அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களாக 12 பேர் நியமனம்


அதிமுகவில் 12 புதிய செய்தி தொடர்பாளர்களை நியக்கப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர வேறு யாருக்கும் பேட்டி அளிக்கவோ, கட்சி நிலைப்பாடு குறித்து ருத்து தெரிவிக்கவோ உரிமை இல்லை என்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுக அவசரக்குழு கூட்டம் கடந்த வாரம் நடந்தது. கூட்டத்தின் முடிவில் டிடிவி ஆதரவாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் கட்சியைவிட்டு நீக்கப்பட்டனர். சிலர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டனர்.

கட்சியின் நிலைப்பாடு குறித்து அமைச்சர்களே மாறுபட்டுகருத்து தெரிவித்ததால் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமியும், ராஜேந்திரபாலாஜியும், பாஜகவுடன் கூட்டு என்ற அர்த்தத்தில் பதிலளிக்க செல்லூர் ராஜு பாஜக மதவாத கட்சி என்று கூறி எந்நாளும் கூட்டணி இல்லை என்று பேட்டி அளித்தார்.

இது ஊடகங்களில் கடுமையாக விமர்சனத்திற்கும், கேலிக்கும் உள்ளானது. இந்நிலையில் அதிமுகவின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர்களை விரைவில் நியமிக்க உள்ளோம் அதுவரை யாரும் கட்சியின் நிலைப்பாடு குறித்து பேட்டியோ, கருத்துக்களை பதிவிடுவதோ கூடாது என்று அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று (புதன்கிழமை) அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தின் முடிவில் அதிமுக செய்தி தொடர்பாளர்களாக 12 பேரை நியமித்து உத்தரவிட்டுள்ளனர். இவர்களில் சிலர் ஏற்கெனவே ஜெயலலிதா காலத்திலேயே அப்பொறுப்பில் இருந்தவர்கள்.

புதிதாக நியமிக்கப்பட்ட 12 செய்தி தொடர்பாளர்கள் விவரம் வருமாறு: 1.பொன்னையன், 2.வளர்மதி, 3. கோகுல இந்திரா, 4. வைகைச்செல்வன், 5. கே.சி.பழனிசாமி, 6. சமரசம், 7. கோவை செல்வராஜ், 8. ஜெ.சி.டி.பிரபாகரன், 9. மருது அழகுராஜ், 10.தீரன், 11.மகேஷ்வரி, 12.பாபு முருகவேல் ஆகிய 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தவிர இந்திய தேசிய லீக் கட்சியின் ஜவஹர் அலி க்கு மட்டும் கூடுதலாக பேசுவதற்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் 12 பேர் தவிர வேறு யாரும் கட்சியின் நிலைப்பாடு குறித்தோ மற்றவர்கள் கருத்து குறித்தோ பேட்டியோ, சமூக வலைதளங்களில் கருத்துக்களோ பதிவு செய்யக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.