மண்ணில் இன்பங்களை விற்றுச் சுதந்திரத்தின் மாண்பினை இழப்பாரோ! கண்ணிரண்டும்விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ?
அது ஒரு கவிதை வெளியீட்டு விழா.யாரென்றே தெரியாது.கவிஞர் முதனை கிராமத்தைச் சேர்ந்தவர் என்றவுடன் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.நெய்வேலிக்குப் பக்கமான கிராமம்.நெய்வேலி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்த நூற்றுக்கணக்கான கிராமங்களில் ஒன்று. தலைமை வகித்தவர் தானும் தென்னாற்காடு மாவட்டம் என்று சொல்லி கூட்டணி சேர்ந்து கொண்டார். வணிக வேளாண்மை ஆசிரியர் அரிதாசன் தூத்துக்குடி, நெல்லை மாவட்ட நிலங்களை டாடா ஏக்கர் இரண்டு லட்சம் கொடுத்து வாங்கிக் குவிப்பதையும், அங்குள்ள மக்கள் பல கிராமங்களை விற்பதையும் பற்றி கொதிப்புடன் கூறி, தமிழக மண் பறிபோவதை ஆத்திரத்துடன் குறிப்பிட்டு, எதிர்காலத்தில் தமிழக மண்ணே பறி போகப் போவதைத் தடுக்க வேண்டும் என எச்சரித்தார். அடுத்துப்பேசிய எழுத்தாளர் அமுதா பாலகிருஷ்ணன் வடவர்கள் நிலம் வாங்கிக் குவிப்பதையும், தமிழக இளைஞர்கள் இலவசங்களாலும், டாஸ்மாக் மதுவாலும் சீரழிவதையும், வேலை வாய்ப்புகளை வடமாநிலத்தவர்களுக்குப் பறிகொடுப்பதையும், ஒழுங்காக வேலை செய்யாமல் ஊதாரிகளாய் இருப்பதையும் குறிப்பிட்டு வருந்தி, கிராமப்புறங்களில் விவசாயத்திலும் வடமாநிலத்தவர் களைப் பயன்படுத்தும் கொடுமையைப் பற்றி வருந்தினார். மைய அரசும்,மாநில அரசும் விவசாயத்திற்கு மட்டுமே விவசாய நிலங்களைப் பயன்படுத்த வேண்டும் எனவும்,மேலும் குத்தகைக்கு விடலாமேயன்றி விற்கக் கூடாதெனவும் ஒரு சட்டம் இயற்றுவதன் வழி மண்ணுரிமையைப்பாதுகாக்க வேண்டும் எனவும் கூறினார்.ஒரு கவிதை வெளியீட்டு விழா தமிழகத்தின்மண் உரிமையைப்பேசும் கூட்டமாக மாறிய விந்தை நிகழ்ந்தது. பிரதமர் மோடி நாடு நாடாகச்சென்று அந்நிய முதலீடுகளை வருந்தி வருந்தி அழைக்கும் அவலத்தை ஆளும் எவரும் கண்டு கொள்வதில்லை. அந்நியர்களை நானூறு ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயரை உள்நுழைய விட்டு நாட்டையே பறி கொடுத்த கொடுமையான வரலாறு மீண்டும் திரும்புவதை உணராமல் இருக்கும் மைய, மாநில அரசுகளின் போக்கு விரைவில் மக்கள் மன்றத்தில் எதிரொலிப்பது உறுதி என்பதை இந்நிகழ்ச்சி சுட்டியது உளங்கொள்ளத் தக்கது.இது தொடர்பாக கடந்த நாற்பது நாட்களாக நீடித்து வரும் பதின்மூன்றாயிரம் ஒப்பந்தத் தொழிலாளர் போராட்டம், எந்த மைய அரசியல் கட்சிகளால் மட்டுமின்றி தமிழகத்தின் பெரும் கட்சிகளாலும் உணரப்படாமல் இருக்கும் கொடுமையை என்ன சொல்வது? இது வரை நடந்த எட்டு பேச்சு வார்த்தை களிலும் முக்கிய அதிகாரிகள் – மனித வளத்துறை இயக்குநர், சேர்மன் கலந்து கொள்ளாமலிருப்பதும் தமிழகத்தின் மின்பற்றாக்குறையை பெருமளவு ஈடுசெய்யும் நெய்வேலியின் முக்கியத்துவம் பற்றி தமிழக அரசு அக்கறை காட்டாமல், தொழிலாளர்துறை அதிகாரிகளை நம்பியே இருப்பதும் என்ன அவலம்?தமிழகத்தில் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி உள்ளதா என்பதே ஐயப்பாடாக உள்ளது. இதில் பொதுத்துறைக்குப் பொறுப்பான பா.ச.க.அமைச்சரே தமிழகத்தவர். ஆனால் அவரும் சேர்ந்து அறிக்கை விட்டுக்கொண்டிருப்பது, தமிழகத்தின் ஐம்பதாண்டு கடந்த ஒரு நிறுவனத்தின் மீதுள்ள அலட்சியத்தையே காட்டுகிறது. அவர் நேரே தலையிட்டு பிரச்சினையை உடன்பேசி முடிக்குமாறு என்.எல்.சி. க்கு உத்தரவிட முடியாதா என்ன? அன்றாடக் கூலித் தொழிலாளர்களைப் பற்றிய அரசுகளின்அலட்சியத்தையே இது சுட்டுகிறது.அது போலவே மைய,மாநில அரசுகளின் தலையீட்டை கோரிப்பெற தொழிற்சங்கங்களின் அகில இந்திய தலைவர்களின் முயற்சி என்ன? இதிலும் சமரசமா ?