மக்களவையில் இன்று (டிச.13) பூஜ்ஜிய நேர நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தபோது பார்வையாளர்கள் அரங்கில் இருந்த இருவர் அத்துமீறி இருக்கையில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் கைகளில் புகை கக்கும் கருவி வைத்திருந்ததும், அதிலிருந்து மஞ்சள் நிறத்தில் புகை வெளியேறியதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. உடனடியாக, அந்த இருவரும் பிடிக்கப்பட்டு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறிய அந்த நபர்களைப் பிடிக்க எம்.பி.க்களும் உதவினர். அவர்கள் இருவரையும் அவைப் பாதுகாவலர்கள் மடக்கிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இதற்கிடையே, நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் பெண் ஒருவர் கோஷம் எழுப்பியபடி போலீஸார் அழைத்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகியிருந்தது. இதற்கிடையில், நாடாளுமன்ற வளாகத்தில் காவல் துறையினர், உளவுத் துறையினர், பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் தற்போது அவர் மீண்டும் கூடி அலுவல்கள் தொடங்கியது. அதன்பின், அத்துமீறி நுழைந்தவர்களில் ஒருவர், மைசூரு தொகுதி பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா பரிந்துரையில் வந்துள்ளார் என்று வெளியான தகவலை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சரமாரியாகக் கேள்வி எழுப்பிய நிலையில், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவைக்குள் பார்வையாளர்கள் அரங்கில் இருந்து இருக்கை மீது குதித்த நபரிடம் இருந்து தாம் தான் புகை கக்கிய கேனைப் பறித்து வெளியே எறிந்ததாகக் கூறியுள்ளார் காங்கிரஸ் எம்.பி. குர்ஜீத் சிங் அஜ்லா. இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “திடீரென மக்களவைக்குள் பார்வையாளர்கள் அரங்கில் இருந்து இருவர் குதித்தனர். அதில் ஒருவர் கையில் கேன் இருந்தது. அதிலிருந்து மஞ்சள் நிறத்தில் புகை வந்தது. நான் அந்த நபரிடமிருந்து கேனைப் பறித்து தூக்கி வெளியே எறிந்தேன். இன்று நடந்தது மிகப் பெரிய பாதுகாப்பு மீறல்” என்றார்.
சரியாக 1 மணியளவில் பூஜ்ஜிய நேர நிகழ்வின்போது இந்தச் சம்பவம் நடந்தது. அவைக்குள் குதித்தவர்கள் ‘சர்வாதிகாரத்தை அனுமதிக்கமாட்டோம்’ என்று கோஷமிட்டுள்ளனர். இதேபோல் அவைக்கு வெளியே கைதான இரு பெண்களும் ’பாரத் மாதா கி ஜே’ என்று முழக்கமிட்டனர். அந்தப் பெண்களில் ஒருவர் தன் பெயர் நீலம் என்று தெரிவித்ததாகவும், மணிப்பூர் வன்முறையைக் கண்டித்து போராட்டம் நடத்தியதாக காவல் துறையிடம் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த டெல்லி காவல் ஆணையர், பாதுகாப்பு மீறல் எப்படி சாத்தியமானது என்பது தொடர்பாக விரிவான விசாரணையில் ஈடுபட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவையில் பேசும்போது, “பூஜ்ஜிய நேரத்தில் நடந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. டெல்லி போலீசாருக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. முதற்கட்ட விசாரணையில் அது வெறும் புகை என தெரியவந்துள்ளது. எனவே, புகை குறித்து அச்சப்படத் தேவையில்லை” என கூறினார்.
இதையடுத்து, வழக்கமான நாடாளுமன்ற அலுவலைத் தொடர அவர் முயன்றார். அப்போது குறிக்கிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் இது குறித்து அவையில் விவாதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு பதில் அளித்த சபாநாயகர், “விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டத்துக்குப் புறம்பாக அத்துமீறிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்துக்கு வெளியே இருந்த இருவரும்கூட கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று கூறினார்.
