முக்கிய செய்திகள்

விஜய் சேதுபதிக்கு பாமக தலைவர் ராமதாஸ் வாழ்த்து..


விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் பிடித்த நடிகர். இவர் தன் நிஜ வாழ்க்கையில் மிகவும் எளிமையானவர், அவர் இதை பல இடங்களில் நிரூபித்துள்ளார்.
இந்நிலையில் விஜய் சேதுபதி சமீபத்தில் தான் நடித்த விளம்பரத்தில் கிடைத்த ரூ.50 லட்சத்தை மறைந்த மாணவி அனிதாவின் நினைவாக அரியலூர் மாவட்ட கல்வி உதவிக்காக கொடுத்துள்ளார்.
இந்நிலையில் இந்த நற்பண்பை பாராட்டி பிரபல அரசியல் பிரமுகரும் பாமக தலைவருமான ராமதாஸ் தன் வாழ்த்துக்களை அவருக்கு கூறியுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி அணில் சேமியா விளம்பரத்தில் நடித்தற்காக கிடைத்த ரூ.50 லட்சத்தில் ரூ.49.70 லட்சத்தை அரியலூர் மாவட்டத்தில் உள்ள 774 அங்கன்வாடிகள், ஹெலன் கெல்லர் செவித்திறன் குறைந்தோர் பள்ளி, தமிழ்நாடு முழுவதும் உள்ள 10 அரசு பார்வையற்றோர் பள்ளிகள், 11 செவித்திறன் குறைந்தோர் பள்ளிகள் ஆகியவற்றின் மேம்பாட்டுக்காக தமிழக அரசிடம் வழங்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.
தகுதியிருந்தும் மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் போன மாணவி அனிதாவின் நினைவாக இந்த உதவியை செய்திருக்கிறார். இந்த நல்ல மனதிற்கும், நல்ல முயற்சிக்கும் பாராட்டுக்கள்.

நடிகர் விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை என்ற திரைப்படத்தை சில மாதங்களுக்கு முன் நான் பார்த்து, ரசித்து, பாராட்டினேன். வணிக நோக்கத்தை மட்டுமே அடிப்படையாகக் கொள்ளாமல் சமூகநல நோக்கம் கொண்ட பல திரைப்படங்களில் விஜய் சேதுபதி நடித்து வருவது சிறப்பு. அதேபோல், தமது புகழை பணம் ஈட்டி சேர்ப்பதற்கான கருவியாக மட்டும் கருதாமல், மக்களிடம் நல்ல கருத்துக்களைக் கொண்டு செல்வதற்காக பயன்படுத்துவதும், ஈட்டிய பணத்தை நற்பணிகளுக்காக வழங்குவதும் உயர்சிறப்பு.

அரியலூர் மாவட்டம் கல்வியில் மட்டுமின்றி, தனிநபர் வருவாய் உள்ளிட்ட சமூக, பொருளாதார குறியீடுகளிலும் மிகவும் பின்தங்கியுள்ளது. அம்மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக பாட்டாளி மக்கள் கட்சி பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அம்மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக நடிகர் விஜய் சேதுபதியும் உதவியிருப்பது வரவேற்கத்தக்கது.

விஜய் சேதுபதியின் இந்த உதவி திரையுலகைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் நல்ல முன்னுதாரணமாக அமைய வேண்டும். விஜய் சேதுபதி எந்த நோக்கத்திற்காக இந்த உதவியை வழங்குகிறாரோ, அந்த நோக்கத்திற்காக மட்டும் அந்த நிதி பயன்படுத்தப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்