
இன்று தொடங்கிய ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட்டுகளில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி. விராட் கோலி மற்றும் பிலிப் சால்ட் இணைந்து பெங்களூரு அணிக்கு அதிரடி தொடக்கம் கொடுத்தனர். அவர்களது பேட்டிங் கூட்டணியால் கொல்கத்தா பவுலர்களால் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்த முடியாமல் போனது.
175 ரன்கள் என்ற இலக்கை ஆர்சிபி இந்தப் போட்டியில் விரட்டியது. முதல் விக்கெட்டுக்கு 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது ஆர்சிபி. சால்ட், 31 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வருண் சக்கரவர்த்தி அவரது விக்கெட்டை கைப்பற்றினார். 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். இம்பேக்ட் வீரராக பேட் செய்த படிக்கல் 10 ரன்களில் வெளியேறினார்.இருப்பினும் கோலி அதிரடியாக மறுமுனையில் ஆடினார். 36 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து இறுதிவரை அவர் ஆட்டமிழக்காமல் இருந்தார். 4 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களை அவர் ஸ்கோர் செய்தார். கேப்டன் ரஜத் பட்டிதார் 16 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். லிவிங்ஸ்டன், 5 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார். 16.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து ஆர்சிபி வெற்றி பெற்றது.முன்னதாக, கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார், பந்து வீச முடிவு செய்தார்.
முதலில் பேட் செய்த கொல்கத்தா அணிக்காக டிகாக் மற்றும் சுனில் நரைன் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். ஹேசில்வுட் வீசிய முதல் ஓவரில் 4 ரன்களில் விக்கெட்டை இழந்தார் டிகாக். தொடர்ந்து கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே களத்துக்கு வந்தார். உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி வரும் அவர், அந்த ஆட்டத்தை அப்படியே ஐபிஎல் கிரிக்கெட்டிலும் தொடர்ந்தார்.
சுனில் நரைன் உடன் 103 ரன்களுக்கு பேட்டிங் கூட்டணி அமைத்தார். 25 பந்துகளில் அரை சதம் பதிவு செய்தார். சுனில் நரைன் 26 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ரஷிக் தர் சலாம் பந்தில் ஆட்டமிழந்தார். 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தது கொல்கத்தா. அடுத்த ஓவரில் 56 ரன்கள் எடுத்த நிலையில் ரஹானே வெளியேறினார்.
பின்னர் வந்த கொல்கத்தா அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங் மற்றும் ரஸ்ஸல் என மூவரும் சுழற்பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேறினர். மிடில் ஓவர்களில் மட்டும் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தது ஆர்சிபி.
இருப்பினும் கொல்கத்தா அணியின் இளம் வீரர் ரகுவன்ஷி பொறுப்புடன் பேட் செய்தார். 21 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரால் இன்னிங்ஸின் கடைசி கட்டம் வரை விளையாட முடியவில்லை. 19-வது ஓவரில் ரன் கொடுக்காமல் சிறப்பாக பந்து வீசிய யஷ் தயாள், அந்த ஓவரில் அவரது விக்கெட்டை வீழ்த்தினார்.
ஹேசில்வுட் கடைசி ஓவரை வீசினார். முதல் மூன்று பந்துகளில் ரன் ஏதும் கொல்கத்தா எடுக்கவில்லை. அடுத்த பந்தில் பவுண்டரி விளாசினார் ஹர்ஷித் ராணா. அந்த ஓவரின் 5-வது பந்தில் அவர் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே கொல்கத்தா எடுத்தது. 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்களை எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இன்னிங்ஸின் முதல் 10 ஓவர்களில் 107 ரன்கள் எடுத்த கொல்கத்தா அணியால் அடுத்த 10 ஓவர்களில் வெறும் 67 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆர்சிபி பவுலர்கள் சிறப்பாக பந்து வீசியது அதற்கு காரணமாக அமைந்தது.
க்ருனல் பாண்டியா 3, ஹேசில்வுட் 2 விக்கெட்டுகள் ஆர்சிபி தரப்பில் வீழ்த்தினர். சுயாஷ், ரஷிக், யஷ் தயாள் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்த ஆட்டத்தில் க்ருனல் பாண்டியா ஆட்ட நாயகன் விருதை வென்றார்.