“நான்தான் பறிந்து எறிந்தேன்” – மக்களவைக்குள் பார்வையாளர்கள் அரங்கில் இருந்து இருக்கை மீது குதித்த நபரிடம் இருந்து தாம் தான் புகை கக்கிய கேனைப் பறித்து வெளியே எறிந்ததாகக் கூறியுள்ளார் காங்கிரஸ் எம்.பி. குர்ஜீத் சிங் அஜ்லா. இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “திடீரென மக்களவைக்குள் பார்வையாளர்கள் அரங்கில் இருந்து இருவர் குதித்தனர். அதில் ஒருவர் கையில் கேன் இருந்தது. அதிலிருந்து மஞ்சள் நிறத்தில் புகை வந்தது. நான் அந்த நபரிடமிருந்து கேனைப் பறித்து தூக்கி வெளியே எறிந்தேன். இன்று நடந்தது மிகப் பெரிய பாதுகாப்பு மீறல்” என்றார்.
கைதானவர்கள் சொன்னது என்ன? – சரியாக 1 மணியளவில் பூஜ்ஜிய நேர நிகழ்வின்போது இந்தச் சம்பவம் நடந்தது. அவைக்குள் குதித்தவர்கள் ‘சர்வாதிகாரத்தை அனுமதிக்கமாட்டோம்’ என்று கோஷமிட்டுள்ளனர். இதேபோல் அவைக்கு வெளியே கைதான இரு பெண்களும் ’பாரத் மாதா கி ஜே’ என்று முழக்கமிட்டனர். அந்தப் பெண்களில் ஒருவர் தன் பெயர் நீலம் என்று தெரிவித்ததாகவும், மணிப்பூர் வன்முறையைக் கண்டித்து போராட்டம் நடத்தியதாக காவல் துறையிடம் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த டெல்லி காவல் ஆணையர், பாதுகாப்பு மீறல் எப்படி சாத்தியமானது என்பது தொடர்பாக விரிவான விசாரணையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதை அடுத்து காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை பேச அனுமதித்தார். அப்போது பேசிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “கடந்த 2001-ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டுள்ளது. அந்தத் தாக்குதலில் உயிரிழந்த தியாகிகளுக்கான நினைவிடத்தில் நாங்கள் மலரஞ்சலி செலுத்தினோம். இந்தச் சூழலில், நாடாளுமன்றத்துக்கு உள்ளேயே இன்று தாக்குதல் நிகழ்ந்துள்ளது. 2001-ல் நடந்ததுபோன்ற தாக்குதல் அல்ல இது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
அதேநேரத்தில், போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதும், உயர்மட்ட பாதுகாப்பு தோல்வி அடைந்துவிட்டது என்பதும் தற்போது நிரூபணமாகி இருக்கிறது. அனைத்து எம்பிக்களும் துணிச்சலாக செயல்பட்டு அந்த இருவரையும் பிடித்துவிட்டனர். ஆனால், இவ்வளவு நடந்து கொண்டிருக்கும்போது பாதுகாப்பு அதிகாரிகள் எங்கே போனார்கள்?” என கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) எம்பி பிரியங்கா சதுர்வேதி, “நாடாளுமன்றத்தின் மீது இன்று தாக்குதல் நடத்தப்படும் என்று சீக்கிய பிரிவினைவாத தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுன் ஏற்கெனவே எச்சரித்திருந்தார். இது குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று நான் கேள்வி எழுப்பினேன். ஆனால், அந்தக் கேள்வி புறக்கணிக்கப்பட்டது. இது மிகப் பெரிய பாதுகாப்பு தோல்வி” என குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துமீறலில் ஈடுபட்ட இருவருக்கும் பரிந்துரை கடிதம் அளித்த மக்களவை உறுப்பினர் யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. மக்களவையில் அத்துமீறி நுழைந்தவர்களில் ஒருவர், மைசூரு மக்களவையின் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா பரிந்துரையில் வந்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இவர்களின் பெயர் சஹார் சர்மா, மனோரஞ்சன் என்று கண்டறியப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் மக்களவைக்குள் பார்வையாளராக உள்ளே செல்வதற்கு குறிப்பிட்ட எம்பியின் பரிந்துரை கடிதம் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தக் கடிதத்தின் அடிப்படையிலேயே நுழைவுச் சீட்டு வழங்கப்படும். அவர்களுக்கு பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளப்படும் மேலும் அடையாள அட்டைகளை சரிபார்க்கப்படும் அதன்பிறகுதான் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த அத்துமீறலில் ஈடுபட்ட இருவருக்கும் பரிந்துரை கடிதம் அளித்த மக்களவை உறுப்பினர் யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்நிலையில், சஹார் சர்மா என்பவருக்கு மைசூரு மக்களவையின் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா பரிந்துரை கடிதம் வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், ஒருவருக்கு பரிந்துரை கடிதம் வழங்கிய மக்களவை உறுப்பினர் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. இவர் மைசூரைச் சேர்ந்த மனோரஞ்சன் என்றும், இவர் ஒரு பொறியாளர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார். போலீஸார் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
2014ல் அரசியலில் காலடி எடுத்து வைத்த அவர், விரைவிலே பாஜக இளைஞர் பிரிவு தலைவராக ஆனார். 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மைசூர் தொகுதியில் போட்டியிட்டு, தனது போட்டி வேட்பாளரை விட 32,000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். இந்திய பத்திரிகை கவுன்சிலின் உறுப்பினராகவும் உள்ளார். 2007-ல் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதினார். இவரது மனைவி பெயர் அர்பிதா. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. சிம்ஹாவின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.1,87,23,762 என்று ஓர் அறிக்கை கூறுகிறது.
நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஆர்எல்பி எம்பி ஹனுமான் பெனிவால், “இது மிகப் பெரிய பாதுகாப்பு தோல்வி. இது குறித்து முழுமையாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு காரணமாக இருந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தினார்.
திமுக எம்.பி. கனிமொழி: “மக்களவையில் வழக்கமான அலுவல்கள் நடந்து கொண்டிருந்தன. திடீரென இருவர் பார்வையாளர் அரங்கிலிருந்து எம்.பி.க்கள் இருக்கைகள் மீது குதித்தனர். அவர்கள் கையில் புகை உமிழும் கருவி இருந்தது. அது என்னவென்று உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், அதிலிருந்து வந்த புகை சாதாரணமாக இல்லை. நெடியுடன் கூடியதாக இருந்தது. இது மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் சம்பவம். ஒருவேளை மக்களவையில் பிரதமர், உறுப்பினர்கள் அனைவரும் இருக்கும்போது இவ்வாறாக நிகழ்ந்திருந்தால் என்னவாகும்? அது விஷப் புகையைக் கக்கியிருந்தாலோ அல்லது வேறு எதும் வெடிகுண்டாகவே இருந்திருந்தால் என்னவாகும்? எம்.பி,க்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்” என்றார். கனிமொழி எம்.பி.
காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி: “நாடாளுமன்றத்தின் பார்வையாளர் அரங்கில் ஒருவர் அமர்கிறார் என்றால், அது யாரேனும் எம்பியின் பரிந்துரைக் கடிதம் இருந்தாலே சாத்தியப்படும். கடிதம் இருந்தால் மட்டும் போதாது பலகட்ட பாதுகாப்பு கெடுபிடிகளைத் தாண்டியே வளாகத்துக்குள் வர இயலும். ஆனால் அத்தனையும் தாண்டி இப்படியொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதுவும் நாடாளுமன்றம் தாக்கப்பட்ட நாளிலேயே நடந்துள்ளது. இது எம்.பி.க்கள் பாதுகாப்பில் மிகப் பெரிய மீறல்” என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்தார்.
திமுக எம்.பி. திருச்சி சிவா: “நாடாளுமன்றத்தில் இன்று நடந்த சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். பலகட்ட சோதனைக்குப் பின்னர் புகை கக்கும் கன்டெய்னருடன் ஒருவர் எப்படி நுழைய முடியும்? இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும். உறுப்பினர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று திமுக எம்.பி திருச்சி சிவா கூறினார்.
காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்: “பார்வையாளராக வருபவர் நிச்சயமாக எம்.பி,யின் பரிந்துரைக் கடிதத்துடனேயே வந்திருக்க வேண்டும். அதனால் கோப்புகளில் இருந்து அந்த இருவர் யார் என்பதையும், அவர்களைப் பரிந்துரைத்தது யார் என்பதையும் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். இந்த நபர்கள் ஏன் இப்படிச் செய்தார்கள் என்பதெல்லாம் விசாரணையில் தெரியவரும். இந்தச் சம்பவம் கண்டனத்துக்குரியது” என்றார் காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்.
