அ.தி.மு.க கூட்டணிக்கு தே.மு.தி.க வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டாலும் கவலையில்லை என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி..

அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டால் கவலையில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அக்சய பாத்ரா தொண்டு நிறுவனம் மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் முதல்கட்டமாக தொடங்கப்பட்டுள்ளது.

திருவான்மியூரில் உள்ள அரசுப் பள்ளியில் ஆயிரம் சிறார்களுக்கு உணவு வழங்கும் வகையில், இந்த திட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கூட்டணி என்பது மதவாத, சாதிய கூட்டணி என மு.க.ஸ்டாலின் விமர்சித்திருப்பதாக செய்தியாளர்கள் கேட்டபோது, தங்கள் கொள்கைகள் வேறு, பாஜகவின் கொள்கைகள் வேறு என ஜெயக்குமார் பதிலளித்தார்.

அதிமுக கூட்டணி மக்களை நம்பிய கூட்டணி அல்ல, காசு பணத்தை நம்பிய கூட்டணி என கமல் கூறியிருப்பதாக செய்தியாளர்கள் கேட்டபோது, பட்ஜெட்டில் துறைவாரியாக நிதி ஒதுக்கியதை காசு பணம் என குறிப்பிடுகிறாரோ என்று ஜெயக்குமார் பதிலளித்தார்.

தங்கள் பலம் தங்களுக்கு தெரியும் என்றும், உரிய மரியாதை கொடுக்கும் இடத்திற்கே தேமுதிக செல்லும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் கூறியிருப்பது பற்றி கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள்,

தேமுதிகவுக்கு அதிமுக உரிய மரியாதை தரவில்லையா என வினவினர். கூட்டணி கதவு திறந்திருப்பதாகவும், யார் வேண்டுமானாலும் பேச வரலாம் என்றும்,

பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் ஜெயக்குமார் பதிலளித்தார். கூட்டணிக்கு வந்தால் “ஹேப்பி” என்றும், கூட்டணிக்கு வராவிட்டால் “டோன்ட் ஒர்ரி” என்றும் ஜெயக்குமார் கூறினார்.