அதிமுகவுடன் கூட்டணி வைத்தற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பாமக இளைஞர் சங்க செயலாளர் ராஜேஸ்வரி பிரியா ராஜினாமா செய்துள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்காக அதிமுக,பாஜக,பாமக மெகா கூட்டணி அமைத்துள்ளது.
மொத்தமுள்ள 40 இடங்களில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர தினகரன் அணி எம்எல்ஏ.,க்கள் பதவி நீக்கம் காரணமாக காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற உள்ளது.
அந்த தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு அளிக்கிறது.
அண்மைக்காலமாக அதிமுகவையும் பாஜகவையும் பாமக கடுமையாக விமர்சித்து வந்த நிலையில்,
தற்போது அதிமுக கூட்டணயில் பாமக இடம்பெற்றிருப்பது தமிழக மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பாமகவிலேயே உள்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது. பாமகவில் இளைஞர் சங்க செயலாளராக பொறுப்பு வகித்து வந்த ராஜேஸ்வரி பிரியா, அதிமுக கூட்டணி வைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த இளைஞர் சங்க செயலாளர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.
இது குறித்து ராஜேஸ்வரி பிரியா கூறுகையில், ‘பாமகவில் மாநில இளைஞர் சங்க செயலாளராக கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பொறுப்பு வகித்து வருகிறேன்.
தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்துள்ளது. இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
எனவே, தான் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நான் வகித்து வந்த பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன். இது பற்றி விரைவில் செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளேன்’.
இவ்வாறு ராஜேஸ்வரி பிரியா தெரிவித்துள்ளார். மேலும், இவரைப் போல பாமகவில் இன்னும் பல பொறுப்பாளர்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்தற்காக கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.