முக்கிய செய்திகள்

எல்லாம் உள்கட்சி சதி: குடிபோதையில் கார் ஓட்டியதாக சிக்கிய பாஜக நடிகை குமுறல் (வீடியோ)

குடிபோதையில் கார் ஓட்டி வந்ததாக தம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அந்தப் பிரச்சினை பெரிதானதற்கு பாஜகவில் உள்ள தனக்கு எதிரானவர்கள் செய்த சதியே காரணம் என்று நடிகை காயத்ரி ரகுராம் கூறியுள்ளார். 

இதுகுறித்து தாமே பேசிய வீடியோவை அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நடிகையும், நாட்டிய கலைஞருமான காயத்ரி ரகுராம் குடிபோதையில் கார் ஓட்டி வந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர் பாஜகவின் இளைஞர் அமைப்பான யுவமோர்ச்சாவில் நிர்வாகியாகவும் உள்ளார்.

சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற பார்ட்டியில் கலந்து கொண்ட நடிகை காயத்ரி ரகுராம், விருந்து நிகழ்ச்சி முடிவடைந்து, நள்ளிரவு நேரத்தில் அடையாறில் உள்ள வீட்டுக்கு காரில் சென்றுள்ளார்.

அப்போது, சத்யா ஸ்டூடியோ அருகே போக்குவரத்து போலீசார் அவரது காரை மறித்து சோதனை செய்துள்ளனர். இதில் நடிகை காயத்ரி ரகுராம் குடித்துவிட்டு காரை ஓட்டி வந்ததாக போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே, காருக்குள் இருப்பது காயத்ரி ரகுராம் என்பதை அறிந்து அங்கு கூட்டம் கூடி விட்டது. எனினும், காரை விட்டு விட்டு செல்லுமாறு காயத்ரி ரகுராமிடம் கூறியுள்ளனர். அதற்கு அவர், தன்னை வீட்டில் கொண்டு வந்து விட்டுவிட்டு காரை எடுத்து வருமாறு போலீசாரிடம் கூறியுள்ளார். அதன் படியே போலீசார் ஒருவர் காயத்ரி ரகுராமை காரில் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டு விட்டு காரை எடுத்து வந்துள்ளார். 

பின்னர், குடிபோதையில் கார் ஓட்டி வந்ததற்கான அபராதத்தை வந்து நடமாடும் நீதிமன்றத்தில் செலுத்தி விட்டு போலீசாரிடமிருந்த காரை மீட்டுச் சென்றுள்ளார். இந்தத் தகவல்கள், அனைத்து தொலைக்காட்சிகளிலும், இணையதளங்களிலும் வெளியாகின.

இந்நிலையில், இந்தப் பிரச்னையில் தாம் சிக்குவதற்கு தாம் சார்ந்துள்ள பாஜகவே காரணம் என்றும், தமக்கு எதிராக யோரோ சதி செய்வதாகவும் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

சார்லி சாப்ளின் உட்பட பல படங்களில் நாயகியாக நடித்தவர் காயத்ரி ரகுராம். பின்னர், விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கடந்த ஆண்டு பிரபலமாக பேசப்பட்டார்.