முக்கிய செய்திகள்

2016 தேர்தலை ஊழல் பணத்தால் விலைக்கு வாங்கிய அதிமுக: ஸ்டாலின் அதிரடி குற்றச்சாட்டு

650 கோடி ரூபாய்க்கும் மேலான ஊழல் பணத்தைக் கொண்டு 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலையே “கொள்முதல்”செய்த அ.தி.மு.க வின் அதிகார அத்துமீறலை தி வீக் வார இதழ் அம்பலப்படுத்தி இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். வருமானவரித்துறையிடம் ஆதாரம் இருந்தும் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க விடாமல் தடுப்பது யார் என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அ.தி.மு.க ஆட்சியில் ஊழல் மூலம் கொள்ளையடித்த பணத்தை வாரி இறைத்து “2016 தமிழக சட்டமன்றத் தேர்தலையே” லஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கிய அதிர்ச்சி தகவல்களை “தி வீக்” ஆங்கில இதழ் வெளியிட்டிருக்கிறது. ஜனநாயகத்தின் குரல்வளையை முறித்துள்ள இந்த சதித் திட்டத்தை அ.தி.மு.க-வின் மின்துறை அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதன், வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த வைத்தியலிங்கம், இப்போது துணை முதலமைச்சராக இருக்கும் திரு ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் “கூட்டணி” அமைத்து நடத்தியிருக்கிறார்கள். தி.மு.க.விடமிருந்து வெற்றியை 1 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தட்டிப் பறிக்க, தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு 650 கோடி ரூபாய்க்கும் மேலான ஊழல் பணத்தை “எஸ். ஆர். எஸ் மைனிங்” என்ற கம்பெனி மூலமே விநியோகம் செய்துள்ளதற்கான அசைக்க முடியாத ஆதாரங்கள் வருமான வரித்துறையிடம் கிடைத்துள்ளது. இந்த பணம் அனைத்தும் அ.தி.மு.க வேட்பாளர்களுக்கும், வாக்காளர்களுக்கும் தாராளமாக விநியோகம் செய்யப்பட்டு, சுதந்திரமான, நேர்மையான தேர்தல் அடியோடு படுகுழிக்குத் தள்ளப்பட்டுள்ளது.
வருமானவரித்துறை கைப்பற்றிய ஆதாரங்களில் சட்டமன்றத் தொகுதியின் பெயர்கள், வாக்குச்சாவடி விவரங்கள், ஆண் – பெண் வாக்காளர்கள் எவ்வளவு பேர் என்று இந்த மூன்று அமைச்சர்களும் குறித்து வைத்திருந்த கணக்குப் புத்தகங்கள், துண்டுத் தாள்கள், தயாரிக்கப்பட்டிருந்த ரகசிய பண விநியோகப் பட்டியல்கள் அனைத்தும் கிடைத்துள்ளன. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் உள்ள வாக்காளர்களில் 70 சதவீதம் பேருக்கு பணம் கொடுத்த ஆதாரங்களை வருமான வரித்துறை கைப்பற்றியதோடு – நடிகர் திரு சரத்குமாருக்கு 2 கோடி ரூபாய் கொடுத்தது குறித்த கையெழுத்துடனான ஆதாரம் வருமான வரித்துறையிடம் பிடிபட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலையே அ.தி.மு.க ஆட்சி பணக் கட்டுகளை கொடுத்து பாழ்படுத்திய விவரங்கள் அனைத்தையும் வருமான வரித்துறை புலனாய்வுத்துறை டைரக்டர் ஜெனரலுக்கு 09.05.2017 அன்றே அத்துறையின் முதன்மை இயக்குனர் அனுப்பி வைத்துள்ளார். அதுமட்டுமல்ல- இந்த ஆதாரங்களையும் தகவல்களையும் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கும்படியும் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த முதன்மை இயக்குனரின் கடிதத்தின் மீது எடுத்து நடவடிக்கை என்ன? 650 கோடி ரூபாய்க்கும் மேலான ஆதாரங்கள் குறித்து தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை என்ன? என்பதெல்லாம் இதுவரை வெளியில் வராத மர்மங்களாகவே உள்ளன. அ.தி.மு.க-வின் இமாலயத் தேர்தல் ஊழலை திரைமறைவில் வைத்துக்கொண்டு அ.தி.மு.க ஆட்சியுடன் மத்தியில் உள்ள பா.ஜ.க. ஆட்சி நட்பு பாராட்டியது இப்போது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. அதேபோல், ‘ஊழலை ஒழிப்போம்’ என நாடு முழுவதும் பேசிக்கொண்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, அ.தி.மு.க அரசின் ஒரு மிகப்பெரிய ஊழலுக்கும், ஜனநாயகப் படுகொலைக்கும் துணை போயிருப்பது அராஜகத்தின் உச்சகட்டம்.

இந்த ரெய்டு மட்டுமல்ல – ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட விவகாரம், கரூர் அன்புநாதன், நத்தம் விஸ்வநாதன், திரு ஓ. பன்னீர்செல்வம், முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமியின் உறவினர்கள், தேசிய நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததார்கள் என்று அ.தி.மு.க-வினர் மீது நடத்திய அத்தனை வருமான வரித்துறை ரெய்டுகளையும் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு தன் கையில் வைத்துக்கொண்டு அ.தி.மு.க-வை மிரட்டி- இப்போது தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியும் வைத்துள்ளது. 2016 சட்டமன்ற தேர்தலை கோடிகளைக் கொடுத்து வாங்க தேர்தல் ஆணையம், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி, தேர்தல் டி.ஜி.பி. ஆகிய அத்தனை பேரும் உடந்தையாக இருந்து ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் சதித்திட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள்.

ஆகவே, வருமான வரித்துறை ரெய்டின் அடிப்படையில் அனுப்பப்பட்ட தகவல்கள் எங்கே? அதன்மீது இதுவரை நடவடிக்கை எடுக்காமல் தடுத்து வைத்திருக்கும் சக்தி எது? என்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையமும், வருமான வரித்துறையை தன் பொறுப்பில் வைத்திருக்கும் மத்திய அரசும் உடனடியாக வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும். 650 கோடி ரூபாய் கொடுத்து தமிழக சட்டமன்றத் தேர்தலையே “கொள்முதல்” செய்திருக்கும் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், தற்போதைய துணை முதலமைச்சர் திரு ஓ. பன்னீர்செல்வம் ஆகிய மூவரும் கிரிமினல் குற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். இந்த மூவருமே அப்போது சட்டமன்ற தேர்தல் வேட்பாளர்களாக போட்டியிட்டவர்கள். ஆகவே, இவர்கள் மீது வேட்புமனுவில் காட்டாத பணத்தை வைத்திருந்தார்கள் என்று கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியிருக்கிறார்.