முக்கிய செய்திகள்

பேரவை சிறப்புக் கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றம்: கடும் கண்டனம் தெரிவிக்காதது ஏன் என ஸ்டாலின் கேள்வி?

மேகதாது அணை கட்ட கர்நாடகாவிற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு எதிராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.  தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர், ஸ்டாலின் இதனை மத்திய அரசைக் கண்டிக்கும் தீர்மானமாக நிறைவேற்றி இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். 

கர்நாடக அரசு, காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில்  அணை கட்ட தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தீவிர எதிர்ப்பு தெரிவித்த போதும் மேகதாது அணை கட்டுவதற்கான வரைவு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்துக்கு கர்நாடக அரசு அனுப்பி  வைத்தது. இதை ஏற்றுக்கொண்ட மத்திய நீர்வள ஆணையம், விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்குமாறு கடந்த 27-ம் தேதி கர்நாடக நீர்ப்பாசன  துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதனைக் கண்டித்து திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றன. இதுபற்றி விவாதிக்க உடனடியாக தமிழக சட்டப்பேரவையை கூட்ட  வேண்டும் என திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் தமிழக அரசுக்கு வலியுறுத்தி வந்தன. இதையடுத்து, தமிழக அரசு சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்ட சம்மதம் தெரிவித்தது. அதன்படி இன்று மாலை 4 மணிக்கு  தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில், மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு எதிராகவும், தமிழக அரசு அனுமதி இல்லாமல் காவிரியின் குறுக்கே எந்த பகுதியிலும் புதிதாக  அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது என்ற சிறப்பு தீர்மானத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முன்மொழிந்து பேசினார். இந்த தீர்மானத்தின் மீது  எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ அபுபக்கர் ஆகியோரும் பேசினர். 

தீர்மானத்தை முன்மொழிந்த முதலமைச்சர் பழனிசாமி :

மேகதாது அணை திட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை தாக்கல் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதனை நிறைவேற்றித் தருமாறு உறுப்பினர்களுக்கு கோரிக்கை விடுத்தார். மேகதாது அணை திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி அளித்ததற்கு கடும் கண்டனம்  தெரிவித்தார். மேகதாது அணை திட்ட அறிக்கை தயாரிக்க அளித்த அனுமதியை திரும்ப பெறவும் முதலமைச்சர் வலியுறுத்தினார். மேகதாதுவில் அணை கட்ட அனுமதியளித்த செயல் மக்களை கொதிப்படைய செய்துள்ளது என்றும் மேகதாது அணை திட்ட அனுமதியை திரும்பப் பெற மத்திய நீர்வளஅமைச்சகம் உத்தரவிட வேண்டும் என்று கூறினார். 2014 டிசம்பர் 5-ம் தேதி மற்றும் 2015 மார்ச் 27-ம் தேதி தமிழக சட்டசபையிநல் 2 தீர்மானம் நிறைவேற்றப்பட்டன என்று கூறினார்.

தீர்மானம் மீது துணை முதலமைச்சர் பேச்சு:

கர்நாடக அரசு 2 அணைகள் கட்ட அப்போது அனுமதி கோரியது, அந்த அணைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். தற்போது மேகதாதுவில் புதிய அணை கட்ட முயற்சி செய்துவருகிறார்கள், இதற்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்துள்ளோம் என்று தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் :

கஜா  புயலால் மக்கள் பாதித்துள்ள நேரத்தில் கர்நாடகம் அணை கட்ட திட்டமிடுகிறது. தமிழக விவசாயிகள் அதிர்ச்சியடையும் வகையில் மத்திய நீர்வள ஆணையம் அனுமதி கொடுத்துள்ளது, இது காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது. தமிழக எம்.எல்.ஏ.க்களை அழைத்துச்சென்று பிரதமரை முதல்வர் சந்தித்திருக்க வேண்டும்.

மேகதாது அணை விவகாரத்தில் முன்பே உச்சநீதிமன்றத்தில் தடை பெற்றிருக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தின் 9 பேர் கொண்ட குழுவில், மாநிலத்தின் சார்பில் உறுப்பினர் யாரும் இல்லை. இன்று வரை நிரந்தர உறுப்பினர் நியமிக்கப்படவில்லை. தமிழகம் முழுமையாக வஞ்சிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கும் தீர்மானமாக இதனை நிறைவேற்றி இருக்க வேண்டும். இருப்பினும் மக்களின் நலனுக்காக இந்தத் தீர்மானத்தை முழுமையாக ஆதரிக்கிறேன்.

கே.ஆர். ராமசாமி :

அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டிய தமிழக அரசின் நடவடிக்கை தாமதமானது, முன்கூட்டியே தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்திருக்க வேண்டும். மேகதாது அணை விவகாரத்தில் சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகாவில் அனைத்துக்கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளனர். தமிழகத்தில் அரசியல் கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை. மேலும் ஒற்றுமையாக இருந்தால் தான் கர்நாடக அரசின் செயலை தடுக்க முடியும். மத்திய நீர்வள அமைச்சகத்தில் ஒரு உறுப்பினர் உள்ளார். அவர் காவிரி மேலாண்மை ஆணையத்திலும் உள்ளார். அணை கட்ட அனுமதி அளித்துவிட்டு, பின்பு விவாதிக்கலாம் என்று தெரிவிக்கிறார். தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜகவால் வெற்றி பெற முடியாது. எனவே கர்நாடகத்தில் லாபம் அடையலாம் என்ற எண்ணத்தில் தமிழக விவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.

அபுபக்கர்

வெறுமனே தீர்மானம் என்று இல்லாமல்; நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக அழுத்தம் தரவேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் கட்சித் தலைவர் அபுபக்கர் தெரிவித்தார். மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்றால் வரிகொடா போராட்டம் நடத்தப்படவேண்டும் என்றார். 

எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்ததைத் தொடர்ந்து, தீர்மானத்தின் மீது இறுதியாக பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்தார். தமிழகத்தை மத்திய அரசு கடுமையாக வஞ்சிப்பதாகவும் அவர் அப்போது குற்றம்சாட்டினார். தீர்மானத்தை அனைத்துக் கட்சியினரும் ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

நிறைவாக மேகதாது அணை விவகாரத்தில் சட்டப்பேரவைச் சிறப்புக் கூட்டத் தொடரில் மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.