நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 67 பட பூஜை வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 67 படத்தின் பூஜை வீடியோவை தற்போது செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
அதில் நடிகர்கள் அர்ஜுன், மன்சூர் அலி கான், நடிகைகள் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உள்ளனர். இது தொடர்பான காட்சிகள் வீடியோவில் இடம் பெற்றுள்ளன.
நடிகை த்ரிஷா, தளபதி 67 படத்தில் நடிக்கிறார் என்ற அறிவிப்பை இன்று ( பிப்ரவரி 1) பிற்பகல் அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் வெளியிட்டனர். 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜய்யுடன் நடிகை த்ரிஷா இணைந்து நடிக்க உள்ளார்.
பூஜைக்கு வரவில்லை என்றாலும் பூஜை வீடியோவுக்கு த்ரில்லர் பிஜிஎம்மை கொடுத்து இசையமைப்பாலர் அனிருத் விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.
தளபதி 67 திரைப்படத்தை முழுக்க முழுக்க தன் பாணியில் உருவாக்கி வருகிறார் லோகேஷ். இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் படத்தில் விஜய் நடிக்கிறார்.
இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரிக்கிறார். நேற்று முதல் படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் பட்டியலை ஒவ்வொன்றாக படக்குழு அறிவித்து வருகிறது. அதன்படி பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுன், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் மிஷ்கின், நடிகை பிரியா ஆனந்த், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் மற்றும் நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக பட்டியலை வெளியிட்டனர்.