மதிப்பிழந்தோமா?: மேனா.உலகநாதன் (சிறப்புக் கட்டுரை)

யிற்று ஓராண்டு.

 

அறிமுகப் படுத்தியவர்கள் இந்த நாளை கருப்புப்பண ஒழிப்பு நாள் என்கிறார்கள்.

 

எதிர்ப்பவர்கள் இதனைக் கருப்பு நாள் என அடையாளப்படுத்துகிறார்கள்.

 

ஆதரவும், எதிர்ப்பும் ஏதோ ஒரு வகையில் கருப்பையே சுட்டுகிறது.

 

மதிப்பிழப்புக்கு ஆளானது குறிப்பிட்ட மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் மட்டும்தானா… அல்லது மக்களா?

 

நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு, இன்று வரை இது விடை தெரியாத கேள்வியாகவே நீள்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

 

ஒரு வேளை இது சரியான நடவடிக்கை தானோ என சராசரி மக்களுக்கு சந்தேகம் வருமளவுக்கு பிரதமர் மோடியும், நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் தங்கள் தரப்பில் வலிமையான வாதங்களையே முன்வைக்கிறார்கள்.

 

ஆனால், நோபல் பரிசுபெற்ற பொருளாதார மேதை அமார்த்தியா சென்னும், முன்னாள் பிரதமர் மன்மோகனும் நிச்சயமாக சாமானியர்களல்ல.

 

அவர்கள் இருவருமே இதைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள்.

 

அமர்த்தியா சென் இதனை ஒரு கொடுங்கோன்மை நடவடிக்கை என்றே சாடினார்.

 

முன்னாள் பிரதமர் மன்மோகனோ தமது இயல்புக்கு மாறாக கடுமையான வார்த்தைகளையும், கருத்துகளையும் பயன்படுத்தி விளாசித் தள்ளி இருக்கிறார்.

 

“பணமதிப்பிழப்பு என்பது அமைப்பு ரீதியாக நடத்தப்பட்ட அபகரிப்பு, சட்டரீதியாக நடத்தப்பட்ட கொள்ளை (it was organised loot and legalised plunder)” என்றே அவர் கூறியிருக்கிறார். அது மட்டுமல்ல, “இந்தக் குற்றச்சாட்டை நான் திரும்பத் திரும்ப வைப்பேன்” என்று அழுத்தம் திருத்தமாக அடித்துச் சொல்கிறார். மன்மோகன் போன்ற ஒருவரிடமிருந்து இத்தனை கடுமையான தொனியில் வார்த்தைகள் வருகிறதென்றால், அதனை நாம் எளிதில் புறந்தள்ளிவிட முடியாதுதானே…?

 

சொல்லப்போனால், அமர்த்தியா சென்னும், மன்மோகனும் ஒரே மாதிரியான பார்வை கொண்டவர்கள் அல்ல. அமர்த்தியா சென் எளிய மக்களின் தளத்தில் இருந்து பொருளாதாரத்தை அணுகுபவர். மன்மோகனோ, இந்தியாவின் நவீன, தாராளமய பொருளாதார யுகத்தைக் கட்டமைத்தவர். மின்னணு பரிவர்த்தனை போன்ற நடைமுறைகளை முற்றிலும் ஆதரிக்கும் நிலைப்பாட்டைக் கொண்டவர்தான் மன்மோகன். ஆனால், இந்தியா என்பது, மேடு பள்ளங்களும், சந்து பொந்துகளுமான சமூக, பொருளாதார அமைப்பைக் கொண்டதொரு ஒன்றியம் என்பதை ஓரளவேனும் புரிந்து, உணர்ந்தவர். விவாதங்களுக்கான வெளியை திறந்து வைக்க விரும்பும் தாராளமயவாதி. அந்த வகையில் மன்மோகன் எளிய மக்களுக்காக சிந்திப்பவர்களுடன் நெருக்கமான இடத்தில் இருப்பவர்.

