தமிழகம் முழுவதும் அதிமுக ஊராட்சி செயலாளர் பதவிகள் கலைப்பு : நிர்வாகிகள் கலக்கம்..

தமிழகம் முழுவதும் அதிமுக கிளைக் கழகச் செயலாளர் பதவிகள் ஒட்டுமொத்தமாக கலைக்கப் படுவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் அறிவித்திருக்கிறார்கள்.

திராவிடக் கட்சிகளில் கிளைக் கழகச் செயலாளர்கள் (ஊராட்சி செயலாளர்கள்) பதவி என்பது கட்சியின் அடிமட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் முக்கியப் பதவி.

இதனால் திராவிடக் கட்சிகளில் கிளைக் கழகச் செயலாளர்களுக்கு தனி மதிப்பும் மரியாதையும் உண்டு. இந்த நிலையில்,

இன்று ஒரே அறிவிப்பின் மூலம் அதிமுக ஊராட்சி செயலாளர்கள் பதவிகள் அத்தனையும் கலைக்கப்படுவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் அறிவித்திருக்கிறார்கள்.

இந்த திடீர் அறிவிப்பின் பின்னணி என்னவென்று தெரியாத நிலையில், பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஊராட்சிச் செயலாளர்களுக்கு மாற்றுப் பதவிகள் வழங்கப்படும் என்றும் தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும் இன்று வெளியிட்டிருக்கும் இன்னொரு அறிவிப்பில், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் அனைவரும் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக அதிமுக தொழில்நுட்பப் பிரிவு நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இதில், சென்னை மண்டலத்துக்கு அஸ்பயர் சுவாமிநாதனும், வேலூர் மண்டலத்துக்கு சத்யனும், கோவை மண்டலத்துக்கு சிங்கை ராமச்சந்திரனும் மதுரை மண்டலத்துக்கு மதுரை அதிமுக எம்எல்ஏவான ராஜன் செல்லப்பாவின் மகன் வி.வி.ஆர்.ராஜ் சத்யனும் அதிமுக தொழில்நுட்பப் பிரிவுக்கு மண்டலச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

திமுகவுக்காக பிரசாந்த் கிஷோரின் ‘ஐபேக்’ டீம் தேர்தல் வியூகங்களை வகுத்து வரும் நிலையில், அதிமுகவில் கட்சியின் அடிநாதமான ஊராட்சிக் கழக செயலாளர் பதவிகளை கலைத்திருப்பதும், கட்சியின் தொழில்நுட்பப் பிரிவு திருத்தி அமைக்கப்பட்டிருப்பதும் பல்வேறு ஊகங்களைக் கிளப்பிவிட்டிருக்கிறது.