பொன்.ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்துக்கு ‘சீமராஜா’ என தலைப்பிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.
இன்று (பிப்ரவரி 17) தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் சிவகார்த்திகேயன். அதனை முன்னிட்டு பொன்ராம் இயக்கத்தில் அவர் நடித்து வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. ‘சீமராஜா’ என பெயரிடப்பட்டுள்ள இப்படம் செப்டம்பர் 13-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறையில் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மற்றும் ‘ரஜினிமுருகன்’ ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயன் – பொன்ராம் இணைந்துள்ள ‘சீமராஜா’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
சமந்தா, சூரி, நெப்போலியன், சிம்ரன், லால், ராஜேந்திரன், மனோபாலா மற்றும் யோகிபாபு ஆகியோர் சிவகார்த்திகேயனோடு நடித்து வருகிறார்கள். இசை – இமான், ஒளிப்பதிவு – பாலசுப்பிரமணியம், எடிட்டிங் – விவேக் ஹர்ஷன், பாடல்கள் – யுகபாரதி, கலை இயக்குநர் – முத்துராஜ், சண்டைப் பயிற்சி – அனல் அரசு, கிராபிக்ஸ் – கமலக்கண்ணன், உடைகள் வடிவமைப்பு – அனு பார்த்தசாரதி மற்றும் எகா லக்கானி ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். 24 ஏ.எம் நிறுவனம் சார்பில் ராஜா தயாரித்து வருகிறார்.
தென்காசியில் படத்தின் பிரதான காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுற்ற பின், ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் சிவகார்த்திகேயன்.