மேற்குத் தொடர்ச்சி மலைப் பள்ளத்தாக்குகளில் இருந்த கொடுந்தமிழ் நாடுகளாக வேணாடு, பூமிநாடு, கற்கா நாடு, குட்ட நாடு, குட நாடு ஆகிய ஐந்தையும் கூறுவர். தமிழ் மொழியின் வட்டார வழக்குகளுக்குக் கொடுக்கப்பட்ட அன்றைய பெயர்தான் கொடுந்தமிழ். மூலத் திராவிட மொழியில் ஒன்றாயிருந்த தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட சுமார் முப்பத்தேழு இன்றைய மொழிகள், அன்று ஒரே மூலத்திராவிட மொழி. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு தொடக்கம் படிப்படியாக இம்மொழிகள் ஒலிமாற்றமடைந்து, வட்டாரம் சார்ந்த தனித்த மொழிகளாக கி.பி. 11ஆம் நூற்றாண்டளவில் உருப்பெற்றன. இவற்றில் தமிழுக்கும் மலையாளத்திற்குமான உறவு நிலவியல் அடிப்படையில் நெருக்கமானது. இம்மொழிகளின் எழுத்து வடிவம் வட்டெழுத்து ஆகும். மூல பிராமி வடிவம் ஒன்றாக இருக்க, பின்னர் பல வட்டெழுத்து வடிவங்களும் உருவாயின. இவ்வகையில், ஒலி வடிவம், எழுத்து வடிவம் இரண்டிலும் மாற்றங்களை உள்வாங்கிய திராவிட மொழி களின் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட வரலாறு என்பது இன்றைய திராவிட மொழிகள் புழக்கத்தில் இருக்கும் அனைத்துப் பகுதிகளையும் சார்ந்ததாகவே கருத வேண்டும். இவற்றில் தமிழ், மலையாளம் சார்ந்த உறவு சார்ந்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதைக் காண்கிறோம். பேராசிரியர் எளங்குளம் குஞ்ஞன்பிள்ளை “பண்டைய கேரளம்” (1961) என்ற தமது நூலில் தமிழகக் கேரளப் பண்பாட்டு வரலாற்றை ஒன்றாகவே கருதி பதிவு செய்துள்ள பின்வரும் செய்திகள் கவனத்திற்குரியவை.
“தொல்காப்பியத்தையும் அதன் முன்னும் பின்னுமுள்ள சங்க இலக்கியங்களை ஆராய்ந்தால் கி.பி. 500ஐ அடுத்த காலம் வரை கேரள மக்களில் நூற்றுக்கு எண்பது பேரும் ஒரு மதமும் இல்லாதவர் களாயிருந்தார்கள் என்பது புலனாகும். திராவிட வழிபாட்டு முறைகளை அவர்கள் பின்பற்றி வந்தார்கள். சமணர்களின் பத்மாவதி தேவியை (இவை பத்தினி தெய்வங்கள்) ஆராதிக்கவோ மறையோர்கள் ஆராதிக்கும் இடங்களின் பிரசாரத்தை ஏற்றுக் கொள்ளவோ, வெற்றி, நீடிய ஆயுள், இவற்றைப் பெற யாகங்கள் செய்யவோ, அவர்கள் தயங்கவில்லை. வேள்வித் தீயில் ஓமப் பொருள் களை ஆர்ப்பரிக்கும் போதெழும் புகையும் ஊன் சமைக்கும் அடுப்பிலிருந்தெழும் புகையும் அவர் களுக்கொன்றே (பதிற்.21). மறையோருரைப்படி வேள்வி செய்யும் பல்யானைச் செல்கெழுகுட்டுவன் மறுநாள் காலையில் நிணங் கலந்த பசிச் சோறை கையிலேந்திக் கொண்டு கொற்றவை மகிழ்விக்க அயிரை மலைக்குப் போவதைக் காணலாம். வேடர்கள், குறவர்கள் ஆகியோரின் குல தெய்வம் கொற்றவை. குருதி கலந்த சோறும், ஊனும், கள்ளுமே அவளுக்குகந்த உணவு. நிரை கவரச் செல்லும் வெட்சி வீரர்களின் வெற்றி கொற்றவை மனநிலையைப் பொறுத்திருந்தது. அயிரை மலைக் கொற்றவை சேரர்களின் குலதெய்வம்”-(1970:193-194)
இவ்வகையில் வாழ்ந்த சமூகம் வருணாசிரம முறைமை களை உள்வாங்கியதாக இல்லை. இனக்குழு, சிற்றரசன், வளர்ச்சி பெற்ற அரசன் என்னும் சமூகப் படிநிலையுடைய சமூகமாகவே இருந்தது. இச்சமூகத்தில் வருணாசிரம தரும நிலைபாடுகள் இல்லாமல் இருந்ததையும் பேரா.குஞ்ஞம் பிள்ளை பின்வரும் வகையில் பதிவு செய்துள்ளார்.
