தொழிலதிபர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை அமலாபால், போலீஸில் அளித்த புகாரின் பேரில் கொட்டிவாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
நடிகை அமலாபால் தமிழ் மற்றும் மலையாளப்படங்களில் முன்னணி நடிகையாக உள்ளார். டைரக்டர் விஜயை திருமணம் செய்த இவர் பின்னர் விவாகரத்து பெற்றார். புதுச்சேரி முகவரியில் சொகுசு கார் வாங்கிய வழக்கில் ரூ.20 லட்சம் வரி ஏய்ப்பு செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதில் இவர் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று கொச்சியில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரான அமலாபாலை போலீசார் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். வரும் பிப்ரவரி 3-ம் தேதி மலேசியாவில் நடைபெற உள்ள டான்சிங் தமிழச்சி என்ற பெண்களுக்கான கலைநிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.
இதற்காக அமலாபால் உள்ளிட்ட நடிகைகள் பலரும் நடனப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதில் கலந்து கொள்வதற்காக நடிகை அமலாபாலும் கடந்த சில தினங்களாகவே தி.நகரில் உள்ள ஸ்ரீதர் என்பவர் டான்ஸ் பள்ளியில் தீவிரமாக நடன பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர், அழகேசன் என்பவர் தனக்கு பாலியல் ரீதியான அணுகுமுறையில் பேசியதாக நடிகை அமலாபால் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அமலாபாலின் புகாரின் பேரில் கொட்டிவாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் அழகேசன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்மீது 354A (பெண்ணின் மாண்புக்கு களங்கம் கற்பித்தல்), 509( பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தல்) , பிரிவு 4 of (பெண் வன்கொடுமை சட்டம்) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்தப்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“டான்ஸ் ரிகர்சல் பண்ணும்போது ஒருவர் வந்து மோசமாக பேசினார். நான் மலேசியாவிற்கு டான்சிங் தமிழச்சி என்ற நிகழ்ச்சிக்காக போகிறேன். அதற்காக ஸ்ரீதர் மாஸ்டர் டான்ஸ் பள்ளியில் பிராக்டிஸ் பண்ணுகிறேன். அங்கு வந்த ஒரு நபர் என்னை அணுகினார். அவர் அந்த டான்ஸ் குரூப்பில் உள்ள நபர்களுடன் தொடர்பில் இருப்பவர் என்று நினைக்கிறேன். அவர் நான்கைந்து நாட்களாக வருகிறார்.
இன்று நான் இருக்கும் நேரத்தை சரியாக தெரிந்து வருகிறார். என்னை அணுகி பணத்துக்காக என்னை வளைப்பது போல் ஆசை வார்த்தை பேசினார். நான் தனியாக சம்பாதிக்கும் பெண் இது போன்ற பாலியல் ரீதியான அணுகுமுறை பார்த்து எனக்கு அதிர்ச்சியானது. அதனால் இது குறித்து தி.நகர் துணை ஆணையரிடம் புகார் அளித்தேன்.
என்னைப்போன்று தனியாக இருக்கும் உழைக்கும் பெண்கள் இதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். மற்ற பெண்களுக்கும் இது போன்று நடக்கக்கூடாது இது ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் புகார் அளித்தேன். போலீஸார் நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுத்தார்கள் அவர்களுக்கு நன்றி.” என்று தெரிவித்தார்.