ஆதார் கட்டாயம் என்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
அரசு சேவைகளுக்கும், சமூக நலன் சார்ந்த திட்டங்களுக்கும் ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக வங்கி கணக்குகள், பான் கார்டு, ஓய்வூதியம், செல்போன் சேவை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, ஓட்டுநர் உரிமம், வாகனங்கள் பதிவு, சமையல் எரிவாயு மானியம், பரஸ்பர நிதி முதலீடுகள் போன்றவற்றை பெற ஆதார் அடையாள எண்ணை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அரசு சேவையாக இருந்தாலும், அதற்காக ஆதார் எண்களை இணைப்பதால் தனிநபர் சார்ந்த ரகசியங்கள் கசிய வாய்ப்புள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் ஆதாரை கட்டாயமாக்கும் சட்டம் மற்றும் பயோமெட்ரிக் முறை ஆகியவை அரசியல் சாசனத்தின் படி செல்லுப்படி ஆகாது என்று அறிவிக்கக்கோரி பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளன.
உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இது தொடர்பான வழக்குகளை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உட்பட நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, ஏ.எம் கன்வில்கர், டி.ஒய் சந்திரசூட், அசோக் பூஷன் ஆகிய 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.