 

கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி மோடி இதை அறிவிக்கும் போது தாம் மிக அதிர்ந்து போனதாக அந்த நாளை நினைவு கூர்கிறார் மன்மோகன். இப்படி ஓர் அபத்தமான ஆலோசனையை பிரதமர் மோடிக்குக் கூறியது யார் எனத் தமக்குள் எண்ணி வருந்தியதாகவும் அவர் வேதனைப் படுகிறார். எனக்குத் தெரிந்து, நேருவுக்குப் பிறகு இந்தியாவுக்கு வாய்த்த மிகப் பொருத்தமான பிரதமர் என மன்மோகனைச் சொல்வேன். இந்தியா என்ற பன்முகத் தன்மை வாய்ந்த ஒன்றியத்தை, அதன் ஜனநாயகத் தன்மை சிதறாமல் நடத்திச் செல்லக் கூடிய நிதானம் அவரிடம் இருந்ததை பல முறை பார்த்திருக்கிறோம். 13 கட்சிகளைக் கூட்டணியில் வைத்துக் கொண்டு ஓர் மைய அரசை இயக்கிய ஆளுமையை அத்தனை எளிதாக நாம் எடை போட்டுவிடலாகாது. அவரது பொருளாதாரக் கோட்பாடுகளின் மீதும் நமக்கு விமர்சனங்கள் உண்டு .ஆனால், அந்த விமர்சனங்களை ஏற்கவும், மறுக்கவும் தேவைப்பட்டால் மாற்றிக் கொள்ளவுமான சில குறைந்த பட்ச நெகிழ்வுத் தன்மை அவரிடம் இருந்தது. அப்படிப்பட்ட ஒருவர்தான் இந்தியாவுக்கு தேவையான அல்லது பொருத்தமான தலைவராகவும் இருக்க முடியும். முழுமையாக சோனியாகாந்தியால் ஆட்டுவிக்கப்பட்ட பொம்மையாக மன்மோகன் இருந்தார் என கருதுவது அத்தனை சரியான மதிப்பீடாக இருக்க முடியாது.

 

பணமதிப்பிழப்பை கடுமையாக விமர்சி்த்துள்ள மன்மோகன், ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியையும் அடியோடு நிராகரிக்கிறார். அதனை வரி பயங்கரவாதம் என வர்ணித்துள்ள மன்மோகன், பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியால் லாபமடைந்தது சீனாதான் என்று வேறு சொல்கிறார். ஆம்… சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவது 23 சதவீதமாக (ரூ.2.41 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது என்பது அவர் கூறும் குற்றச்சாட்டு. இதற்கு விலையாக நமது இளைஞர்களின் வேலை வாய்ப்பை கொடுத்திருக்கிறேம் என்றும் குமுறி இருக்கிறார்.

 

மன்மோகன் வெறும் பொருளாதார மேதை அல்ல. தொடர்ந்து 10 ஆண்டுகள் இந்த நாட்டின் பிரதமராக இருந்தவர். எனவே, நவம்பர் 8 ஐ ஒரு கருப்பு நாள் என மற்றவர்கள் சொல்வதற்கும், மன்மோகன் சொல்வதற்கும் அழுத்தமான வேறுபாடு இருக்கிறது.

 

பணமதிப்பிழப்பிற்குப் பின், 2017-18 நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக் குறியீடு (Gross Domestic Product – GDP) 5.7 விழுக்காடு என்பதையும், கடந்த 2016 – 17 நிதியாண்டின் இதே காலாண்டு காலக்கட்டத்திற்கான ஜிடிபி 7.9 விழுக்காடாக இருந்ததையும் எடுத்துக்காட்டி, பொருளாதார வல்லுநர்கள் அனைவரும் சந்தித்திருக்கும் சரிவை சிந்துத்துப் பாருங்கள் என ஆளுவோருக்கு அறிவுறுத்தினர்.

