முக்கிய செய்திகள்

கொடுத்த ஆதார் தகவல்களை இனி திரும்பப் பெறலாம்: வருகிறது புதிய சட்டம்

மொபைல் எண் உட்பட பல்வேறு திட்டங்களுக்கும் இனிமேல் ஆதார் எண் தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில்

ஏற்கெனவே வழங்கப்பட்ட தகவல்கள் என்னாகும் என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதில் தரும் வகையில் வழங்கப்பட்ட ஆதார் விவரங்களை ஒருவர் விரும்பினால் திரும்பப் பெறும் வகையில் புதிய சட்டம் விரைவில் வருகிறது.

மத்திய அரசு சார்பில் அமல்படுத்தப்படும் சமூக நலத் திட்ட சலுகைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியது, வங்கி கணக்கு, மொபைல் சேவைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்தும் ஆதார் திட்டம் மற்றும் ஆதார் சட்டம் 2016-ஐ எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமைதான் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னணியில், ஆதார் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று மனுதாரரர்கள் தரப்பில் கோரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தனது உத்தரவில் ‘‘அரசியல் சட்டப்படி ஆதார் சரியானது தான்.

ஆதார் எண்ணை போலியாக உருவாக்க முடியாது., அதேசமயம் மக்களின் தனிப்பட்ட தகவல்களை உரியமுறையில் பாதுக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. அதற்கு ஏற்றவகையில் ஆதார் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் தகவல்களை தருவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே ஆதார் சட்டத்தின் 57-வது பிரிவு ரத்து செய்யப்படுகிறது. அதுபோலவே ஆதார் எண் இல்லை என்பதற்காக தனிநபர்களுக்கு அரசின் சலுகைகள், உதவிகள் கிடைக்காமல் தடுத்து நிறுத்தப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

வங்கிகள், மொபைல் இணைப்பு பெற ஆதார் தேவை என கட்டாயப்படுத்தக்கூடாது. அதேசமயம் பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் உத்தரவு சரியானதே’’ எனக் கூறி தீர்ப்பளித்தது.

இதையடுத்து ஆதார் சட்டங்களில் திருத்தம் கொண்டு வரும் நடவடிக்கைகள் தற்போது தொடங்கியுள்ளன.

புதிய சட்டத்திருத்ததில் விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. சட்டத்திருத்தத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி வேண்டுமென்றால் ஆதாரை திரும்பப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு மக்களுக்கு வழங்கப்படுகிறது.