முகநூலென்னும் ஒன்பதாம் திணை: அ.ராமசாமி

 

A.Ramasami’s opinion

______________________________________________________________________________

 

a.ramasamyமுகநூல் போன்ற சமூக ஊடத்தில் இடதுசாரிகளென நம்புபவர்கள், பொதுமனிதர்களோடு உரசிப்பார்க்கத் தவறுவதில்லை.வலது நம்பிக்கையாளர்களும் அப்படியே.கறாரான இடதுசாரிகள், இடதுசாரிகளோடு மட்டும் பேசுகிறார்கள்.தீவிர வலதுசாரிகளும் அப்படியே..இந்துத்துவர்கள் பெரியாரியவாதிகளோடு தொடர்பில் இல்லை. இசுலாமியத்திலும் வேறுபாடுகளைக் கொண்டாடுபவர்கள் கொண்டாடிக்கொண்டே சீறுகிறார்கள். 

 
திமுகவினர், அ இ அதிமுகவினரைப் பார்க்காமலேயே கொக்கரிக்கிறார்கள்.அ இ அதிமுகவினர் அம்மா நாமம் சொல்லவே வருகிறார்கள். தேர்தல் காலம் இல்லையென்பதால் தேமுதிக, மதிமுகவினரைக் காணவில்லை. உள்ளாட்சித்தேர்தல் அறிவித்தவுடன் வரக்கூடும். தாங்கள் என்ன அடையாளமென அறியாமலேயே எல்லா இடங்களிலும் நுழைந்து திரும்பித் தடைப்படுகிறார்கள் நாம்தமிழர்கள்.

 

நாடகக்காரர்கள் வழக்கம்போல கவிகளைக் கண்டுகொள்வதில்லை. கவிகள் மட்டும் விதிவிலக்கா.?. தங்களுக்குள்ளேயே முட்டிமோதிக்கொள்கிறார்கள். 

 
புனைவெழுத்தாளர்களின் புனைவுலகம் தவிர்த்த வருகையாக இருக்கிறது. பெண்கள் ஆண்களோடு பேசத் தயங்கும் வெளியாக மாறிக்கொண்டுவிட்டது ஒன்பதாம் திணை. ஆண்மொழியின் அகம்பாவம் தெறிக்கும் தடாலடிக்கிணையாக நிற்கமுயல்கிறது பெண்மொழி.

 

ஊர்சுற்றிகள் படங்களாக அலைகிறார்கள். உற்சாகமானவர்கள் படங்களைத்தேடிப் பகிர்கிறார்கள் பாடல் பகிர்வோர் தொகைப்பெருக்கம் காதைக்கிழிக்கிறது.

 
காதலில் திளைப்பவர்கள் தன்னிலைக் கவிதைகளைத் தேடிக்கழிப்படைகிறார்கள். காமத்தைக் கொண்டாடுபவர்கள் உள்பெட்டியே போதுமெனக்கூடுகிறார்கள்.

 

இடதுசாரிகளின் தேசத்தில் வலதுசாரிகளுக்கிடமில்லையா?  வலதுசாரிகளின் தேசத்தில்  இடதுசாரிகளுக்கும் இடமிருக்கிறது 
என்பது உறுதிசெய்யப்பட வேண்டாமா? மற்றமைகளோடு உறவாட/ உரையாடத் தடுக்கும் வருணக்கோட்பாடும் வர்க்கக்கோட்பாடும் நீடிப்பதெப்படி?

 

– அ.ராமசாமி அவர்களின் முகநூல் பகிர்வில் இருந்து நன்றியுடன்…

 

______________________________________________________________________