சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சம் செலவில் வி.பி.சிங்குக்கு நிறுவப்பட்ட சிலையை இன்று (நவ.27) காலை 11.00 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
சிலை திறப்பு விழாவில் வி.பி.சிங்கின் மனைவி சீதாகுமாரி, மகன்கள் அஜயா சிங், அபய் சிங் மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள்,எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக இன்று காலை தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், “திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையான சமூகநீதியை, இந்தியாவின் தவிர்க்க முடியாத அரசியல் கொள்கையாக மாற்றிக் காட்டியவர் வி.பி.சிங். அவருடைய இந்தச் சிறப்பான முடிவின் பின்னணியில் ஊக்கசக்தியாக விளங்கியவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள். சமூகநீதிக் காவலர் எனப் பெயர் பெற்ற வி.பி.சிங் ஆட்சியை, சமூக அநீதியை காலம் காலமாக ஆதரித்தும் – நிலைநாட்டியும் வரும் பா.ஜ.க. கவிழ்த்தது. ஓராண்டு கூட முழுமையாகப் பதவியில் இல்லாவிட்டாலும் இந்தியாவின் மிகச் சிறந்த பிரதமர்களின் வரிசையிலே நிலையான இடத்தைப் பிடித்திருப்பவர் வி.பி.சிங்.
அத்தகைய மாமனிதருக்கு இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாடு அரசின் சார்பில் திருவுருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. அன்று இளைஞரணிச் செயலாளரகவும் இன்று கழகத் தலைவராகவும் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் உள்ள உங்களில் ஒருவனான நான் அதனைத் திறந்து வைக்கின்ற நல்வாய்ப்பினைப் பெற்றுள்ளேன்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டிருந்தார்.