அருட்பெருஞ்ஜோதி அகவல் மந்திரமும் தந்திரமும் : விரைவில் வெளிவர இருக்கும் புலவர் அருள்.செல்வராசனின் நூலில் இடம்பெற்றுள்ள முன்னுரை

Arul Selvarasan’s Aruperunjothi Agaval manthiramum thanthiramum

______________________________________________________________________________________________________________

 

arul selvarajan - nadappu.com - sirappupparvaiதத்துவச் சிந்தனையாளரும், தமிழறிஞருமான புலவர் அருள் செல்வராசன் வள்ளலாரின் நெறிகள் குறித்து ஆழமான ஆய்வுகளை நடத்தி வருபவர். ஏற்கனவே இவர் எழுதிய அன்பு அருள் ஆனந்தம் என்ற நூல் வள்ளலார் அன்பர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது, வள்ளலாரின் அருட்பெருஞ்ஜோதி அகவலை அனைவரும் உணர்ந்தும், புரிந்தும் வாசிக்கும் வகையில் குறுக்கியும், எளிமைப்படுத்தியும் வடித்துள்ளார். விரைவில் அது நூலாக வெளிவர இருக்கிறது. அந்நூலில் புலவர் அருள் செல்வராசன் எழுதியுள்ள முன்னுரையை இங்கே பகிர்ந்துள்ளோம்.

______________________________________________________________________________________________________________

 

அருட்பெருஞ்ஜோதி அகவல் மந்திரமும் தந்திரமும்

 

விரிப்பும் குவிப்பும்

 

அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் போல ஓதுவதற்காக எழுதப்பட்டதன்று, இந்த ஏக அடி அகவல் தந்திரம்.

 

அகவல் அருட்பிரகாச வள்ளலார் மந்திரம்.

 

ஒருவரிச் சாரம் அடிச்சிறியேனின் எளிமைத் தந்திரம்.

 

அகவல் கூவி அழைக்கும். தந்திரம் தாவி அணைக்கும்.

 

இது சிறுபிரசாதம். அகவல் மூலமே பரிபூரணம்.

vallalar 2

அகவல் பாராயணம் செய்யும் சன்மார்க்க அன்பர்கட்கும், புதியவர்கட்கும், பாமரர்கட்கும், சிறுவர்கட்கும் எளிதில் ஐயம் நீங்கிட அகவலில் தெளிவு பெற்றிட ஒருவரிக் குறும்பா, தேவையென என் பேதை மனம் பேதலித்தது. நான் மேதையல்லேன். தயாஞான் சரவணானந்தா சுவாமிகளின் நூல்கள் மேல் கொண்ட போதை, என்னைச் சோதையாக்காமல் சுறுசுறுப்புப் பாதை அமைத்தது. மு.பா. நூலும் எளிமை, இனிமை, புதுமை காட்டியது.

 

ஔவையார் போல் குறுவரிப்பாவும், சொற்பொருள் விளக்க அகராதிக் குறிப்பும் வெளிப்படுத்தியது, ஆண்டவர் அருளே.

 

நாயகன் நாடகம்

 

செய்பவனும், செய்பொருளும் செய்யப்படும் உணர்வும் சன்மார்க்கம் நடத்தும் சித்திவல்லவரே.

 

அவர் நம் ஊன்நாடி நில்லாத போது நாமேது? நமக்கென்ற உணர்வேது?

 

இது முதல் நூலன்று; வழிநூலுமன்று; சார்பு நூலுமன்று; வெறும் பார்வை நூலே.

 

வரங்களால் பரிபூரணமாக நிறையப் பெற்றவர் வள்ளலாரே. நாமும் சில சமயம் அவரை நினைக்கும் போது, சிறு சித்தியை நம் புத்தியில் பதிக்கிறார். சன்மார்க்க வித்தை விதிக்கிறார். அடியானாக்கிச் சில சொல் வித்தையைச் சிறு பிள்ளை விளையாட்டாகச் செய்ய மதிக்கிறார். ஏளனமாகச் சிரித்து நாதமாய்க் கதிக்கிறார். அதுநம் செவிக்குச் சொட்டு மருந்தே.

 

கிணற்று நீரும் கங்கை ஆறே

 

கங்கை வெள்ளத்தில் தினம், தினம் நீந்திக் குளிக்க முடியுமா? சாதாக்கிணறே என் வீட்டில் உள்ளது. அதனையே கங்கையென எண்ணிக் குளிக்கிறேன். குளிக்காமல் நாறுவதை விடப் புனித நீரென எண்ணிக் கற்பனையில் மூழ்கிக் களிக்கிறேன். சேற்று நீரையும் ஊற்று நீராகக் கருதிக் கழுவுவது, போற்றப்படும் உத்தமமா? பிதற்றும் உன்மத்தமா?

