தேசிய தொழில்நுட்ப தினம் – 2024 :காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வகம் (CECRI)யில் கொண்டாட்டம்…

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள ,சி.எஸ்.ஐ.ஆர் – மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தில் (சிக்ரி) தேசிய தொழில்நுட்ப தினம் மே 27, 2024 அன்று மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் இந்திய ரேர் எர்த் லிமிடெட் (Indian Rare Earths Ltd.,), மும்பை-யின் தலைமை இயக்குனர் முனைவர் தீபேந்திர சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தேசிய தொழில்நுட்ப தின உரை நிகழ்த்தினார்.

இந் நிகழ்வில் முன்னதாக மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தின் இயக்குனர் முனைவர் கே. இரமேஷா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், தேசிய தொழில்நுட்ப தினம் முதன் முதலில் மே 11, 1998 ஆம் ஆண்டு பொக்ரான் அணு சோதனைகள் நிகழ்த்தியதை முன்னிட்டு கொண்டாடப்படுவதை நினைவுகூர்ந்தார்.

மேலும் இந்திய தேசியக்கட்டமைப்பில் சி.எஸ்.ஐ.ஆர் மற்றும் சிக்ரி யின் தொழில்நுட்பங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. அதில் குறிப்பாக அமுல் ஸ்பிரே, ஸ்வராஜ் டிராக்டர், உயிரி எரிபொருள், மின்-டிராக்டர் மற்றும் பிற தொழில்நுட்பங்கள் சமூகத்தில் பெரும்பங்கு வகித்துள்ளது.


அதன் வரிசையில், சிக்ரி யின் தொழில்நுட்பங்களில் குறிப்பாக மின்வேதியியல் அரிமானத்தடுப்பு முறைகள், பாம்பன் பாலம் அரிமானப்பாதுகாப்பு, மின்முலாம் பூச்சு, உயிரி எரிபொருள் மின்கலம், NPK உணரி (NPK Sensor) மற்றும் சுற்றுச்சூழல் தொழில்நுட்பங்களான கரியமில வாயு கவர்தல் (Carbon capture), நீர்ப்பகுப்பாய்வு மற்றும் நீர் சுத்திகரிப்பு போன்றவைகள் குறிப்பிடத்தக்கதுஎன்று கூறினார்.

மேலும் சிக்ரி மனிதவள மேம்பாட்டுத்துறையில் குறிப்பாக பி.டெக். கல்வித்திட்டங்கள், ஏ.சி.எஸ்.ஐ.ஆர் (முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்புகள்), திறன் மேம்பாட்டுப்பயிற்சி வகுப்புகள், ஜிக்யாஸா (JIGYASA)- பள்ளி மாணவர்களுக்கான பயிற்சித்திட்டங்கள் போன்றவற்றின் பங்களிப்புகளை பெருமையுடன் கூறினார்.

சிறப்பு விருந்தினர் முனைவர் தீபேந்திர சிங் அவர்கள் “ஆற்றல் மாற்ற பொருட்கள் மற்றும் அரிய தனிமங்கள்” (Energy Transition Materials and Rare Earths) என்ற தலைப்பில் தேசிய தொழில்நுட்ப தின உரையாற்றினார்.


அவர் உரையில், நெருக்கடியான பொருட்கள் (Critical materials) மிகவும் அரிதாகவும் மற்றும் பற்றாக்குறையான பொருட்கள் மதிப்புக்கூட்டுத் தொழில்நுட்பச் சங்கிலியில் பெரும் அங்கம் வகிக்கின்றன எனக்கூறினார்.மேலும், லித்தியம், காப்பர், அலுமினியம், கோபால்ட்,நிக்கல் மற்றும் இதர மின்கல உலோகங்களின் 2030 மற்றும் 2040 எதிர்காலத் தேவைகளின் கணிப்பை விளக்கிக்கூறினார்.

எதிர்வரும் 10 லிருந்து 15-ந்து ஆண்டுகளில் நெருக்கடியாகக்கூடும் பொருட்களைக் கண்டறிந்து அதற்கான தீர்வுகளைக்கண்டறிய இன்றிலிருந்து துவங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.அரிதான பொருட்களைத் தனிமைப்படுத்துதல், பிரித்தெடுத்தல் மற்றும் f-எலக்ட்ரான் பற்றிய புரிதல் ஆகியவைகள் சவால் மிகுந்தவைகளாக இருப்பதாககூறினார். அரிதான பொருட்கள், ஆற்றல் பாதுகாப்பு மற்றும் தூய ஆற்றல் மாறுபாட்டுக்கானப் பொருட்களாக பெரும் பங்கு வகிக்கிறது என்பதை எடுத்துரைத்தார்.

மேலும் தனிமங்களான லித்தியம், கோபால்ட், நிக்கல், காப்பர் மற்றும் அரிய தனிமங்கள் ஆகியவைகளின் தேவைகள் தொடர்ந்து அதிகரித்துவருவதாக தெரிவித்தார். இந்திய மற்றும் உலக அளவில் அரிய தனிமங்களின் இருப்பு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் குறிப்பாக காற்றாலை மின் உற்பத்தி, மின் வாகனம், மற்றும் மின் விசைகளில் அதன் பயன்பாடுகள் குறித்து விளக்கிக்கூறினார்.

மேலும் தனது இந்திய ரேர் எர்த் லிமிடெட் நிறுவனத்தின் பல்வேறு பணிகளான இந்தியாவில் சுரங்கம் மற்றும் ஊட்ட இருப்பு (feedstock) வளங்கள் மற்றும் பல்வேறு பொருட்களைப் பிரித்தெடுக்கும் முறைகளை விளக்கிக்கூறினார்.
.
விழாவில் முனைவர் பழனியப்பன், மூத்த முதன்மை விஞ்ஞானி அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.

முன்னதாக சிறப்பு விருந்தினர் முனைவர் தீபேந்திர சிங் சிக்ரி வளாகத்தில் மரம் நட்டு வைத்து வளாகத்தில் உள்ள மூலிகை தோட்டத்தையும் பார்வையிட்டார். பின் ஆய்வகங்களுக்குச் சென்று அங்கு நடைபெற்று வரம் ஆய்வகப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

செய்தி& படங்கள்
சிங்தேவ்