ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாநிலமான பாக்டிகாவில்தான் மரண எண்ணிக்கை அதிகம். அங்கு நூற்றுக்கணக்கில் மக்கள் மரணமடைந்துவிட்டதாக நேற்று காலை தகவல்கள் தெரிவித்தன. அனைத்துலக நிறுவனங்களின் மனிதாபிமான உதவியை தாங்கள் வரவேற்பதாக ஆப்கானிஸ்தான் அரசாங்கப் பேச்சாளர் தெரிவித்தார். படம்: ஏஎஃப்பி
ஆப்கானிஸ்தானில் நேற்று அதிகாலை நேரத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தபட்சம் 1,000 பேர் மரணமடைந்துவிட்டதாக தலிபான் தரப்பை மேற்கோள்காட்டி பிபிசி தெரிவித்தது.
தொலைதூர மலைக்கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதால் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை என்றும் 1,500 பேர் காயமடைந்து இருப்பதாகவும் அது கூறியது.
சூழ்நிலைகளை வைத்து பார்க்கையில் மரண எண்ணிக்கை மிகவும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் அச்சத்தோடு கவலை தெரிவித்தனர்.
பாகிஸ்தானுடன் கூடிய எல்லை அருகே இருக்கும் ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் என்ற நகரில் இருந்து ஏறக்குறைய 44 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம் வலுவானதாகவும் நீண்டநேரம் நீடித்ததாகவும் காபூல் நகரைச் சேர்ந்த ஒருவர் இணையத்தளத்தில் தெரிவித்தார்.
வீடுகள் தரைமட்டமாகிக் கிடப்பதையும் உடல்கள் போர்வையில் போர்த்தப்பட்டு இருப்பதையும் காட்டும் ஏராளமான படங்கள் ஆப்கானிஸ்தான் ஊடகத்தில் வெளியிடப்பட்டன.
நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 அளவுக்கு இருந்ததாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் புவியியல் நிலையம் தெரிவித்தது.
ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாநிலமான பாக்டிகாவில்தான் மரண எண்ணிக்கை அதிகம். அங்கு நூற்றுக்கணக்கில் மக்கள் மரணமடைந்துவிட்டதாக நேற்று காலை தகவல் தெரிவித்தன.
நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்ததாகவும் உள்துறை அமைச்சு தெரிவித்தது.
அதிகாரிகள் பெரிய அளவில் மீட்புப் பணிகளைத் தொடங்கி உள்ளனர். பல ஹெலிகாப்டர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
நிலநடுக்கத்தை பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியாவில் உள்ள கிட்டத்தட்ட 119 மில்லியன் மக்கள் உணர்ந்ததாக டுவிட்டரில் அந்த ஐரோப்பிய நிலையம் தெரிவித்தது.
பாகிஸ்தானில் உடனடி உயிருடற் சேதம் பற்றிய தகவல் இல்லை.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம்தான் தலிபான் தரப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. அந்த நாட்டில் கடுமையான பொருளியல் நெருக்கடி நிலவுகிறது. இத்தகைய ஒரு சூழ்நிலையில் பேரிடர் வேறு நிகழ்ந்துவிட்டது.
ஆப்கானிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் 2015ல் நிலநடுக்கம் நிகழ்ந்தபோது அந்த நாட்டிலும் பாகிஸ்தானிலும் நூற்றுக்கணக்கான மக்கள் மரணமடைந்தனர்.