கலைஞரின் கனவு திட்டமான தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு நதி நீர் இணைப்பு திட்ட சோதணை ஓட்டம் மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
”2006 ஆண்டு கலைஞர் ஆட்சியில் இருந்தபோது ஆண்டுதோறும் தாமிரபரணி ஆற்றில் இருந்து சுமார் 20 முதல் 50 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து வறண்ட பகுதியான நாங்குநேரி, ராதாபுரம், திசையன்விளை, உடன்குடி திருச்செந்தூர் ஆகிய பகுதிகளுக்கு திருப்பி விட தாமிரபரணி ஆறு , கருமேனியாறு மற்றும் நம்பியாறு ஆகியவற்றை இணைத்து நதிநீர் திட்டம் உருவாக்கப்பட்டது.
தாமிரபரணி உபரி நீரை நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் வறண்ட பகுதிகளுக்கு கொண்டு செல்ல சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது. நதிநீர் இணைப்பு திட்டத்தால் 17,002 ஹெக்டேர் புதிய பாசனப் பரப்பு உள்பட 23,040 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
அதிகமாக மழை பெய்து வருவதால் அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளது. தாமிரபரணியில் அதிகமாக வெள்ளம் வருவதால் தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு நதிநீர் இணைப்பு திட்ட கால்வாயில் இன்று மாலை 4 மணிக்கு அம்பை சாலை வெள்ளாங்குழியில் முதலமைச்சரின் உத்தரவுக்கிணங்க வெள்ளோட்டம் பார்க்கும் வகையில் மழை வெள்ள உபரி நீரினை சட்டமன்ற பேரவை தலைவர் மு. அப்பாவு, மாவட்ட ஆட்சித் தலைவர் ,நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார். தற்போது 3400 கனஅடிநீர் திறக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.