முக்கிய செய்திகள்

நடிகர் சங்கம் மௌனப் போராட்டம் : ரஜினி,கமல் பங்கேற்பு..


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் தென்னிந்திய நடிகர் சங்கம் இன்று அறவழி போராட்டத்தை தொடங்கியது. போராட்டத்தில் ரஜினி,கமல் உள்ளிட பல நடிகர்,நடிகைகள் பங்கேற்றுள்ளனர்.

தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகின்றன.

இந்நிலையில், மக்களின் போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் விதமாகவும் ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை 9 மணி முதல் 1 மணி வரை அறவழி கண்டன போராட்டம் நடத்துகிறது. போராட்டத்தின் முடிவில், தீர்மானமும் நிறைவேற்றப்பட உள்ளது.

நடிகர் சங்கம் முன்னெடுத்த இந்தப் போராட்டத்துக்கு சுமார் 3,000-க்கும் மேற்பட்ட நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி உறுப்பினர்களுக்கு தனித்தனியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசியலில் முழு வீச்சில் செயல்பட்டுவரும் கமல், ரஜினி இன்றைய அறவழி போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் சங்கம் நடத்தும் அறவழிப் போராட்டத்தில் நடிகர் சங்கத்தலைவர் நாசர், துணைத்தலைவர் பொன்வண்ணன், நடிகர்கள் சிவக்குமார், விஜய் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், பெஃப்சி ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். நடிகர் விஜய் போராட்டம் துவங்கும் முன்னரே போராட்டக்களத்துக்கு வந்தடைந்தார்.