அதிமுக-வை அமமுக மீட்டெடுக்கும் : டிடிவி தினகரன்..

தற்போது துரோகத்தின் பிடியில் சிக்கியுள்ள அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மீட்டெடுக்கும் என, அமமுகவின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டிடிவி தினகரன் இன்று (செவ்வாய்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “அதிமுக 1972 அக்டோபர் 17 அன்று சுயநல சித்தாந்தத்தை எதிர்த்து சீறி சிலிர்த்தெழுந்த இயக்கம்.

பெரியாரின் பாசறையில் தோன்றிய, அண்ணாவின் கொள்கை காக்க, எம்ஜிஆரின் ஆற்றல் மிக்க தலைமையில் அவதரித்த மக்கள் இயக்கம், அடுத்தடுத்த வெற்றிகளை படிக்கட்டுகளாய் அமைந்த போதிலும், அதிமுக ஒரு நாள் நாடாளுமென்று, அன்று ஆட்சியிலிருந்த திமுக ஏற்றுக்கொள்ளவே இல்லை.

மாயை என்றார்கள், நடிகர் என்றார்கள், அடக்குமுறை ஆயிரம் ஏவினார்கள், புழுதிவாரி தூற்றினார்கள், ஆனாலும் மறந்தே போனார்கள், அன்று அமைந்த திமுக ஆட்சி எம்ஜிஆரின் உழைப்பால் மலர்ந்தது என்று, எனினும், மக்கள் சக்தி மகத்தானது என்பதனை ஒவ்வொரு தேர்தல் களத்திலும் எம்ஜிஆரின் தலைமை நிரூபித்துக் காட்டியது.

மக்களின் நேசம் பெற்ற இயக்கம் 1977-ல் ஆட்சியமைத்தது. அரியணை ஏறினார் எம்ஜிஆர். ஏழை எளிய மக்களுக்கான அரசாக, கிராமப்புறங்களை மேம்படுத்தும் அரசாக, மக்கள் விரும்பும் தொழிற்சாலைகளை அமைத்துக்கொடுத்த அரசாக, மக்களோடு கைகோர்த்து அந்த ஆட்சி சென்றது. தீயவர்கள் கனைகள் அடுத்தடுத்து பாய்ந்தபோதும், அவற்றை எதிர்கொண்டு மீண்டு வந்து ஆட்சியமைத்தவர் எம்ஜிஆர்.

ஏழைகள் மீது அவர் செலுத்திய அன்பும், மக்கள் அவர்மீது கொண்ட பேரன்பும், மணிமுடி தரித்த மன்னராகவே வைத்திருந்தனர் அவர் மறையும் வரையில்.

எம்ஜிஆரின் மறைவுக்குப் பின்னால் அதிமுகவும் மறைந்துபோகும் என்று ஆருடம் கணித்தவர்களை திகைப்பில் ஆழ்த்தும் வகையில், இயக்கத்தை ஒன்றாக்கி, இழந்த சின்னத்தை மீட்டு, இழந்த எம்ஜிஆரின் ஆட்சியையும் மீண்டும் நிலைநாட்டியவர் ஜெயலலிதா.

அந்த நேரத்தில், அரசியல் போர்க்களமாக மாறிய தருணத்தில் ஜெயலலிதாவின், புரட்சிகரமான அரசியல் பிரவேசத்தில் அரணாக திகழ்ந்தவர் சசிகலா. இதனை யாரும் மறக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது.

எம்ஜிஆர் எவ்வளவு அரும்பாடுபட்டு இயக்கத்தை உருவாக்கினாரோ அதேபோல் எம்ஜிஆரின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவைக் கட்டிக் காத்தவர் ஜெயலலிதா.

வரலாற்றில் எந்த ஒரு அரசியல் இயக்கமும் சாதிக்காத சாதனைகளை சாதித்து, கணக்கிட முடியாத அளவுக்கு வெற்றிச் சாதனை சரித்திரம் தீட்டி முழுமையான மக்கள் இயக்கமாக பரிணமித்ததோடு, எந்த நிலையிலும் சமரசத்திற்கோ, அச்சுறுத்தல்களுக்கோ அடிபணியாமல் மக்கள் நலனை முன்னெடுத்து,

திமுகவின் மக்கள் விரோத நிலைப்பாடுகள் அனைத்தையும் முறியடித்து, அதிமுகவை தமிழ்நாட்டின் கவசமாகவே மாற்றியவர் ஜெயலலிதா. அவரை தமிழ்நாடு எப்போதும் வணங்கிப் போற்றிடும்.

மக்களாட்சி தத்துவத்திற்கே எடுத்துக்காட்டாய் திகழும் வண்ணம் முழுமையான மக்கள் அரசை உருவாக்கி, தமிழக மக்களின் நலனையும் உறுதி செய்தவர் ஜெயலலிதா

இந்திய நாட்டிற்கே ஆட்சி முறையில் வழிகாட்டிய மாநிலமாக தமிழகத்தை திகழச்செய்து, எல்லாத்தரப்பினருக்கும் ஆட்சியின் பலன் சென்று சேரவைத்து தாய்மார்கள், பெரியோர்கள், விவசாயிகள், பாட்டாளிகள், மாணவர்கள், முதியவர்கள் என அனைவருக்குமான அரசாக திகழ்ந்தது ஜெயலலிதா அரசு.

