ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் தமிழ்நாடு அரசின் அரசிதழிலில் வெளியானது
தமிழக அரசால் சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர்ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டம் உடனடியாக அரசிதழில் வெளியிடப்படுவதாக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் இளைஞர்கள் உட்பட பலர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து, அதனால் தற்கொலை செய்து கொண்டநிகழ்வுகள் தொடர்ந்து நடந்தன.இதையடுத்து, கடந்த அதிமுகஆட்சியின் போது, சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது. இணையதள விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்கள் இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றன. இதையடுத்து, நீதிமன்றம் இச்சட்டத்தை ரத்து செய்ததுடன், புதிய சட்டம்கொண்டுவரலாம் என தெரிவித்தது.
இந்நிலையில், ஆட்சி மாற்றம்ஏற்பட்டு, திமுக அரசு பொறுப்பேற்ற பிறகும், ஆன்லைன் சூதாட்டவிளையாட்டுகளால் தற்கொலை நிகழ்வுகள் தொடர்ந்தன. இதையடுத்து, கடந்த ஆண்டு இறுதியில், ஆன்லைன் விளையாட்டுகளின் தாக்கம் குறித்து ஆய்வு செய்யமுன்னாள் நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கை பெறப்பட்டதுடன், பள்ளி மாணவர்கள் மத்தியில் ஆன்லைன் விளையாட்டுகளின் தாக்கம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. பல்வேறுதரப்பினரிடமும் கருத்துகள் கேட்கப்பட்டன. இதில் பெரும்பான்மையானோர் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய ஆதரவு தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு அக்.1-ம் தேதி ‘தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தை தடை செய்தல், ஒழுங்குபடுத்துதல் அவசர சட்டம்’, ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுடன் பிறப்பிக்கப்பட்டது.