தொடரும் வங்கதேச மாணவர்களுக்கிடையேயான வன்முறை: 105 பேர் உயிரிழப்பு ; ஊரடங்கு அமல் …

அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு சீர்திருத்தம் தொடர்பான மாணவர்கள் போராட்டத்தால் ஏற்பட்ட வன்முறை காரணமாக 105 பேர் உயிரிழந்துள்ளனர், 1,500-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். போராட்டம் தீவிரமடைந்த காரணத்தால் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் நாட்டில் அமைதியை நிலைநாட்ட ராணுவத்தை அனுப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.

போராட்டத்தால் ஏற்பட்ட வன்முறையைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீஸார் கண்ணீர் புகைகுண்டு மற்றும் ரப்பர் குண்டை பயன்படுத்தினர். டாக்காவில் வெள்ளிக்கிழமை அனைத்து கூட்டங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டது. இந்த பின்னணியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹரியாணாவைச் சேர்ந்த மாணவர் ஆமீர் கூறுகையில், நான் சிட்டகாங் சிட்டி மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் பயில்கிறேன். இங்கே நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இணைய சேவை இல்லை. குடும்பத்தைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. அதனால் நாங்கள் தாயகம் திரும்புகிறோம். விமான டிக்கெட்டுகள் இல்லை. எப்படியாவது இந்த மோசமான நிலையில் இருந்து தப்பிக்க அகர்தலா வழியாக சாலை மார்க்கமாக பயணப்படுகிறோம்” என்றார்.

இடஒதுக்கீட்டுக்கு எதிராக போராட்டம்: கடந்த 1971-ம் ஆண்டு நாட்டின் விடுதலைக்கான போராட்டத்தில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினர் மற்றும் சில குறிப்பிட்ட குழுக்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளை பாதிக்கும் அதிகமான இடஒதுக்கீடு வழங்கப்படுவதை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த இடஒதுக்கீடு முறை பாரபட்சமான முறையில் வங்கதேசத்தின் சுதந்திர போராட்டத்தை வழிநடத்திய அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆதரவாளர்களுக்கு ஆதரவாக உள்ளது என்று மாணவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் வேலைவாய்ப்பு தகுதியின் அடைப்படையில் வழங்கப்பட வேண்டும் என்று மாணவர்கள் வாதிடுகின்றனர்.

என்றாலும் இடஒதுக்கீடு முறைக்கு ஆதரவாக பேசியிருக்கும் பிரதமர் ஷேக் ஹசீனா, அரசியல் சார்புகளைப் பொருட்படுத்தாமல், படைவீரர்களின் பங்களிப்புக்கு அதிக மரியாதை தரப்படவேண்டும் என்று தெரிவித்தார்.

மோசமடைந்த நிலைமை: இந்தநிலையில், போராட்டக்காரர்கள் வியாழக்கிழமை மாநிலத்தின் அரசு தொலைக்காட்சி நிலையத்துக்கு தீவைத்ததைத் தொடர்ந்து போராட்டம் மிகவும் மோசமடைந்தது. அதிகாரிகள் டாக்காவிற்குள் வந்து செல்லும் மெட்ரோ ரயில் சேவையை முடக்கினர். மொபைல் இணைய சேவையை தடை செய் அரசு உத்தரவிட்டது. பள்ளிகள், கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை, வங்கதேசத்தின் பல்வேறு செய்தித்தாள்களின் இணையதளம் பிரச்சினையைச் சந்தித்தன. அவர்களால் செய்திகள் பதிவேற்றமுடியவில்லை. பொழுதுபோக்கு தொலைக்காட்சிகள் இயல்பாக ஒளிபரப்பான நிலையில் செய்தி மற்றும் அரசுத் தொலைக்காட்சியான பிடிவி ஒளிபரப்பு தடைசெய்யப்பட்டன.

இணையசேவை முடக்கம்: வங்கதேசத்தின் மத்திய வங்கி, பிரதமர் அலுவலகம், போலீஸ் அலுவலக இணையதளங்கள் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டன. அந்த இணையதளங்களில் ஆப்பரேஷன் ஹண்ட் டவுன், மாணவர்களைக் கொல்வதை நிறுத்து, என்றும் இனி இது போராட்டம் இல்லை. இப்போது இது போர் என்ற எழுத்துக்கள் அந்த இணையதளங்களில் தெரிந்தன.

சிறைக்கு தீவைப்பு: இந்தநிலையில்,மாணவ போராட்டாக்காரர்கள் நர்சிங்டி மாவட்டத்தில் சிறைச்சாலையை முற்றுகையிட்டு அதற்கு தீவைத்தனர். அதற்கு முன்பாக சிறைக்கைதிகளை விடுவித்தனர். இதுகுறித்து “எத்தனை சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர் என்று எனக்குத் தொரியாது ஆனால் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருக்கும்” என்று ஒரு போலீஸ்காரர் தெரிவித்தார்.

இந்தியாவின் நிலைப்பாடு: இதனிடையே, வன்முறை நிகழ்ந்து வரும் வங்கதேசத்தில் இருந்து 125 மாணவர்கள் உட்பட 245 பேர் இந்தியா திரும்புவதற்கு வழிவகுக்கப்பட்டிருப்பாதாக வெள்ளிக்கிழமை வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது. மேலும் வன்முறை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. ஆனால் அங்கு வசிக்கும் 15,000க்கும் அதிகமான இந்தியர்கள் பாதுகாப்பாகவும், நலமாகவும் இருப்பதாக தெரிவித்தது. வங்கதேச வன்முறை குறித்த கேள்விக்கு பதில் அளித்த வெளியுறவுத்துறை அமைச்சக செயலாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “இதை வங்கதேசத்தின் உள்நாட்டு விவகாரமாக பார்க்கிறோம்” என்றார்.

முழுகொள்ளவை எட்டும் ஆழியாறு அணை: கரையோர கிராமங்களுக்கு முதல் கட்ட எச்சரிக்கை..

காரைக்குடி வழியாக கொல்கத்தா( ஷாலிமார்)To நெல்லை புதிய இரயில் : காரைக்குடியில் உற்சாக வரவேற்பு..

Recent Posts