அதிமுக ஆட்சியில் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ரவுடி துரைமுத்துவை கைது செய்யும் முயற்சியில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு காவலர் சுப்பிரமணியன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனைத்தொடர்ந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூபாய் 50 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு பணி வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் எடப்படி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதனிடையே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் உருவப்படத்திற்கு நெல்லை சரக டிஐஜி அலுவலகத்தில் டிஜிபி திரிபாதி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில் அதிமுக ஆட்சியில் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டரில், “தூத்துக்குடியில் காவலர் சுப்பிரமணியன் வெடிகுண்டு வீசிக் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்!. அதிமுக ஆட்சியில் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை.
இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல்- காவலர்களின் பாதுகாப்பினை தமிழகக் காவல்துறை உறுதி செய்திட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.