மிகப் பெரிய பாதுகாப்பு மீறல்: அவைக்கு வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் அளித்தப் பேட்டியில், “அரங்கில் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. திடீரென பார்வையாளர்கள் அரங்கில் இருந்து இருவர் குதித்தனர். ஒருவர் உறுப்பினர்கள் இருக்கையில் குதித்தார். இன்னொருவர் சபாநாயகர் நோக்கி ஓடினார். இருவர் கைகளிலும் வண்ணப் புகை உமிழும் கருவி இருந்தது. அது விஷப் புகையாக இருக்கலாம், கண்ணீர் புகையாக இருக்கலாம், ஏன் புகை வெடிகுண்டாகவும் இருக்கலாம். நாடாளுமன்றத்தில் மிகப் பெரிய பாதுகாப்பு மீறல் நடந்துள்ளது” என்றார்.
அமித் ஷா பதிலளிக்க கார்கே வலியுறுத்தல்: இந்த சம்பவம் தொடர்பாக மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. பாஜக எம்.பி பியூஷ் கோயல் இது குறித்து கூறும்போது, “மாநிலங்களவை மூத்தவர்கள் சபை என்று நான் நினைக்கிறேன். இதையெல்லாம் விட இந்த நாடு பலமானது என்ற செய்தியை நாம் தெரிவிக்க வேண்டும். எனவே, சபை நடவடிக்கைகள் தொடர வேண்டும். காங்கிரஸ் இதை அரசியலாக்குகிறது என நினைக்கிறேன். இது நாட்டுக்கு நல்ல செய்தியல்ல” எனத் தெரிவித்துள்ளார்.
பின்னர் இதுகுறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இருவர் மக்களவையில் அத்துமீறி நுழைந்தது மிகவும் தீவிரமான பிரச்சினை. இது வெறும் மக்களவை மற்றும் மாநிலங்களவை பற்றிய கேள்வி அல்ல. நாடாளுமன்றத்துக்குள் போடப்பட்டிருக்கும் இவ்வளவு பாதுகாப்பையும் மீறி எப்படி இருவர் உள்ளே நுழைந்து பாதுகாப்பு மீறலை ஏற்படுத்த முடிந்தது என்பது தொடர்பானது. இந்தச் சம்பவத்தை அரசு தீவிரமாக எடுத்துக் கொள்ளும் என்று நம்புகிறோம். மேலும் இந்த தவறு குறித்து விரிவாக விசாரணை நடத்த வேண்டும் என்று கோருகிறோம். அவையை ஒத்திவைக்க கேட்டுக்கொள்கிறோம். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதுகுறித்து இரு அவைகளிலும் விளக்கம் தர வேண்டும்” என்றார்.
அப்போது, அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கூறும்போது, “இதுபற்றி அறிந்தவுடன், பாதுகாப்பு இயக்குநருக்கு போன் செய்தேன். அவரிடம் அப்டேட் கொடுக்கச் சொல்லி இருக்கிறேன். அந்த நேரத்தில் அவர் எனக்கு கொடுத்த அப்டேட்டை, சபையில் பகிர்ந்து கொண்டேன். இது கவலைக்குரிய விஷயம்தான், ஆனால் விவரங்களுக்கு காத்திருப்போம், பின்னர்தான் இது குறித்து விவாதிக்க முடியும் என்றார்” என்றார்.
முன்னதாக, நாடாளுமன்றம் தாக்கப்பட்டதன் 21-வது ஆண்டு நினைவு நாளான இன்று (புதன்கிழமை) அந்தத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர், மாநிலங்களவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட எம்.பி.கள் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2001-ம் ஆண்டு இதே நாளில், நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்த 5 பயங்கரவாதிகள், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்தவர்களுக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 9 பேர் உயிரிழந்தனர். எனினும், பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் பயங்கரவாதிகள் 5 பேரும் கொல்லப்பட்டனர். இரு தரப்புக்கும் இடையே சுமார் 30 நிமிடங்கள் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்தச் சம்பவத்தின்போது நாடாளுமன்றம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் நாடாளுமன்றத்தில் இருந்தனர். பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டதை அடுத்து, நிகழ இருந்த பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த 9 பேருக்கும் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவை தலைவருமான ஜக்தீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சோனியா காந்தி உள்பட பலரும் உயிர்த் தியாகம் செய்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி, மாநிலங்களவைத் தலைவர், மக்களவை சபாநாயருடன் இணைந்து தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து பேசினார். இந்நிலையில், அதேநாளில் இன்று மக்களவையில் பாதுகாப்பு மீறல் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.