“தமிழகத்தில் வருணாசிரம தருமத்தை நிலை நாட்டுவது அவ்வளவு எளிதாக இல்லை. சாதியற்ற நிலைதான் திராவிடப் பண்பாட்டின் உயிர். குறிஞ்சி நிலத்தில் வசிக்கும் குறவன், முல்லை நிலத்தில் வந்து தங்கினால் இடையன் ஆவான். மருத நிலத்தில் வந்து வேளாண்மைத் தொழிலை ஏற்றுக் கொண் டால் வேளாளன் ஆவான். அதைப்போல வேளாண் குறிஞ்சி நிலத்தில் வந்து தங்கினால் குறவன் ஆவான். இதுவே வருணாசிரமம் நிலைபெற்றது வரை இருந்த நிலை. பாணனும் பார்ப்பானும் செல்ல யாதொரு தடையும் இருந்ததில்லை. பசுவின் கொழுத்த இறைச்சித் துண்டுகளை நிறைய இட்டு அரச குடும்பத்தினருக்குப் பக்குவம் செய்த சோறும், மதுவும் வேண்டுமளவு கொடுத்த பின்னர் தான் அவர்களை மன்னர்கள் திருப்பி அனுப்பி வைத்தனர். தீண்டாமை, தொடாமை மட்டுமல்ல, சாதி வேற்றுமையின் வாசனையே இல்லாத நாடாயிருந் தன கேரளமும் தமிழ்நாடும். சமண பௌத்தத் கொள்கைகளுக்கல்லாமல், வருணாசிரமத்துக்கு எவ்வகையிலும் ஏற்றதாயிருக்கவில்லை இந்நிலை” (1973:182)
வருணாசிரம தருமம் புழக்கத்தில் இல்லாதிருந்த சூழலில், அது எவ்வகையில் இச்சமூகத்திற்குள் நுழைய வாய்ப்பு உருவானது. அதன் பிற்கால விளைவுகள் எவ்வாறெல்லாம் உருப்பெற்றன. அதற்கானப் பின்புலத்தையும் குஞ்ஞன் பிள்ளை பதிவு செய்துள்ளார். அப்பகுதி வருமாறு:
“சமணர்களாயிருந்த பல்லவர்களும் பாண்டியர் களும் மதம் மாறியதே சமண மதம் குன்றியதற்குக் காரணம். அதைத் தொடர்ந்து எத்தனையோ சமண முனிவர்கள் கொல்லப்பட்டார்கள். திருஞானசம்பந்தர் பாண்டிய அரசனை, அவனது கோப்பெருந்தேவி, மந்திரி ஆகியோரின் உதவியால், சைவனாக்கிய கதை யாவரும் அறிந்ததே. அன்று எண்ணாயிரம் சமணர் களைக் கழுவேற்றிய மகிழ்ச்சியைக் காட்டுவதற்கு இப்பொழுதுகூட மதுரைக் கோயில் விழாக் கொண் டாடுகிறார்கள் (கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, History of South India, 2nd Edition, p.413).கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோரும் ஞானசம்பந்தரைப் போன்ற முனிவர்களே. அவர்கள் வேறொரு கட்சியைச் சேர்ந்தவர்களாதலால் அதை ஒரு புண்ணிய கருமமாகச் சைவர்கள் நினைத்தார்கள். பக்தர்கள் அதைக் கொண்டாடவும் தொடங்கினார்கள். திருஞானசம்பந்தர் உருவை எல்லாக் கோயில்களிலும் பிரதிஷ்டை செய்து ஆராதிக்கின்றார்களல்லவா? நாகப்பட்டினத்திலிருந்த பௌத்த விகாரத்தில் வைத்திருந்த புத்தரது பொன் பிரதிமையைக் களவு செய்து கொண்டு போய்த் திருவரங்கக் கோயிற் பணி செய்த புண்ணிய கருமம் மூலம் திருமங்கையாழ்வாரது புகழ் எங்கும் பரவிற்று. பக்தியாகிய மதுவை அதிகமாகக் குடித்தால் இப்படியெல்லாம் நடக்கும்” (1973: 188-189)
மேற்குறித்த விவரணங்கள் அடிப்படையில் ஏறக்குறைய கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு வரையான தமிழ்ச் சமூக இயங்கு தளத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. இவ் வரலாறு கேரளத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் பொருந்தும்.