திராவிட இயக்கத்தின் மூல கொள்கையாக திகழ்ந்த, சமூக நீதியில் 69% இடஒதுக்கீட்டை சட்டமாக பெற்றுத்தந்தவர் ஜெயலலிதா. பல்வேறு சமூக நலத்திட்டங்களை தீட்டியதோடு, இந்தியளவில் மூன்றாவது பெரிய கட்சியாக நாடாளுமன்றத்தில் அதிமுகவை அமரவைத்த சாதனை சிகரத்தின் உச்சம் ஜெயலலிதா.

மாநில உரிமைகளை எள்ளவும் விட்டுக்கொடுக்காமல், மாநில நலன் என்ற அகல்விளக்கை அணையாமல் பாதுகாத்த திருக்கரம், ஜெயலலிதாவின் பொற்கரம். இழந்த உரிமைகளை தமிழகம் மீட்டுக்கொண்டுவந்த காலம் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலம்.

காலத்தின் போக்கு மிகவும் வினோதமானது. அதனை யாராலும் கணிக்கவும் முடியாது, நம்மையெல்லாம் வாழவைத்த ஜெயலலிதா மண்ணுலகைவிட்டு விண்ணுலகை ஆளச் சென்றார்.

மிகவும் வலிமையான அரசியல் கட்சியாக திகழ்ந்த அதிமுகவை, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் ஆதிக்க சக்திகள் தங்கள் பிடிக்குள் கொண்டு வந்திருக்கும் அவலம் தற்போது ஏற்பட்டுள்ளது.

தன் அடையாளத்தையும், தன் நிலைப்பாட்டையும் இழந்து, ஜெயலலிதா வகுத்த பாதையை மறந்துவிட்டு ஒரு சில சுயநலவாதிகளால் அதிமுக சிக்குண்டு இருப்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

தன் முகவரியை இழந்து, யாருக்கோ அடிமையாக மாறிப்போன அதிமுகவின் அவலத்தை மாற்றி, மீண்டும் வீறுகொண்ட அதிமுகவை நிலைநாட்டவும், தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவோடும், சட்டத்தின் துணையோடும், அவதரித்த இயக்கம் தான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.

திரும்பும் திசையெங்கும், பயணிக்கும் பாதையெங்கும், தாய்மார்களும், பெரியோர்களும், இளைஞர்களும் நமக்கு தந்திடும் நல் ஆதரவின், வரவேற்பின் நோக்கம் மீண்டும் ஜெயலலிதாவின் மக்கள் நலக்கொள்கைகள் தமிழகத்தை ஆளவேண்டும் என்பதுதான்.

துரோகத்தின் பிடியிலும், ஆதிக்கத்தின் வசமும், அதிமுக சிறைபட்டு கிடக்கும் கொடுமையை கண்டுதான் ஜெயலலிதாவின் 90 சதவீதத்திற்கு மேலான உண்மையான தொண்டர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தோடு உள்ளனர்.

எஞ்சியிருப்பவர்கள் தங்கள் சுயநலனுக்காக இருக்கும் ஒரு சிலரே. இந்த நொடி வரை உண்மையான அதிமுகவாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமே திகழ்ந்து வருகிறது. இனி வரக்கூடிய காலத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அதிமுகவை மீட்டெடுக்கும் காலமாகவே அமைந்திடும்.

அதிகார மையத்தின் ஆதரவை மட்டுமே கொண்டு, வேறொருக்கட்சியின் நிலைப்பாட்டை, அதிமுகவை ஏற்றுக்கொள்ளவைத்த இவர்களின் கொடுஞ்செயலை முடிவுக்கு கொண்டுவந்திடுவோம்.

ஜெயலலிதாவின் கொள்கைகளை மறந்த கூட்டத்தின் பிடியிலிருந்து அதிமுகவை மீட்க சட்டப் போராட்டத்தை மிகத்தீவிரமாகவே மேற்கொண்டுவருகிறோம். நல்ல தீர்ப்பை நீதிமன்றம் சொல்லும் நல்லநாள் வந்தே தீரும்.

மக்கள் மன்றமும் நமது நியாயத்தையும், நடைபெறும் நிகழ்வுகளையும் முழுமையாக புரிந்து கொண்டு நம் பக்கமே உள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் அதிமுகவின் கோட்டையாகவும் ஜெயலலிதா வென்ற ஆர்.கே நகர் தொகுதியின் வெற்றி வரலாற்றின் தொடர்ச்சியாக தமிழகத்து மக்களின் எண்ண உணர்வின் பிரதிபலிப்பாக அத்தொகுதி மக்கள் நம்மை அங்கீகரித்தனர். இதுவே ஒவ்வொரு தேர்தல் களத்திலும் பிரதிபலிக்கும்.

ஒரு போராளியாக தன் வாழ்க்கையை அமைத்த, ஜெயலலிதாவின் வழியில் அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும், தலைமைக் கழகத்தையும் இக்கொடியவர்களின் பிடியிலிருந்து சட்டப்பூர்வமாக மீட்போம்.
அந்த நல்ல நாள் வெகுதொலைவில் இல்லை. நாம் ஒவ்வொருவரும் கழகம் மீட்கும் ஜனநாயக போராளிகளாக களத்தில் நின்றிடுவோம். துரோகத்தை வீழ்த்திடுவோம், இதில் வென்றிடுவோம்” என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தலைமை குற்றவியல் வழக்கறிஞராக ஏ.நடராஜன் நியமனம் : தமிழக அரசு அறிவிப்பு..

பிரதமர் மோடியின் வேண்டுகோள்: சவுதி அரேபியா நிராகரிப்பு..

Recent Posts