அஸ்வின், முகமது ஷமி ஆகியோரின் நெருக்கடி தரும் பந்துவீச்சில் சிக்கிய ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியுள்ளது.
அடிலெய்டில் நடந்து வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் 323 ரன்கள் வெற்றி இலக்கைத் துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது.
இன்னும் வெற்றிக்கு 219 ரன்கள் தேவைப்படும் நிலையில் நாளை ஒரு நாள் மட்டுமே உள்ளது,
கையில் 6 விக்கெட்டுகளை வைத்துள்ள ஆஸ்திரேலிய அணி. மார்ஷ் 31 ரன்களுடனும், ஹெட் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறி வருவதால், அஸ்வினின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இன்று திக்குமுக்காடுவதைக் காண முடிந்தது.
வழக்கமான சுழற்பந்துவீச்சைக் காட்டிலும் வித்தியாசமாக இருக்கும், கணிக்க முடியாத அஸ்வினின் சுழற்பந்துவீச்சை ஆஸி. பேட்ஸ்மேன்களால் எதிர்கொள்ள முடியவில்லை.
அஸ்வினின் பந்துவீச்சு ஒருபுறம் நெருக்கடி தர, மற்றொரு திசையில் பும்ரா, இசாந்த் சர்மா, ஷமி ஆகியோர் தங்களின் துல்லியத் தன்மை தவறாமல், லைன் லென்த்தில் பந்துவீசினார்கள்.
இதனால், 323 ரன்கள் இலக்கை துரத்திச் செல்வதில் ஆஸ்திரேலிய அணிக்கு பகீரதப் பிரயத்தனமாக இருந்து வருகிறது.
அடிலெய்ட் மைதானத்தில் இதுவரை 300 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்தது 117 ஆண்டுகளில் இல்லை.
கடைசியாக, 1902-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 315 ரன்களை ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகளை இழந்து சேஸிங் செய்ததே அதிகபட்சமாகும்.
அதன்பின் எந்த அணியும் இங்கு வந்து 4-வது இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயித்தது இல்லை. ஒருவேளை இந்த இலக்கை ஆஸ்திரேலியா துரத்திப் பிடித்தால், 117 ஆண்டுகளில் சாதனையாக இருக்கும்.
அதேசமயம், இந்திய அணி இதுவரை தனது ஆஸ்திரேலியப் பயணத்தில் முதல் டெஸ்ட்டை வென்றது இல்லை.
ஒருவேளை இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாலே அது மிகப்பெரிய சாதனையாக இருக்கும்.
இதுவரை 11 முறை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் மோதிய இந்திய அணி 9 முறை முதல் டெஸ்ட் போட்டியில் தோற்றுள்ளது.
ஆனால், தற்போதுள்ள சூழலில் மார்ஷ், ஹெட் தவிர்த்து விக்கெட் கீப்பர் பைனே, லயான் மட்டுமே ஓரளவுக்கு நிலைத்து ஆடக்கூடிய பேட்ஸ்மேன் என்று சொல்ல முடியும். கடைசி வரிசை பேட்ஸ்மேன்களான ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசல்வுட் ஆகியோரை அஸ்வின் நிற்கவைத்துப் படம் காட்டி விடுவார். ஆதலால், நாளை காலை இரு ‘செஷன்களில்’ இந்திய வீரர்கள் விரைவாக விக்கெட்டுகளைக் கழற்றிவிட்டால் அடிலெய்ட் டெஸ்ட் வெற்றி இந்தியாவுக்கே என்பதை மறுக்க முடியாது.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 250 ரன்களுக்கும், ஆஸ்திரேலிய அணி 235 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. இதையடுத்து, 15 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 2-வது இன்னிங்ஸை ஆடி 307 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. முதல் இன்னிங்ஸில் கூடுதலாக இருந்த 15 ரன்களையும் சேர்த்து மொத்தம் 323 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.
ஆரோன் பிஞ்ச், ஹாரிஸ் ஆட்டத் தொடங்கினார்கள். முதல் இன்னிங்ஸில் விரைவாக விக்கெட்டை பறிகொடுத்த பிஞ்ச் இந்த முறை நிதானமாக பேட் செய்தார்.
ஆனால், அஸ்வின் பந்துவீசத் தொடங்கியவுடன் பேட்டிங் ஆட்டம் கண்டது. ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து 11 ரன்களில் பிஞ்ச் வெளியேறினார்.
அதன்பின் கவஜா களமிறங்கினார். முகமது ஷமியும், பும்ராவும் துல்லியமாகப் பந்துவீசி நெருக்கடி அளித்து வந்தனர்.
ஷமி வீசிய 17-வது ஓவரில் சூப்பர் லென்த்தில் வந்த அந்தப் பந்தை அடிக்க முற்பட்டார் ஹாரிஸ். ஆனால், பந்து பேட்டில் பட்டு ரிஷப் பந்திடம் தஞ்சமடைந்தது. ஹாரிஸ் 26 ரன்களில் வெளியேறினார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கவாஜா கடந்த முதல் இன்னிங்ஸைப் போலவே பந்துகளை வீணடித்தார். ஆனால் ரன்களைச் சேர்க்க முடியாத அளவுக்கு இந்தியாவின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது.
அஸ்வின் வீசிய 24-வது ஓவரில் 42 பந்துகளைச் சந்தித்த கவஜா 8 ரன்கள் சேர்த்தநிலையில், ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஹேண்ட்ஸ்கம்ப் நீண்டநேரம் நிலைக்கவில்லை. 14 ரன்கள் சேர்த்த நிலையில், ஹேண்ட்ஸ்கம்ப், ஷமி வேகத்தில் மிட்விக்கெட்டில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
வெற்றிக்கு இன்னும் 219 ரன்கள் தேவைப்படும் நிலையில், இன்னும் ஆஸ்திரேலிய வசம் 6 விக்கெட்டுகள் கைவசம் இருக்கிறது.
மார்ஷ் 31 ரன்களுடனும், ஹெட் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்