புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு நலவாரியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

“புலம்பெயர் தமிழர் நல வாரியம்” என்ற புதிய வாரியம் தோற்றுவிக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
எங்கே தமிழர்கள் வாழ்ந்தாலும், அவர்களுக்கு தமிழ்நாடுதான் தாய்வீடு. அவர்கள் மீது அன்பு செலுத்துவது மட்டுமல்ல, அரவணைப்பதும், பாதுகாப்பதும் தாய்த்தமிழ்நாட்டின் கடமையாகும்.” எனக் குறிப்பிட்டு ’புலம்பெயர் தமிழர் நல வாரியம்’ அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
”உலகளாவிய இனம் ஒன்று உண்டென்றால் அது தமிழினம் தான். தொன்மை மிக்க இந்த தமிழினம், பரவிய நாடுகளின் பட்டியல் பெரிது. தொல் பழமை நாகரிகப் பாரம்பரியம் உள்ள சில இனங்களில் தமிழினமும் ஒன்று! அப்படி கடல் கடந்து, நாடுகள் கடந்து வாழும் வெளிநாடுவாழ் தமிழினத்துக்கு நம்பிக்கை தரும் வகையில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

உலகின் பெரும்பான்மை நாடுகளில் வாழும் இனமாக நம்முடைய தமிழினம்தான் இருக்கிறது. 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிக எண்ணிக்கையிலும், 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள். வணிகம் செய்வதற்காகச் சென்றார்கள். வாழ்வதற்காகச் சென்றார்கள். வேலைகள் தேடிச் சென்றார்கள். கடற்கோள்களில் இருந்து தப்புவதற்காகச் சென்றார்கள். தப்பிச் செல்வதற்காகச் சென்றார்கள். புதிய இடங்களை அறிவதற்காகச் சென்றார்கள். இப்படிப் பலருக்கும் பல நோக்கங்கள் இருந்திருக்கும். இத்தகைய இடப்பெயர்வுகள் காலம்காலமாக நடந்து வருகின்றன.

எங்கே தமிழர்கள் வாழ்ந்தாலும், அவர்களுக்கு தமிழ்நாடுதான் தாய்வீடு. அவர்கள் மீது அன்பு செலுத்துவது மட்டுமல்ல, அரவணைப்பதும், பாதுகாப்பதும் தாய்த்தமிழ்நாட்டின் கடமையாகும். இப்படி பல்வேறு நாடுகளுக்குச் சென்று வாழும் தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கவும், உதவிகளைச் செய்யவும் தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளது. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் உளப்பூர்வமான மற்றும் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வெளிநாடுவாழ் தமிழர் நலச்சட்டம் 2011-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் நாள் கழக அரசால் இயற்றப்பட்டுள்ளது.

​”புலம்பெயர் தமிழர் நலவாரியம்” ஒன்றை உருவாக்கி அவர்களுக்கு நலத் திட்டங்களை செயல்படுத்துவோம் என்று அறிவித்தோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் காரணமாக நம்மால் அமைக்க முடியவில்லை. அடுத்து வந்த ஆட்சியாளர்களும் இதனை அமைக்கவில்லை. இந்த நிலையில், “புலம்பெயர் தமிழர் நல வாரியம்’’ அமைக்கப்படும். அரசு மற்றும் புலம்பெயர்ந்த தமிழர் பிரதிநிதிகள் பதிமூன்று பேரைக் கொண்டு இந்த வாரியம் அமைக்கப்படும். 5 கோடி ரூபாய், “புலம்பெயர் தமிழர் நலநிதி’’ என மாநில அரசின் முன்பணத்தைக் கொண்டு உருவாக்கப்படும்.

மூலதனச் செலவினமாக 1 கோடியே 40 இலட்சம் ரூபாய் மற்றும் தொடர் செலவினமாக, நலத்திட்டங்கள் மற்றும் நிர்வாக செலவினங்களுக்காக 3 கோடி ரூபாய் ஆண்டுதோறும் ஒதுக்கப்படும்.
• புலம்பெயர் தமிழர் குறித்த தரவு தளம் (Database) ஏற்படுத்தப்படும். இவ்வாரியத்தில் பதிவு செய்பவர்களுக்கு விபத்து, ஆயுள் காப்பீடு திட்டம் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டம், அடையாள அட்டையுடன் வழங்கப்படும்.

• வெளிநாட்டிற்குச் செல்லும் குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த தமிழர்கள் பணியின்போது இறக்க நேரிட்டால் அவர்கள் குடும்பத்தில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை வழங்கப்படும்.

• கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காகத் தமிழர்கள் புலம்பெயரும்போது, பயண புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்படுகின்றது. ஆனால் இப்பயிற்சியானது சென்னை மட்டுமின்றி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், பெரம்பலூர், சிவகங்கை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும் நடத்தப்படும்.

• வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ள தமிழர்களுக்கு ஆலோசனை பெற வசதியாக கட்டணமில்லா தொலைபேசி வசதி மற்றும் வலைதளம், கைப்பேசி செயலி (Mobile application) அமைத்துத் தரப்படும்.

• வெளிநாடுகளில் புலம்பெயர்ந்துள்ள தமிழர்களுக்கு என தனியாக சட்ட உதவி மையம் அமைக்கப்படும்.

• கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக சுமார் ஏழு இலட்சம் தமிழர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்களில் பலர் வேலையிழந்தும் திரும்பியுள்ளனர். இவர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில், தமிழ்நாடு திரும்பியவர்களுக்கு குறு தொழில்கள் செய்திட, அதிகபட்சமாக இரண்டரை இலட்சம் ரூபாய் மானியத்துடன் கூடிய கடன் வசதி செய்து தரப்படும். இதற்கென ஆறு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

• வெளிநாடுவாழ் தமிழர்களில் பெரும்பாலானோர் தங்களது சேமிப்பினை தாய்நாட்டில் பாதுகாப்பான முதலீடு செய்ய ஆர்வத்துடன் உள்ளனர். இதற்காகப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தி, இவர்களது முதலீடுகளை அரசு மற்றும் தொழில் நிறுவனங்களில் பாதுகாப்பான முதலீடு செய்ய ஏதுவான சூழல் உருவாக்கப்படும்.

• புலம்பெயர்ந்த தமிழர்கள், தாம் பிறந்து வளர்ந்த சொந்த ஊரில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்திடவும், ஊர்மக்களின் கல்வி மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்திடவும் “எனது கிராமம்” என்கின்ற திட்டம் துவங்கப்படும். இதில் பள்ளி, மருத்துவமனை, நூலகம் போன்ற கட்டடங்களைக் கட்டித் தரவும், சீரமைத்திடவும் புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

• இதற்கான அனைத்து ஒருங்கிணைப்பும் அரசின் தரப்பில் எளிய முறையில் செய்து தரப்படும்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்கு சென்று அங்கே நிரந்தரமாக குடியுரிமை பெற்றுள்ள தமிழர்களின் வாரிசுகளுக்கு தமிழ் கற்கும் ஆர்வத்தை உருவாக்கிடவும், தமிழ் மொழியினை கற்றிட ஏதுவாகவும், தமிழ் இணைய கல்விக் கழகம் மூலமாக குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கப்படும். அதுமட்டுமின்றி, அங்குள்ள கல்வி நிறுவனங்களில் தமிழ் பயிற்றுவிப்பதற்காக ஊக்கத்தொகை மற்றும் தமிழ் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படும்.

• புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் அந்தந்த நாடுகளில் உருவாக்கியுள்ள நலச்சங்கங்கள் ஒருங்கிணைக்கப்படும். இச்சங்கங்களின் மூலமாக நம்முடைய கலை, இலக்கியம் மற்றும் பண்பாடு பரிமாற்றங்கள் நடைபெறும். இதற்காக 4 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

• பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாகவும், அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவும், வெளிநாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12-ம் நாள் “புலம்பெயர்ந்த உலகத்தமிழர் நாளாகக்’’ கொண்டாடப்படும்.

வெளிநாட்டில் உள்ள தமிழர் நலனைப் பேணிட, புலம்பெயர் தமிழர் நல வாரியம் மற்றும் புலம்பெயர் தமிழர் நலநிதிக்காக 6 கோடியே 40 இலட்சம் ரூபாய், அவர்களுக்கான நலத்திட்டங்களுக்காக 8 கோடியே 10 இலட்சம் ரூபாய் மற்றும் வெளிநாட்டில் தமிழ்க் கல்வி, கலை, பண்பாடு மற்றும் கருத்துப் பரிமாற்றத்திற்காக 5 கோடியே 50 இலட்சம் ரூபாய் என மொத்தம் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தொண்டு செய்வாய் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே என்ற வாசகத்தை நெஞ்சில் நிலைநிறுத்தி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழியில் செயல்பட்டு வரும் இந்த அரசு என்றென்றைக்கும், தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றும் விளக்காகவும், அவர்களின் உற்றதோழனாகவும் விளங்கும் என்பதில் ஐயமில்லை.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய உச்சம் தொட்ட சிலிண்டர் விலை:ரூ.15 உயர்வு

ராகுல், பிரியங்கா உள்ளிட்ட 5 பேருக்கு லக்கிம்பூர் செல்ல அனுமதி வழங்கியது உத்தரபிரதேச அரசு..

Recent Posts