A article about electoral system
____________________________________________________________________________________________________________
தேர்தல் நெருங்கி விட்டது. அரசாங்கமும் தேர்தல் கமிஷனும் நூறு சதவீத வாக்குப் பதிவின் அவசியத்தை வலியுறுத்தி பிரச்சாரம் செய்யத் தொடங்கி விட்டார்கள்.
தேர்தல் அன்று எல்லோரும் கருப்பு மை வைத்த தங்களின் விரலை பெருமையாக மற்றவர்களுக்கு காட்டுவார்கள்.
புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்தவர்கள் மிகவும் ஆர்வமுடன் வாக்களிக்க காத்திருப்பார்கள்.
இந்த நேரத்தில் நிச்சயமாக பலர் மனதில் ஒரு எண்ணம் வந்து வந்து போகும். உண்மையில் நமது வாக்கு சக்தி உள்ளது தானா? அல்லது நமது ஒரு வாக்குக்கு மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய வலிமை உள்ளதா? என்று!
பெரும்பான்மை வாக்குகள்(Plurality/Majority Election System) என்ற அடிப்படையில் இயங்கும் நமது தேர்தல் முறையில் இந்த கேள்வி நிச்சயம் ஒரு நல்ல கேள்வி மற்றும் இப்போது அவசியமானதும் கூட.
விகிதாசார பிரதிநிதத்துவம்(Proportional representation) முறையில் இயங்காத இந்தியா போன்ற நாடுகளில் ஒவ்வொரு தேர்தலிலும் இந்த கேள்வி எழுவதை தவிர்க்க முடியாது.
ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்.
ஒரு தொகுதியில் 120 வாக்குகள் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
100 பேர் வாக்களிக்கிறார்கள். 5 பேர் போட்டியிடுகிறார்கள்.
வேட்பாளர் 1 பெற்றது 20 வாக்குகள்.
வேட்பாளர் 2 பெற்றது 20 வாக்குகள்.
வேட்பாளர் 3 பெற்றது 21 வாக்குகள்.
வேட்பாளர் 4 பெற்றது 20 வாக்குகள்.
வேட்பாளர் 5 பெற்றது 19 வாக்குகள்.
இதன் அடிப்படையில் பார்த்தால் வேட்பாளர் 3 அவர்கள் வெறும் 21 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று விடுகிறார். அவரை பிடிக்காதவர்கள் அல்லது வாக்கு அளிக்காதவர்கள் 79 பேர்.வெறும் 21 பேரின் பிரதிநிதியாக அவர் சட்ட மன்றத்திற்கு செல்கிறார்.
இன்னொரு உதாரணம் பார்ப்போம்.
ஒரு தொகுதியில் 100 வாக்குகள் இருக்கிறது.
60 பேர் வாக்களிக்கிறார்கள். 5 பேர் போட்டியிடுகிறார்கள்.
வேட்பாளர் 1 பெற்றது 10 வாக்குகள்.
வேட்பாளர் 2 பெற்றது 5 வாக்குகள்.
வேட்பாளர் 3 பெற்றது 7 வாக்குகள்.
வேட்பாளர் 4 பெற்றது 3 வாக்குகள்.
வேட்பாளர் 5 பெற்றது 5 வாக்குகள்.
நோட்டா வாக்குகள் 20.
இதன் அடிப்படையில் பார்த்தால் வேட்பாளர் 1 அவர்கள் வெறும் 10 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று விடுகிறார். அவரை பிடிக்காதவர்கள் அல்லது வாக்கு அளிக்காதவர்கள் 50 பேர்.வெறும் 10 பேரின் பிரதிநிதியாக அவர் சட்ட மன்றத்திற்கு செல்கிறார்.
இந்த உதாரணத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் நோட்டா வாக்குகள் 20. அதாவது யாருக்கும் வாக்களிக்க பிடிக்காதவர்கள் 20 பேர்.இது வெற்றி வாக்கின் எண்ணிக்கையை விட அதிகம். ஆனால் பயனில்லை.
மேற்கண்ட இரண்டு உதாரணங்களிலும் வெற்றிக்கான வாக்குகள் எண்ணிக்கையை விட வீணாகிப் போன அல்லது வீணாகிப் போனதாக மக்களால் நினைக்கப்பட்ட வாக்குகள் எண்ணிக்கை தான் அதிகம்.
கட்சிகள் கூட்டணி சேர்ந்து போட்டியிடும் சூழ்நிலை வேறு. அங்கே நாம் விரும்பும் கட்சிக்காக இல்லாமல் அவர்கள் வைத்திருக்கும் கூட்டணிக்காக நாம் விரும்பாத கட்சிக்காக கூட நமது வாக்கை செலுத்த நேரிடலாம். கட்சிகள் எப்போதும் மக்களின் கருத்திற்கேற்ப கூட்டணி அமைப்பதில்லை. வெற்றி பெற்ற பின் அந்த கூட்டணி அப்படியே இருக்கும் என்பதற்கும் எந்த உத்தரவாதமில்லை. அப்படி ஒரு நிலையில் நமது வாக்கு வீணாகிப் போனதாகத்தான் நமக்குத் தோன்றும்.
இன்றைக்கு இருக்கும் நமது தேர்தல் முறையில் ஒரு தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் ஊழல்வாதிகள் என்றால் இருப்பதில் கொஞ்சமாக ஊழல் செய்தவரைத் தேர்ந்தெடுக்கும் நிலை தான் உள்ளது.
