20 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்: பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக

முழுமையான பட்டியல் — admk poruppalarkal 

தமிழகத்தில் 20 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான பொறுப்பாளர்களை அதிமுக நியமித்துள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இன்று காலையில் வருகை தந்தனர்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், முதலமைச்சர், துணை முதலமைச்சருடன் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்தியலிங்கம் மற்றும் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தின்போது, காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலில் பணியாற்றுவதற்கான பொறுப்பாளர்களை நியமித்து, அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ஆண்டிபட்டி தொகுதிகளுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோரும், பெரியகுளம் தொகுதிக்கு ஓ.பன்னீர் செல்வம், பார்த்திபன் எம்.பி. உள்ளிட்டோரும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், பெரம்பூர் தொகுதிக்கு மதுசூதனன், ஜெயக்குமார், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோரும், மானாமதுரை தொகுதிக்கு செங்கோட்டையன் உள்ளிட்டோரும், குடியாத்தம் தொகுதிக்கு தங்கமணி ஆகியோரும், விளாத்திக்குளம் தொகுதிக்கு எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி. வைத்திலிங்கம், பொறுப்பாளர்கள் 2 நாட்களில் பணிகளை தொடங்க உள்ளதாக தெரிவித்தார்.