பழம்பெரும் பிரபல நடிகர் நீலு காலமானார்..


பழம்பெரும் நடிகர் நீலு காலமானார். அவருக்கு வயது 82. ஆர். நீலகண்டன் என்ற இயற் பெயர் கொண்ட நீலு நாடகம் மூலம் திரைப்பட நடிகரானவர். நீலு என்ற பெயரில் இவர் நாடகங்களில் அறிமுகமானவர். நாடகம், சினிமா, டிவி நாடகம் என பலவற்றிலும் இவர் நடித்துள்ளார்.

7000க்கும் மேற்பட்ட நாடகங்களிலும், 160 படங்களிலும் நடித்துள்ளார் நீலு. மறைந்த சோ ராமசாமியின் தம்பி அம்பியுடன் இணைந்து விவேகா பைன் ஆர்ட்ஸ் என்ற நாடக கம்பெனியை ஆரம்பித்து நாடகம் போட்டு வந்தார். முகம்மது பின் துக்ளக், என்று தணியும் இந்த சுதந்திர தாகம் உள்ளிட்ட நாடகங்களில் நடித்துள்ளார். கிரேஸி மோகன் நாடகங்களிலும் நடித்து வந்தார். ஆயிரம் பொய் படம் மூலம் சினிமாவில் நுழைந்தவர் பல படங்களில் நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். அதில் குறிப்பிடத்தக்க பாத்திரத்தை ஏற்ற படங்கள் – கெளரவம், அவ்வை சண்முகி, காதலா காதலா, பம்மல் கே. சம்பந்தம், அந்நியன், ரெண்டு, கல்யாண சமையல் சாதம், திரிஷா இல்லன்னா நயன்தாரா ஆகியவை.

கடந்த 6 மாதமாகவே அவருக்கு உடல் நலக்குறைவு இருந்து வந்தது. உடல் நிலை மோசமடைந்த நிலையில் இன்று உயிர் பிரிந்தது. இவரது மனைவி சாந்தா. இவர்களுக்கு அர்ஜூன், பரத் என்ற இரண்டு மகன்கள். வெளிநாட்டிலிருந்து மகன் வரவேண்டும் என்பதால் இறுதிச்சடங்கு நாளை மறுநாள் காலை 9 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் நீலுவின் மரணத்திற்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. வேலை, நாடகம், சினிமா என எப்போதுமே பிஸியாக இருந்தவர் நீலு. இவரது காமெடி நடிப்புக்கென்று தனி ரசிகர் கூட்டமே இருந்தது. அவருடன் நடித்த பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பணிக்கு செல்லும் பெண்களை இதைவிடக் கேவலமாக சொல்ல முடியாது: எஸ்.வி.சேகரை விளாசிய நீதிபதி

நீட் தோ்வில் மாணவியின் ஆடையை கழற்றி சோதனை: பாடகி சின்மயி கண்டனம்..

Recent Posts