பாடு அஞ்சாதே பாடு… நீ பாடு… அஞ்சாதே பாடு… : சிறை வளாகத்தை மேடையாக்கிய கோவன்

Activist Kovan slams CM after his release on bail – from Vikatan E paper

________________________________________________________________________________________________________

‘மூடு டாஸ்மாக்கை மூடு, நீ ஓட்டு போட்டவன் மூடுவான்னு காத்திருப்பது கேடு’ என பாடிய குற்றத்திற்காக கடந்த அக்டோபர் 30-ம் தேதி கைது செய்யப்பட்டார் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பிரசார பாடகர் கோவன்.

‘இது கருத்துரிமைக்கு எதிரான போர்’ என எதிர்க்கட்சியினரும், மனித உரிமை ஆர்வலர்களும் கொந்தளித்தனர். கோவனுக்கு ஆதரவாக தமிழகம் எங்கும் ஆர்ப்பாட்டம், போராட்டம் என நீண்டு கொண்டே போனது.

தொடர்ச்சியான சட்டப் போராட்டத்தின் விளைவாக, நேற்று முன்தினம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆதிநாதன் கோவனுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து, புழல் சிறையில் அடைபட்டிருந்த கோவனை அழைத்து செல்ல, அவரது வழக்கறிஞர் மில்டன் உள்பட ம.க.இ.க. அமைப்பினர் புழல் சிறை வாசலில் திரண்டனர்.

சிறை நடவடிக்கைகள் முடிந்து வெளியே வந்த கோவனுக்கு தாரை, தப்பட்டை அடித்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ‘அடங்க மாட்டோம்… அடங்க மாட்டோம், பொய் வழக்குக்கு அஞ்ச மாட்டோம்’;  ‘ஓய மாட்டோம்… ஓய மாட்டோம் டாஸ்மாக் கடையை மூடும் வரை ஓய மாட்டோம்’ என மதுக்கடைகளுக்கு எதிரான கோஷம் வளாகம் எங்கும் எதிரொலித்தது. அதே நேரத்தில், ம.க.இ.க. பெண்மணி ஒருவர், ‘பாடு அஞ்சாதே பாடு. நீ பாடு அஞ்சாதே பாடு’ என பெருங்குரலெடுத்துப் பாட, கோவனும் சேர்ந்து கொண்டு பாடினார். பின்னர் சிறையில், தான் எழுதிய, ‘ஊரெல்லாம் பெருவெள்ளம் தத்தளிக்குது தமிழகம்’ என மழையை ஒட்டி அரசின் செயல்பாடுகளை விமர்சித்துப் பெருங்குரலெடுத்துப் பாட, புழல் சிறை வளாகமே உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஆழ்ந்தது.

இதன்பின்னர் நம்மிடம் பேசினார் கோவன்.

“என்னுடைய கைதைக் கண்டித்துப் போராட்டம் நடத்திய வழக்கறிஞர், மனித உரிமை ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வளவு பெரிய உணர்ச்சிக் கொந்தளிப்பை என்னுடைய கைது ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை. தமிழக அரசு என்ன அடக்குமுறையைக் கையாண்டாலும் என் பாட்டு ஓயாது. கடைசி டாஸ்மாக் கடையை இழுத்து மூடும் வரை நான் பாடிக் கொண்டேயிருப்பேன்” என்றவரிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.

உங்களைக் கைது செய்தபோது என்ன நடந்தது?

“டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடுபவர்களை இந்த அரசுக்குப் பிடிக்கலை. அன்னைக்கு நள்ளிரவில் என் வீட்டுக்குள்ள புகுந்து குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தாங்க. எதற்குக் கைது செய்யறாங்கன்னு எனக்குத் தெரியல. எங்க அமைப்பினர் மக்கள் பிரச்னைகளுக்காக போராடறதால கைது இருக்கும்னுதான் நினைச்சேன். போலீஸ்காரங்க எந்த பதிலும் சொல்லலை. ‘என்னைக் கைது பண்ணக் கூடாதுன்னு’ என் மகன் போலீஸ்காரங்ககிட்ட சண்டை போட்டான். அவன் வழக்கறிஞருக்குப் படிச்சவன்.