அண்மையில் பேராசிரியர் இராஜன் குருக்கள் எழுதி வெளிவந்துள்ள “Social Formations of Early South India” (2010)” (2010) என்னும் நூல் 1961இல் பேரா.குஞ்ஞன் பிள்ளை செய்துள்ள ஆய்வுகளை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளது. பேரா.குஞ்ஞன் பிள்ளை அவர்களின் கருதுகோள்கள் நவீன கண்டுபிடிப்புகளான தொல்லியல், மானிடவியல் ஆகிய பின்புலத்தில் பேரா. இராஜன் குருவால் சிறப்பாக வெளிக் கொணரப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.
இயற்கை மரபு சார்ந்த வாழ்ந்த சமூகத்திற்குள் வருணா சிரமம் என்னும் வைதீக மரபு எவ்வகையில் உருப்பெற்றது. அதன் பரிமாணங்கள் என்ன? என்ற புரிதலைப் பெற முடியும். இதில் கேரளத்தின் அடுத்தகட்ட நிலை எவ் வகையில் உருப்பெற்றது. அது எவ்வகையில் இன்றைய கேரள உருவாக்கத்திற்கு வழிகண்டுள்ளது என்பது சுவையானது.
கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்குப் பின் எழுதப்பட்ட மலையாள நாட்டின் வரலாறுகள் அனைத்தும் புராணியத் தன்மை மிக்கது. பரசுராமர் மலையாள பூமியைக் கடலினின்று மீட்டு வந்தார் என்று ‘கேரள பாணினீயம்’ நூல் கூறுகிறது. இக்கதை பல்வகையில் விரித்தெழுதப்பட்ட புராணமே ‘கேரளோற்பத்தி’ என்னும் நூல். வைதீக மரபின் செல்வாக்கிற்குள் இந்நிலப்பகுதி உள்வாங்கப்பட்டது. தென்னை மரங்கள் நிறைந்த தேசம் என்பதே கேரளம் என்பதற்குப் பொருள். இத்தேசத்தில் உருவான பண்பாட்டுக் கலப்பு, அம்மக்களின் பண்டைய வரலாற்றுக்கு மாற்றான தன்மையை உருவாக்கியது. வருணாசிரமம் கோலேச்சியது. சாதிப் பிரிவுகள் ஆழமாக உருப்பெற்றன. மணிப்பிரவாள மொழியாக மலையாள மொழி ஆனது. இத்தன்மை சார்ந்து இலக்கண இலக்கிய நூல்களும் புராணங்களும் உருவாயின.
சைவ மரபைச் சேர்ந்த சேரமான் பெருமாள் நாயனார், வைணவத்தைச் சேர்ந்த குலசேகர ஆழ்வார் ஆகியோர் கேரளப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், புறப்பொருள் வெண்பாமாலை எழுதிய ஐயரிதனார்; இறையனார் களவியல் எழுதிய ஆசிரியர் ஆகியோரும் பெரிய புராணம் கூறும் விறல் மீண்ட நாயனார் மற்றும் திருவருட்பா பாடிய வெண்ணாட்டு அடிகள் ஆகியோர் கேரளத்தைச் சேர்ந்தவர் களாக அறிஞர் மு.இராகவையங்கார் குறிப்பிடுகிறார் (Some aspects of Kerala and Tamil Literature:1973).
மேற்குறித்த நிலையில் இருந்த கேரளம் பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து படிப்படியாக மாற்றங்களை உள் வாங்கத் தொடங்கியது. ஐரோப்பிய பாதிரியார்கள் அங்கு வந்தார்கள். கிறித்தவம் அவர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றது. அதற்குமுன் அராபிய மரபிலிருந்து உருவான இஸ்லாம் மதமும் அங்கு நடைமுறையில் இருந்தது. தமிழகத்திற்கும் கேரளத்திற்குமான உறவுகள் பெரிதும் குறையத் தொடங்கியது.
இன்று கேரளம் வேறு; தமிழகம் வேறு. இரண்டு பகுதிக்குமான நதி நீர் முரண்பாடு நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. மத்திய அரசின் உயர் பதவியில் இருக்கும் கேரளர்கள் தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. ஈழப் போராட்டம் முறியடிக்கப்படுவதற்கு கேரள அதிகாரி ஒருவரின் திட்டமிடல் முக்கியப் பங்காற்றிய தாகக் கூறுவர். இவ்வகையான கேரளத்தின் 1950க்குப் பிற்பட்ட வரலாறு – சமூக வரலாற்றில் அக்கறையுடையவர்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டிய பாடமாக அமைகிறது.
