ளார்” என்று கூறினார்.
“இதுவரை பட்டினப்பிரவேசம் எந்தவித தடையுமில்லாமல் குறுக்கீடுகளும் இல்லாமல் சுகமாகவே நடைபெற்றுள்ளது. கொரோனா காலத்தில் மட்டும் தான் பட்டின பிரவேசம் நடைபெறவில்லை. ஆதினம் பல்லக்கில் பவனிசெய்வது காலங்காலமாக நடைபெற்று வரும் மரபு. அது ஆன்மீகத்தின் அடித்தளம். அதனை தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் நடத்தி வருகின்றனர்.” என்று கூறினார் குன்றக்குடி ஆதினம்.
அவரைத் தொடர்ந்து பேசிய மயிலாடுதுறை ஆதினம் தம்பிரான் சுவாமிகள் “இந்த ஆண்டு தருமபுரம் ஆதினம் பட்டினப்பிரவேசம் புறப்பாடு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். கலந்தாலோசித்து ஆவண செய்வதாக முதல்வர் உறுதியளித்துள்ளார். இது சமய தொடர்பான நிகழ்வு. இதில் எந்தவித அரசியல் தலையீடு குறுக்கீடு தேவை இல்லை.
இது வழக்கம்போல நடத்த அனுமதி அளிப்பதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார். முதல்வரும் ஆவண செய்வதாக கூறியுள்ளார். இந்த ஆண்டு இந்த பட்டினப்பிரவேசம் விழாவை சிறப்பாக நடத்த உள்ளதாகவும் அரசும் ஆதீனங்களும் சேர்ந்து எந்தவித தடையுமின்றி பட்டினப் பிரவேசத்தை நடத்த உள்ளோம்.” என்று கூறினார்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்