அதிமுக ஆட்சிக் காலத்தில் முறைகேடாக நியமிக்கப்பட்ட 236 பணி நியமனங்களை ரத்து செய்து ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் 2021ம் ஆண்டு ஆவினில் பணி நியமனங்களில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த விசாரணையில் 6 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் முறைகேடு நடைபெற்றது தெரியவந்தது. இந்நிலையில் 236 பணி நியமனங்களை ரத்து செய்து ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி மதுரை 47 பேர், திருச்சி 40 பேர், தேனி 38பேர், திருப்பூர் 26 பேர், விருதுநகர் 26 பேர், நாமக்கல் 16 பேர், தஞ்சாவூர் 8 பேர் என்று மொத்தம் 236 பேரின் பணி நியமனங்களை ரத்து செய்து ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு துணையாக இருந்த 26 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் விருதுநகர், திருச்சி மற்றும் நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் பணிபுரியும் சுமார் 6 அதிகாரிகளிடமிருந்து ரூ.2,47,900 தண்டத் தொகை வசூல் செய்யவும், திருப்பூர், தேனி மற்றும் விருதுநகர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களின் நிர்வாகக் குழுவை கலைத்தும் ஆவின் நிர்வாக இயக்குநர் சுப்பையன் உத்தரவிட்டுள்ளார்.