இந்தியாவில் பணிபுரியும் ட்விட்டர் ஊழியர்கள் அதிரடி பணிநீக்கம் செய்து எலான் மஸ்க் நடவடிக்கை எடுத்துள்ளார்
இந்தியா அலுவலகத்தில் மார்க்கெட்டிங் மற்றும் கம்யூனிகேசன் துறைகளில் பணியாற்றியவர்கள் அனைவரையும் ட்விட்டர் நிறுவனம் பணி நீக்கம் செய்யும் பணிகளை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியப்பின் பல்வேறு அதிரடிகள் அரங்கேறி வரும் சூழலில், இந்தியாவில் பணியாளர்களை குறைக்கும் விதமாக பணி நீக்க நடவடிக்கையை அந்நிறுவனம் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தை கடந்த வாரம் தன்வசப்படுத்திய எலான் மஸ்க், அதன் CEO பராக் அகர்வால், அதன் CFO மற்றும் வேறு சில உயர் அதிகாரிகளை நீக்கினார். இந்நிலையில், ட்விட்டர் நிறுவனம் இன்று தனது ஊழியர்களுக்கு மெயில் ஒன்றை அனுப்பி இருந்தது. அதில், “ட்விட்டர் நிறுவனத்தை ஆரோக்கியமான பாதையில் வழிநடத்த, நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையை இன்று தொடங்கியுள்ளோம்” என குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து ட்விட்டர் ஊழியர்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.
தற்போது, இந்தியா அலுவலகத்தில் மார்க்கெட்டிங் மற்றும் கம்யூனிகேசன் துறைகளில் பணியாற்றியவர்கள் அனைவரையும் ட்விட்டர் நிறுவனம் பணி நீக்கம் செய்யும் பணிகளை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இந்தியாவில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கான பணிநீக்கம் குறித்து தெளிவான தகவல்கள் இல்லை.
“பணிநீக்கம் தொடங்கியுள்ளது. எனது சகாக்களில் சிலருக்கு இது தொடர்பான மின்னஞ்சல் அறிவிப்பு வந்துள்ளது” என்று பெயர் தெரியாத நிலையில் ட்விட்டர் இந்தியா ஊழியர் ஒருவரை மேற்கோள் காட்டி PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பணிநீக்கங்கள் இந்திய அணியின் “குறிப்பிடத்தக்க பகுதியை” பாதித்துள்ளதாக மற்றொரு நபர் கூறியுள்ளார்.