கல்லல் அருகே வெற்றியூரில் குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு : சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட கல்லல் அருகே உள்ள வெற்றியூர் கிராமத்தில் தனிநபர் மண் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜீத்திடம் வெற்றியூர் கிராமபொதுமக்கள் மனு அளித்தனர்.
இந்த மனு குறித்து வெற்றியூர் ஆற்றுக்கால் நீர்பாசன சங்க தலைவர் கா. திருநாவுக்கரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது.

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள வெற்றியூர் கிராமத்தில் தனிநபர் ஒருவர் மண் குவாரி அமைப்பதற்கு கனிமவள நிறுவனத்திற்கு விண்ணப்பித்துள்ள நிலையில் ஏற்கனவே எங்கள் கிராமத்தில் 3 குவாரிகள் அமைக்கப்பட்டு உள்ள நிலையில் இந்த பகுதியில் உள்ள ஏரி,கண்மாய்களுக்கு நீர் வரத்து குறைந்து வருவதால்விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இதன் அருகே மற்றொரு குவாரியும் அமைக்கப்பட வுள்ளதால் இந்த பகுதியில் நீர் ஆதாரமாக உள்ள மேல ஊரணி, அம்பலகார ஊராணி மற்றும் நெடுங்குளம் கண்மாய்களுக்கு நீர் வரத்து முற்றிலும் பாதிக்கப்படும்.

ஏற்கனவே இதற்கு முன்னதாக குவாரி அமைக்க ஏற்பாடு செய்ததை தடை ஆணை பெற்று ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது புதிதாக இந்தக் குவாரி அமையும் பட்சத்தில் சுமார் 300 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யமுடியாமல் இருக்கும் நிலை ஏற்படுவதால் இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும்.

எனவே வெற்றியூர் கிராம மக்களின் முக்கிய தேவையாக உள்ள குடிநீர் ஆதாரம் மற்றும் நிலத்தடி நீர் மட்டம்,விவசாய நிலங்களில் பாதிப்பு, கண்மாய் மற்றும் குளங்களின் நீர் வரத்து பாதிப்பு ஆகியவை ஏற்படாமல் இருக்கும் வகையில் இந்த புதிய குவாரிக்கு இனுமதி வழங்காமால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளதாக கூறினார்.