பெரும்பான்மை வாக்குகள்(Plurality/Majority Election System) முறையில் உள்ள இந்த குறைகளின் காரணமாக சில அரசியல் கட்சிகளே எப்போதுமே சில தொகுதிகளில் வெற்றி பெரும் சூழ்நிலை உள்ளது.தங்களுக்கு பலம் உள்ள தொகுதிகளில் மட்டுமே அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். மற்ற தொகுதிகளில் அதிக அளவு கவனம் செலுத்துவதில்லை.
இதனால் மாநில/நாடு அளவில் நல்ல வேட்பாளர்களும் கிடைப்பதில்லை.
இதற்கு உதாரணமாக, நமக்கு இந்த தேர்தல் முறையை விட்டுச்சென்ற இங்கிலாந்து நாட்டின் சில புள்ளி விபரங்களை பார்த்தால் புரியும். அங்கே 1945 ஆண்டு முதல் 50 சதவிகித தொகுதிகளில் ஒரே ஒரு கட்சியே வென்று வந்திருக்கிறது. சில தொகுதிகளில் இரண்டு பெரிய கட்சிகளும் போட்டியே இடுவதில்லை.
ஒரு வாக்காளர் தனக்கு பிடித்த வேட்பாளர் நிச்சயமாக வெல்ல மாட்டார் என்று நினைக்கும்போது அவருக்கு வாக்களிக்கும் உத்வேகம் நிச்சயம் குறையும். இதைத் தடுப்பது கடினம். மேலும், அப்படி செலுத்தும் வாக்கு வீணாகிப் போய் விட்டதாக அவர் நினைப்பார்.
விகிதாசார பிரதிநிதத்துவம்(Proportional representation) முறையில் சதவிகித அடிப்படையில் பல கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெறுகிறார்கள்.இதனால் கட்சிகளும் நல்ல, நேர்மையான, ஊழல் அற்ற வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தும். இதனால் மக்கள் அளிக்கும் பெரும்பான்மையான வாக்குகள் உபயோகமுள்ளதாக இருக்கும்.
மேலும், மக்களும் ஆர்வத்துடன் உத்வேகத்துடன் வாக்களிப்பார்கள்.
மேலும் இந்த முறையில் சிறுபான்மைக் கட்சிகள் மற்றும் சிறிய குழுக்கள் அல்லது சமுதாயத்தில் பின்தங்கிய மக்களைப் பிரதிநிதிக்கும் கட்சிகள் கூட வெற்றி பெரும் சூழ்நிலை உருவாகும். இதன் மூலம் அவர்கள் பெரிய கட்சிகளை மட்டுமே நம்பிக் கொண்டு இருக்காமல், தங்கள் பிரதிநிதியை சட்ட மன்றத்திற்கு அனுப்பலாம்.
தங்களின் வாக்கு நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்தால் மக்கள் அவர்களாகவே வந்து வாக்களிப்பார்கள். 100 சதவிகித வாக்குப் பதிவு என்ற நோக்கமும் நிறைவேறும்.
இந்த முறையில் குறைகள் இல்லாமல் இல்லை. அவைகளில் முக்கியமான ஒன்று, ஆட்சி அமைப்பதில் சில நேரங்களில் ஏற்படும் குழப்பங்கள். அவைகளைக் களைந்து நமது நாட்டுக்கேற்ப சில மாற்றங்களை செய்து கொண்டு அமல்படுத்தலாம்.
விகிதாசார பிரதிநிதத்துவம்(Proportional representation) முறை இந்தியாவில் கொண்டு வரப்பட வேண்டும் என்று கோரிக்கை அவ்வப்போது வைக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. எப்போது என்பது கடவுளுக்கே வெளிச்சம். அது வரை இப்போது இருக்கும் முறையை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். இருப்பதில் நல்ல வேட்பாளரை தேர்வு செய்ய நமது வாக்கை பயன்படுத்தலாம். பெரும்பான்மை முறையில்(Plurality/Majority Election System) நமது ஒரு வாக்கு கூட சில நேரங்களில் ஒரு மோசமான வேட்பாளரை தேர்வு செய்ய விடாமல் தடுக்க முடியும்.
நமக்கு யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லாவிட்டாலும் கூட நமது வாக்கை நோட்டாவுக்கு செலுத்தி நமது எதிர்ப்பை தெரிவிக்கலாம். நோட்டாவுக்கு இப்போது எந்த சக்தி இல்லையென்றாலும் வருங்காலத்தில் அதிக நோட்டா வாக்குகள் மக்களின் எதிர்ப்பை நிச்சயம் அரசுக்கு உணர்த்தும். அதன் மூலம் விகிதாசார பிரதிநிதத்துவம்(PR Election System) முறை இந்தியாவில் அமல்படுத்தப்பட வாய்ப்பு ஏற்படலாம்.
நமது வாக்குக்கு உண்மையில் சக்தி உள்ளதா என்ற கேள்வியைத் தாண்டி, இந்த ஜனநாயகத்தை ஏற்றுக் கொண்டு வாழும் ஒரு குடிமகன் என்ற அடிப்படையில் வாக்கு அளிப்பது என்பது நம் ஜனநாயகக் கடமை என்றாகிறது.
______________________________________________________________________________________________________________