அமர்நாத் குகை கோயில் பகுதியில் மேகவெடிப்பின் காரணமாக பெய்த கனமழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு 16 பேர் பலியாகினர். 40-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை 16,000 பக்தர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தேசிய பேரிடர் மேலாண்மை இயக்குநர் அதுல் கர்வால் கூறும்போது, “அமர்நாத் சம்பவத்தில் இதுவரை 16 பேர் பலியாகினர். 40-க்கும் அதிகமானவர்கள் மாயமாகி உள்ளனர். நிலச்சரிவு எதுவும் ஏற்படவில்லை. ஆனால், தொடர்ந்து மழை பொழிந்து வருகிறது. தேசிய பேரிடர் மேலாண்மையை சேர்ந்த 100-க்கும் அதிகமான மீட்புப் படையினரைக் கொண்டு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றது” என்று தெரிவித்தார்.
பக்தர் ஒருவர் கூறும்போது, “மேகவெடிப்பு ஏற்பட்ட 10 நிமிடங்களுக்குள் பக்தர்களில் 8 பேர் பலியாகினர். மழையினால் உண்டான தண்ணீர் ஏராளமான கற்களை அடித்துச் சென்றது. ஏறத்தாழ 15,000 பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்தனர். பலத்த மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தொடர்ந்து வந்தனர். கூட்டம் நெரிசல் ஏற்பட அதிக வாய்ப்பு இருந்தது. எனினும் ராணுவத்தினர் உதவினர்” என்று தெரிவித்தார்.
அமர்நாத்தில் மழை பொழிந்தாலும் தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், அமர்நாத்துக்கு வந்திருந்த பக்தர்கள் தற்காலிகமாக பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம், பகல்காமில் அமர்நாத் குகைக் கோயில் அமைந்துள்ளது. அங்கு இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை வழிபட ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர்.
இந்த ஆண்டு இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், பனி லிங்கத்தை வழிபட்டுள்ளனர். இந்தச் சூழலில் நேற்று மாலை 5.30 மணிக்கு மேகவெடிப்பு காரணமாக அமர்நாத் குகைக் கோயில் பகுதியில் கனமழை பெய்தது. இதனால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. கோயில் அருகே செயல்படும் முகாமில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
அமர்நாத் யாத்திரை மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு ஜூன் 30 அன்று தொடங்கியது. 2019 ஆம் ஆண்டும் அரசியலமைப்பின் 370 விதிகளை மத்திய அரசு ரத்து செய்ததை பக்தர்கள் யாத்திரை செல்வது ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கரோனா காரணமாக 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் அமர்நாத் யாத்திரை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.