ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடக்கிறது..

ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் கரையைக் கடக்கத் தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரவு 7 மணி நிலவரப்படி, புதுச்சேரிக்கு கிழக்கு – வடகிழக்கே 60 கி.மீ தொலைவில் உள்ள ஃபெஞ்சல் புயலின் வேகம் மணிக்கு 7 கி.மீ ஆக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் கரையைக் கடந்து முடிக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தென்மேற்கு வங்கக் கடலில் “ஃபெஞ்சல் புயல்” கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கிமீ வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து இன்று பகல் 2.30 மணியளவில் அதே பகுதியில் மையம் கொண்டிருந்தது. இது மாமல்லபுரத்துக்கு தென்கிழக்கே சுமார் 50 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு-வடகிழக்கே 80 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கு – தென்கிழக்கே 90 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது இன்று மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேகத்திலும் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடிய புயலாக கிட்டத்தட்ட மேற்கு நோக்கி நகர்ந்து, வட தமிழகம் – புதுச்சேரி கடற்கரையை ஒட்டிய காரைக்கால் மற்றும் மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரிக்கு அருகில் கடக்க வாய்ப்புள்ளது. புயல் கடற்கரையை நெருங்கும்போது அதன் நகரும் வேகம் குறையும். புயல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்திருந்தது. இதனிடையே, வடதமிழக கடலோர பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் பலத்த காற்றுடன் கனமழை விட்டுவிட்டு பெய்து வருகிறது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக, இன்று (நவ.30) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஓரிரு இடங்களில் அதி கன மழை பெய்யக்கூடும் என்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், நாளை (டிச.1) விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் அதி கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இன்று (நவ.30) ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை (டிச.1) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தரைக்காற்று: இன்று (நவ.30) வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும்.மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை டிச.1-ம் தேதி, வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த சூறாவளிக்காற்று வீசக்கூடும் – நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஃபெஞ்சல் புயல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே இன்று இரவு கரையைக் கடக்கும்:வானிலை மையம்…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா : கொடியேற்றத்துடன் தொடங்கியது…

Recent Posts