டிவிட்டர் ‘ப்ளூ டிக்’கின் விலை மாதம் 8 டாலர் – எலன் மஸ்க் அதிரடி அறிவித்துள்ளார்.ஒவ்வொரு நாட்டின் வாங்கும் திறனுக்கு ஏற்ப விலை மாறுபடும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ‘ப்ளூ டிக்’ வசதிக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் ட்விட்டரின் புதிய உரிமையாளர் எலான் மஸ்க்.
ட்விட்டரின் புதிய உரிமையாளரான எலான் மஸ்க், பல்வேறு மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், ட்விட்டரில் வார்த்தைகள் பயன்படுத்தப்படும் எண்ணிக்கையை அதிகப்படுத்த ஆலோசித்து வரும் வேளையில், பயனர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் ப்ளூ டிக் முறைக்கு கட்டணம் வசூலிக்கும் வழிமுறை குறித்து ஆராயுமாறு தனது ஊழியர்களுக்கு எலான் மஸ்க் தெரிவித்திருப்பதாக சில தினங்களாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
இப்போது இதனை அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார் மஸ்க். இதுதொடர்பாக மஸ்க் வெளியிட்டுள்ள பதிவில், “பயனர்களின் உண்மை அடையாளத்தை உறுதிபடுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ப்ளூ டிக் முறைக்கு இனி மாதம் 8 அமெரிக்க டாலர் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணம் ஒவ்வொரு நாட்டுக்கும் ஏற்றவாறு மாறும். அவ்வாறு கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் பெறும் பயனர்களுக்கு பதில்கள், குறிப்புகள் & தேடலில் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், அதிக நேரங்கள் கொண்ட வீடியோ மற்றும் ஆடியோ பதிவிடும் வசதியும், பாதி விளம்பரங்கள் மட்டுமே இருக்கும் வசதியும் இருக்கும். இந்த கட்டணம் மூலம் கிடைக்கும் வருமானம், சிறந்த உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுக்கு வெகுமதியாகவும் பகிர்ந்து அளிக்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.