 

இது மனத்துவம் எனினும், எனக்கு ஆன்மத்துவமே.

 

அம்மணியில் அழுக்கில்லை. ஆயினும் நான் துடைக்கின்றேன். பதரில்லா நெல்மணியைப் பத்துதரம் புடைக்கின்றேன். ஏன்? அன்னதானப் படைப்பும், சத்விசாரத் துடைப்பும் இலாத யான், ஞானதானம் எனும் பெயரில் சொற்சிலம்பம் அடிக்கின்றேன். பொங்கலிலும் கஞ்சி வடிக்கின்றேன். காரணம்?

 

காரணம் சாதாரணம்

 

கரணம், குட்டிக் கரணம் அடிக்காமல், காரணப் பொருளைக் கவனித்தால், கவலை மரணம் கவ்வாது போகும், அந்தரம். அதனால் எழுந்தது இந்த அகவல் தந்திரம். எல்லாம் மனச் சுழற்சி எந்திரம்.

 

சடை இருப்பவன் தானே முடிபோட முடியும்? இருப்பது சொல்லே. கட்டுவேன் மல்லே. முளைத்தது பாக்கதிர் நெல்லே. அறுவடை அறுத்துத் தள்ளே. இனி வயல் உள்ளே. ஒன்றும் இல்லே. அறிவா? வேரற்ற ஆசையும் தான்.

 

குறைப்பும் நிறைப்பே

 

வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது, முதல் நூல் அகவல், நிறை மொழி மாந்தர் முறைமையில் கிளந்த மறைமொழி அகவல். அதற்குச் சாரம் ஏன்? இது குறைக்க அல்ல; நிறைவேற்றவே வந்தது. பறைசாற்ற அல்ல.

 

பழத்தின் கூறே பிழிந்த சாறு

 

பழம் அழகானது. பொலிவானது. கெடாதது. சாறு பிழியலாமா? தோல் உரிக்க, கோது நீக்க, கொட்டை போக்க, களை பிரிக்க, சக்கை மெல்ல நோயாளியால் முடியாது. பிழிந்த சாறு குடிக்க எளிது. சுவைக்க இனிது. பலன் பெரிது. பலம் உரிது.

 

பிழிந்த சாறு எனினும் அதிலிருப்பது பழத்தின் கூறே.

சாறு வேறா? இன்பப் பேறு. நன்மை நூறு.

உடனடியாக ஏறும் இரத்த அணுக் கூறாய்.

எல்லாம் வள்ளல் கைமாறு.

 

சேதமும் சேதனமும்

 

தவ வாள் ஏந்தி, கவசமணிந்து புனிதப் போர் புரியும் பெரிய ஞானி அல்லர் நாம். கவண்கல் வீசிக் காய் பறிக்கும் கற்றுக் குட்டிகள். பலமுறை எறியினும், ஒரு பழம் விழும். பசி நிறையும். காய்க்குச் சேதம் உண்டுதான். சுத்த சேதனம் செய்யும் சாதனம் சன்மார்க்கச் செல்வர்க்குண்டு.

 

சிறிதாயினும் செல்லும் வழி பழுதாயினும் தொண்டு மனம் உண்டா? சரியான வழி உண்டு. சன்மார்க்க சித்தியும் உண்டு. பிழையெல்லாம் பொறுத்தருள்வார் பெருமான்.

 

எம்மினொடு வம்மின், இறவாத வரம் பெறலாம், இன்பம் உறலாமே.

 

அழைப்பவர் வள்ளல். களைப்பு, சலிப்பு, பேதலிப்பு, ஏழைமனத் தவிப்பு உறலாமா? முயன்று விழுபவன் எழுந்து நடக்கலாம். ஊரும் சேரலாம்.

 

முடக்கம் மோசம் : முயற்சி மோட்சம்

முயலாத மனிதர், முடங்கியும் நொண்டியர் இருந்தவிடம் கிடப்பர், படுப்பர், நோயினில் வாழ்வை முடிப்பர்.

தவறாய்ச் செயினும் திருத்திக் கொள்ளலாம்.

ஏதும் செய்யாமல் இருப்பதேக் கொள்ளலாம்.

ஏதும் செய்யாமல் இருப்பதே தவறு.

மூச்சு சுழுமுனை முட்டிடின் மோட்சம்.

