மலேசியாவின் 1எம்டிபி நிதியை மில்லியன் கணக்கில் தவறாகக் கையாண்டதற்காக 12 ஆண்டுகள் தண்டனையை அனுபவிக்க முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் நேற்று கஜாங் சிறைக்குச் சென்றார்.
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு இருக்கும் நஜிப், 69, அந்தக் குற்றத்தீர்ப்பை எதிர்த்து செய்த இறுதி மேல்முறையீடும் தோல்வியடைந்தது.
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது, கள்ளப்பண விவகாரம், நம்பிக்கை மோசடி ஆகியவை தொடர்பான ஏழு குற்றச்சாட்டுகளின் பேரில் நஜிப் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு இருந்தது.
அதை மலேசியாவின் ஆக உயரிய மத்திய நீதிமன்றம் நேற்று உறுதிப்படுத்தியது.
நஜிப், 2020 ஜூலை மாதம் உயர் நீதிமன்றத்தில் முதன்முறையாக குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டார்.
நஜிப் $65 மில்லியன் (210 மில்லியன் ரிங்கிட்) அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை மேல் முறையீட்டு நீதிமன்றமும் மத்திய நீதிமன்றமும் உறுதிப்படுத்தி இருக்கின்றன.
நஜிப் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர்கள் குழு, தன் கட்சிக்காரரைத் தற்காக்க எழுத்து மூலமாகவோ, வாய் மொழியாகவோ எந்தவொரு வாக்குமூலத்தையும் தாக்கல் செய்ய மறுத்துவிட்டதை அடுத்து, ஒரு வார காலம் கழித்து தலைமை நீதிபதி துங்கு மைமுன் துவான் மட் தலைமையிலான ஐந்து நீதிபதிகளைக் கொண்ட குழு நஜிப்புக்கு எதிராக நேற்று தீர்ப்பளித்தது.
தன்னுடைய மேல் முறையீட்டு மனுவை விசாரிக்கும் குழுவிற்குத் தலைமை ஏற்று இருந்த தலைமை நீதிபதியை அந்தப் பொறுப்பில் இருந்து விலக்க வேண்டும் என்று கோரி கடைசி நேரத்தில் நஜிப் எடுத்த முயற்சியும் நேற்று தோல்வியில் முடிந்தது.
தலைமை நீதிபதியின் கணவரான ஸமானி இப்ராஹிம் 2018ல் பதிவேற்றி இருந்த ஃபேஸ்புக் செய்தி ஒன்றைச் சுட்டிக்காட்டி நஜிப் அந்தக் கடைசி நேர முயற்சியை எடுத்தார்.
அந்தச் செய்தியில், நஜிப்பின் தலைமைத்துவத்தை திரு ஸமானி இப்ராஹிம் குறைகூறி இருந்தார்.
மேல்முறையீட்டை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி, தற்காப்பு வாதங்கள் முரண்பாடாக இருந்ததாகத் தெரிவித்தார். ஆகையால், மேல்முறையீடுகள் ஏகமனதாக நிராகரிக்கப்படுகின்றன. நஜிப்புக்கு எதிரான குற்றத்தீர்ப்பும் தண்டனையும் உறுதிப்படுத்தப் படுகின்றன என்று தலைமை நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கு நஜிப்புக்கு எதிரான ஐந்து வழக்கு விசாரணைகளில் ஒன்றாகும்.
அவர், இதர குற்றச்சாட்டுகளின் பேரில் நீதிமன்ற விசாரணைகளில் முன்னிலையாக வேண்டியநிலை இருக்கிறது. அனைத்து குற்றச்சாட்டுகளையும் நஜிப் ஒப்புக்கொள்ளவில்லை.