ஒருகட்டத்துல, அரசுக்கு எதிராக பாடல் பாடியதற்காக தேசத் துரோக வழக்கு பதிவு செஞ்சிருக்கறதா சொன்னாங்க. நானும், டாஸ்மாக் கடையை மூடுன்னு பாடறது குத்தமான்னு கேட்டேன். எந்தப் பதிலும் சொல்லாம வேனில் ஏத்தினாங்க. அங்கிருந்து என்னை எங்க கூட்டிட்டுப் போறாங்கன்னுகூட சொல்லலை. உளவியல் ரீதியா ரொம்ப டார்ச்சர் பண்ணாங்க. அமைப்பைப் பத்தி தாறுமாறா பேசினாங்க. நானும், ‘நீங்க என்னை என்ன பண்ணாலும் நான் பாடிட்டுதான் இருப்பேன். என் பாட்டை நிறுத்த முடியாது’ ன்னு பதில் கொடுத்தேன். ஒருவழியாக மாஜிஸ்திரேட் முன்னாடி ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைச்சாங்க”.

உங்கள் பாட்டு இந்தளவுக்கு மக்கள் மத்தியில பிரபலமாகும் என்று எதிர்பார்த்தீர்களா?

“நிச்சயமாக எதிர்பார்க்கல. எவ்வளவோ மேடைகள்ல பாடிட்டு இருக்கோம். சிலர் நின்னு கேட்பாங்க. சிலர் கண்டுக்காம போவாங்க. நாங்க எதுக்காக பாடறோம்னு இப்ப மக்கள் புரிஞ்சிக்கிட்டாங்க. என்னோட கைது மூலம் போராட்டத்தோட வேகம்தான் அதிகரிச்சிருக்கு. முதலமைச்சர் பாஷையில சொல்லனும்னா, துரதிஷ்டவசமாக என் பாட்டை நாடு முழுக்க கொண்டு போயிட்டாங்க. எனக்கு ஆதரவு கொடுத்த ஊடகங்களுக்கு ரொம்ப நன்றி”.

அடுத்து என்ன செய்யப் போறீங்க?

“இந்த டாஸ்மாக் கடைகளால பள்ளிக்குப் போற பசங்கள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரையும் மூழ்கடிக்குது. பல்லாயிரம் குடும்பப் பெண்கள் தாலியை இழந்துவிட்டு தவிக்கறாங்க. பல வீடுகள்ல சரியான சாப்பாடே இல்லை. இவங்களை போதையிலேயே வச்சிருக்கணும்னு அரசாங்கம் நினைக்குது. அப்பத்தான் போராட்டம் நடக்காதுன்னு நினைக்கறாங்க.

அது ரொம்ப தப்பு. இப்ப மக்கள் வீதிக்கு வர ஆரம்பிச்சுட்டாங்க. நாங்க வீதியிலதான் பாடறோம். நாங்க சிலர்தான். ஆனா, இப்ப மக்கள் எங்களுக்கு ஆதரவு கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. இவங்களுக்காக இன்னும் வேகமா பாட்டு பாடப் போறேன். டாஸ்மாக் கடைகளை ஒட்டுமொத்தமா அழிக்கற வரைக்கும் நான் பாடுவேன்” என்றபடியே, ‘மூடு… டாஸ்மாக்கை மூடு’ என புழல் சிறை வளாகத்தை மேடையாக்கி, தாரை தப்பட்டையை அடித்துக் கொண்டே கோபக் கண்களோடு பாட ஆரம்பித்தார் மக்கள் கலைஞன் கோவன்.

இனி அவர் பாட்டை எந்த அரசாலும் நிறுத்த முடியாது!

ஆ.விஜயானந்த்

படங்கள்: குமரகுருபரன்

நன்றி : விகடன் ஈ பேப்பர்

______________________________________________________________________________________________________________