இறுமாப்பல்ல ; உரிமை இருப்பே

 

தோள்மேல் குழந்தை ஏறியமரும். இறுமாப்பல்ல. உரிமை நினைப்பு. தந்தை பிள்ளையைத் தள்ளி விடுவானா? மனத்தில் மகிழ்ச்சி மிகக் கொள்வானா?

 

ஏறிடும் முயற்சி, எண்ணிடும் உரிமை,

உள்ளது கண்டு, பிள்ளையை அள்ளிக்  கன்னம் கிள்ளி,

உச்சி முகர்ந்து,  புறம் தட்டிப் புகழ்ந்து,

முத்த வெள்ளம் முகத்தில் முந்நூறு,

மாறிமாறிப் பொழிந்து தள்ளுவான்.

 

சதியும் சமரசமே

 

அந்நியர் தள்ளுவர், அன்னையர் கொள்ளுவர். அந்நியரெனினும், அன்னையரெனினும் சன்மார்க்கத்திற்குச் சமரசம், ஒன்றே, அனுமதி அளிக்க அவசரம் கொளாவிடில் பேதமுமின்று. இது வரப்பிரசாதம்.

 

பொறுப்பும் வேதமே. பொறுப்பதும் வேதமே.

மறுப்பும் வேதமே. மறைப்பதும் வேதமே.

பக்தன் – தன்செயல் புரிகையில், பரமன் ஆளுகிறான்.

பக்தன் – தியானம் புரிகையில், பரமன் உள் வாழுகிறான்.

நல்ல நினைவுகளுடன் வாழும் கணநேரம் எல்லவரும் வள்ளலாரே.

நல்நினைவு நேரம் தான் நீட்டிக்க மறுக்கிறது.

அந்நேரம் பொல்லாதவராக மாறுகிறோம். நல் நினைவே நீட்டிப்போம். நீடூழி வாழ்வோம்.

 

அகவல் அகிலம் ஆளும் ஆதியே.

 

அகவல் அழைக்கிறது. அருந்தகவல் அளிக்கிறது.

 

பாவம் போக்கும் பாவனை

 

அகவல் மந்திரம் முந்தியே

தந்திரம் விருந்துப் பந்தியே

 

படியும் நிலையும் நடையும் கடந்தால், முற்றமே – அதனால் அகவல் முற்றுமே.

அற்றமும் குற்றமும் உற்றிடும் – மனம் சுற்றுமே. நிலை பெற்றிட வழியைப் பற்றுமே.

அப்புறம் என்ன ? அந்தப்புரமே.

நாயகன் நாயகி பாபாவமே. நீங்கிடும் நம்முடைப் பாவமே.

அகவல் மந்திரம் சிரஞ்சீவி மாத்திரை.

தந்திரம் சஞ்சார பாத யாத்திரை.

மானம் உள்ளவன் மனிதனே. மானமெலாம் போனவழி பொறுத்தவர் வள்ளல் புனிதரே.

 

எதிர்ப்பும் ஏற்பும்

 

எந்த நூலுக்கும் முதலில் எதிர்ப்பு. பின் விதிர் விதிர்ப்பு. மத்தியில் ஏற்பு. இறுதியில் அர்ப்பணிப்பு. இது உலக நடப்பு.

நல்ல வேளை. எனக்கில்லை, பிறர் கொதிப்பு

யார் பொறுப்பு? வள்ளலார் கையணிந்த கங்கணமே காப்பு.

தேகமன மெல்லாம் தீபஒளி பரப்பு. உயிரெல்லாம் அருள் தொகுப்பு. மொத்தத்தில் பேதமிலா ஆன்மாவின் குவிப்பு. அது ஆண்டவராம் இருப்பு. அனைவருக்கும் நன்றியுடன் முடிப்பு.

வாதவுரை அடக்கினேன். இனி நாதமணி ஓதிடத் தொடக்குக!

 

– தொண்டன் புலவர் அருள். செல்வராசன்

99-A, பாலக்கரை கடைவீதி, திருச்சி – 1

தொலைபேசி : 0431 – 2417670

________________________________________________________________________________________________________________

குறிப்பு : அகவலின் பெருமையை அனைவரும் பொருள்புரிந்து தெரிந்திடவே, இத்தந்திரம் என் மன அறிவில் வெளிவருகிறது. அனுபவத்தில் வாழும் ஆன்றோர்கள் அடியவனின் அற்ப அறிவை மந்திரிக்க வண்டுகிறேன்.

________________________________________________________________________________________________________________

 

 

 

 

 

 

முகமது அக்லக் படுகொலை – கோர முகத்தின் குறியீடு : செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)

தமிழறிவோம் – கலித்தொகை 6 : புலவர் ஆறு . மெ. மெய்யாண்டவர்

Recent Posts