அனைத்து சேவைகளுடனும் ஆதாரை இணைக்க மார்ச் 31 வரை காலக்கெடு..


அரசு நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் எண் இணைப்புக்கான கால அவகாசத்தை மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய அரசின் சமூக நலத் திட்ட சலுகைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. வங்கி கணக்கு, மொபைல் சேவைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ள மத்திய அரசு, அதற்கான காலக்கெடுவையும் வழங்கியுள்ளது.

இந்நிலையில், அரசின் நலத்திட்டங்களை பெற, ஆதாரை கட்டாயப்படுத்துவதற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த வழக்கை, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், கட்டாய ஆதார் எண் இணைப்புக்கான கால அவகாசத்தை மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்க மத்திய அரசு விரும்புவதாகவும், அதேசமயம் புதிய வங்கி கணக்கு தொடங்க ஆதார் எண் கட்டாயம் தேவை எனவும் தெரிவித்தார்.