அதிமுக கூட்டணியில் தேமுதிக ஐக்கியம் : விஜயகாந்த் முடிவு…

மக்களவை தேர்தல் கூட்டணி, தொகுதிப்பங்கீடு என்று அனைத்து கட்சிகளும் தற்போது பிஸியாக உள்ளன. அதிமுக – பாமக – பாஜக கூட்டணி உறுதியாகி தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டது. எதிரணியில் திமுக – காங்கிரஸ் கூட்டணியும் தொகுதி உடன்பாடு செய்து கொண்டன

விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக எந்த கூட்டணியில்? என்ற கேள்வி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அதிமுக கூட்டணிக்கு செல்லவே விஜயகாந்த் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால், அவர் பாமகவுக்கு நிகராக 7 மக்களவை மற்றும் 1 மாநிலங்களவை சீட் கேட்டதை அதிமுக தரப்பில் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதனால், கூட்டணி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது. இதற்கிடையே, தேமுதிகவை தனது பக்கம் கொண்டு வர திமுக தூண்டில் போட்டது.

இதற்காக, காங்கிரஸ் தனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியை குறைத்துக்கொள்ளவும் தயாரானது. எனினும், இந்த முயற்சியில் வெற்றி கிடைக்கவில்லை.

இந்நிலையில், நிர்வாகிகளுடன் விஜயகாந்த் இன்று தேமுதிக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, அதிமுக – பாஜக கூட்டணியில் இணைய பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தெரிகிறது. 5 மக்களவை தொகுதிகள் மற்றும் 1 மாநிலங்களவை சீட் கேட்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, இதற்கான குழு அதிமுகவின் தேர்தல் கூட்டணி குழுவை விரைவில் சந்தித்து பேச இருக்கிறது. எனினும், தேமுதிகவின் 5+1 கோரிக்கையை அதிமுக தரப்பு ஏற்றுக்கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.