1957இல் இ.எம்.எஸ் நம்பூதிரிபாடு தலைமையில் இடதுசாரி அரசு கேரளத்தில் அமைக்கப்பட்டது. பல்வேறு செயல் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்திய வரலாற்றில் இந்நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கேரள அரசின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாத மத்திய அரசு, இ.எம்.எஸ் அமைச்சரவையைக் கலைத்தது. இப்பணியைச் செய்தவர் ‘சோசலிஸ்டாக’க் கருதப்பட்ட நேரு அவர்களே. எழுத்தறிவு பெற்றவர்கள் எண்ணிக்கையில் இந்தியாவில் முதலிடம் கேரளமே. இத்தன்மை சார்ந்து பல்வேறு பண்பாட்டு நிகழ்வுகள் இம்மண்ணில் நிகழ்ந்தன.
நவீன சிந்தனை மரபுகள் உடனுக்குடன் உள்வாங்கப் பட்டது. நவீன இலக்கியம், நாடகம், திரைப்படம் ஆகியவை உருப்பெற்றன. இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களைவிட கேரளத்தில் மேற்குறித்தவை வளமாக உருப்பெற்று வளர்ந்து வந்தன. கேரள சினிமா உலக வரைபடத்தில் இடம்பெற்றது. கேரள அரங்கமும் இந்தியச் சூழலில் மிகவும் வேறுபட்டதாக இருந்தது. கேரளியர்கள் சுரணை மிக்கவர்கள் என்று நம்பப்பட்டது.
1990ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு மேற்குறித்த அனைத்து வளங்களும் படிப்படியாக மாறத் தொடங்கின. வளைகுடா நாடுகளுக்குச் சென்ற கேரளியர்களின் பண முதலீடு, கேரளாவின் நுகர்வுப் பண்பாட்டில் பெரும் மாற்றங்களை உருவாக்கியது. அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் அலங் கோலமாகியது. இன்று கேரளம் பண்பாட்டு நெருக்கடியில் சிக்கியிருப்பதாகக் கூறுகிறார்கள். சாதி, மத சக்திகளின் செல்வாக்கு வலுப்பெற்று வருகிறது. இந்தியாவின் பிற மாநிலங்களைப் போலவே கேரளம் இன்று இருப்பதாகக் கூறுகிறார்கள்.
சாதி, மதமற்ற தொடக்க கால கேரளம், வருணாசிரம – வைதீகமயமான இடைக்கால கேரளம், அவற்றைக் கேள்வி கேட்ட இருபதாம் நூற்றாண்டின் இடைக்கால கேரளம், மீண்டும் நவீன வருணாசிரம – சாதி – மதம் உருவாகும் கேரளம். இந்தச் சுழற்சி சமூகவியல் – வரலாற்று மாணவர்களின் கவனத்தைக் கோரும் ஒன்றாகும். சமூக மாற்றம் மற்றும் வளர்ச்சி என்னும் கருத்தாக்கங்களை எப்படிப் புரிந்து கொள்வது? கேரள வரலாறு சொல்லும் பாடம் என்ன? இந்தியாவின் பிற மாநிலங்களின் நிலைபாடுகள் என்ன? இவ்வகையான கேள்விகளை முன்வைத்து விவாதிப்பதற்குக் கேரள வரலாறு முன்னுதா ரணமாக இருக்கிறது. இந்தச் சிறப்பிதழில் அதற்கான கால்கோள் செய்யப்பட்டுள்ளது. தமிழகச் சூழலைப் புரிந்துகொள்வதற்குக் கேரள வரலாறு உதவக்கூடும். இக்கண்ணோட்டத்தில் இவ்விதழை உரையாடலுக்காக உங்கள் முன் வைக்கிறோம். விரிவான உரையாடலை எதிர்பார்க்கிறோம்.
ஆதார நூல்கள்
1960 வேங்கடராஜூலு ரெட்டியார், தென் மொழிகள், முதற்பகுதி (கன்னடம், தெலுங்கு, மலையாளம்), எஸ்.வாஸன் கம்பெனி, மயிலாப்பூர், மதராஸ்-4
1973 குஞ்ஞன் பிள்ளை. பண்டைய கேரளம் (சங்க காலத்தில் சமுதாய – பண்பாட்டின் வரலாறு) 1967இல் இரண்டாம் பதிப்பாக வந்த “ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டில் கேரளம்” என்னும் நூல் தமிழ்ப் பேராசிரியர் செ.ஜேசுதாசன் அவர்களால் ‘பண்டைய கேரளம்’ எனும் தலைப்பில் 1973இல் மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்நூலின் மலையாள முதல் பதிப்பு 1961இல் வெளிவந்தது. இந்நூலைத் தமிழில் தமிழ்ப் புத்தகாலயம் 1973இல் வெளியிட்டுள்ளது.
நன்றி : மாற்றுவெளி இதழ், கீற்று இணையதளம் (ஆகஸ்ட் 13 – ல் வெளிவந்தது)