அதிமுகவின் புதிய நாளிதழ் ‘நமது அம்மா’ தொடக்கம்


நமது அம்மா என்ற புதிய நாளிதழ் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக இன்று முதல் வெளியாகிறது.

எம்.ஜி.ஆர். அதிமுகவைத் தொடங்கிய சமயத்தில் கட்சி நடவடிக்கைகளை வெளியிட விரும்பி ‘அண்ணா’ என்ற நாளிதழைத் தொடங்கினார். அவரது மறைவுக்குப் பின் அதிமுகவை தன் கைக்குள் வைத்துக்கொண்ட ஜெயலலிதா 1988 ஆம் ஆண்டு டாக்டர் நமது எம்.ஜி.ஆர். என்ற நாளிதழைத் தொடங்கினார்.

ஜெயலலிதாவின் முழு கண்காணிப்பில் இயங்கிய நமது எம்ஜிஆரில் இடம்பெற்ற அனைத்தும் அவரது ஒப்புதலுடன் வெளியாகின. அவரது இறப்புக்குப் பின் இந்த நாளிதழை சிறையில் அடைந்து கிடைக்கும் சசிகலாவின் கும்பல் கைப்பற்றியுள்ளது. கட்சியின் குரலாக இருந்த ஜெயா டிவியும் அந்த கும்பல் வசம் மாட்டிக்கொண்டது.
இதனால், அதிமுகவின் ஊடகக் குரல் முடங்கிய நிலையில் இன்று ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளில் நமது அம்மா என்ற புதிய நாளிதழை அதிமுக தொடங்கியுள்ளது. இது அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் டாக்டர் நமது எம்ஜிஆர் நாளிதழும் சசி கும்பலுக்குச் சாதகமான நாளிதழாக தொடர்ந்து வெளியாகும்.