 

பிரதமர் இதற்கு என்ன பதில் சொன்னார்?

 

இவையெல்லாம் தற்காலிகமானது என்றாரே தவிர, தவறு நடக்கவில்லை என அவரால் அழுத்திப் பேச முடியவில்லை. 

 

இந்த ஆண்டு (2017) நவம்பர் 7ஆம் தேதி இதுகுறித்து விளக்கமளித்த நிதியமைச்சர் அருண் ஜேட்லியோ, மன்மோகன் எழுப்பிய எந்தக் கேள்விக்கும் நேரடியாக பதிலளிக்காமல், 2ஜி, காமன்வெல்த், நிலக்கரிச் சுரங்க முறைகேடுகள் போல நாங்கள் எந்தக் கொள்ளையும் அடிக்கவில்லை என்று, ஏதோ நாலாந்தர பேச்சாளரைப் போல பதிலளித்திருக்கிறார்.

 

உடனடியாக பலன் தெரியாது ,இது சிறந்த நடவடிக்கை என வெறும் போற்றித் திருவகவல் பாட்டைப் பாடுகிறார்களே தவிர எப்படி சிறப்பான நடவடிக்கை என நிறுவுவதற்கான விளக்கங்களை அளிக்கத் தயாராக இல்லை.

 

பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் பொருளாதாரக் கொள்கையில் பெரிய வேறுபாடு இல்லைதான். எனினும், காங்கிரஸைப் பொறுத்தவரை குறைந்த பட்சம், ஓர் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்த பின்னரேனும் இதுபோன்ற முக்கிய முடிவுகளை அறிவிப்பார்கள். விமர்சனங்களைச் செவி மடுப்பார்கள். கேள்வி எழுப்புவோர் தளத்தில் நின்று பதில் கூறுவார்கள். இவற்றில் எந்தப் பண்பையும் பாஜகவினரிடம் பார்க்க முடியவில்லை.

 

ரியல் எஸ்டேட் வணிகம் சீராகி இருப்பதாகவும், வங்கிக் கடன்களின் வட்டி விகிதம் குறைந்திருப்பதாகவும் பிரதமர் அலுவலகத்தின் தரப்பில் ஒரு விளக்கம் தரப்பட்டிருக்கிறது. பணமதிப்பிழப்பு நாட்டுக்கு பன்முகப்பலன்களை அளித்திருப்பதாகவும் பிரதமர் அலுவலகம் அந்த விளக்கத்தில் தெரிவித்திருக்கிறது.

 

அருண் ஜேட்லியோ நாட்டில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கூறி பெருமிதப் படுகிறார். இது நாட்டின் வளர்ச்சியா என்ன?

 

விவசாயிகள் என்றொரு வர்க்கம் இருப்பதையே ஏறத்தாழ மறந்தாகி விட்டது. எளிய தொழிலாளர்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. தனியார் நிறுவனங்களை நம்பிப் பிழைக்கும் நடுத்தர வர்க்கத்திற்கு பணிப்பாதுகாப்பு துளியும் இல்லை. ஏழைகளுக்கோ உயிருக்கே பாதுகாப்பில்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி கட்டுக்குள் இல்லை. வேலை வாய்ப்பு என்ற சொல் மட்டுமே உயிருடன் இருக்கிறது. இத்தனை பிரச்னைகளுக்கும், பமணதிப்பிழப்பும், ஜிஎஸ்டியும் தீர்வாகி விடுமா?

 

பேச்சு சாதுர்யத்தால் மட்டுமே தாம் செய்யும் தவறுகள் அனைத்தையும் நியாயப்படுத்தி விட முடியும் என ஒரு தலைவர் நம்புவாரே ஆனால், காலம் அவருக்குக் கூறும் பதில் கடுமையானதாகவே இருக்கும்.

 

A review on demonetisation