அதிமுகவின் வாக்கு வங்கியை நோக்கியே ரஜினிகாந்த் பேச்சு..


அதிமுகவின் வாக்கு வங்கியை ஈர்க்க நடிகர் ரஜினிகாந்த் முயற்சி செய்வதாக எழுந்த யூகங்களை தனது பேச்சின் மூலம் உறுதி செய்துள்ளார் ரஜினிகாந்த். சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலையை, இன்று ரஜினிகாந்த் திறந்துவைத்தார். அரசியலில் ஈடுபட போவதாக ரஜினிகாந்த் அறிவித்த பிறகு பங்கேற்ற முதல் பொது நிகழ்ச்சி இது என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த விழாவில் ரஜினிகாந்த் அதிரடியாக பேசினார். தன் மீது சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பதை போலவே இருந்தது அவரது பேச்சு. எம்ஜிஆர் சிலை திறப்பில் ரஜினிகாந்த் பங்கேற்பதன் மூலம், அடுத்த எம்ஜிஆர் தான்தான் என்பதை மறைமுகமாக காட்டிக்கொண்டு அதிமுக வாக்குகளை அறுவடை செய்வதே ரஜினிகாந்த் நோக்கம் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்தாக இருந்தது

இந்த யூகத்தை உறுதி செய்வதை போலவே ரஜினிகாந்த் பேச்சு இருந்தது. எம்ஜிஆருக்கும், ரஜினிகாந்த்துக்கும் மனஸ்தாபம் இருந்ததாக பல வருடங்கள் முன்பாக ஊடகங்கள் பலவும் கிசுகிசு எழுதியிருந்தன. அதையெல்லாம் பொய் என்று வெளிப்படுத்தும் நோக்கம் ரஜினிகாந்த் பேச்சில் இருந்தது. ரஜினிகாந்த் பேசுகையில், எம்ஜிஆரை புகழ்ந்து தள்ளிவிட்டார்.

பணத்தை கொடுத்தே சிவந்த கை எம்ஜியாருடையது என்றும், அவர் ஒரு தெய்வ பிறவி என்றும் புகழாரம் சூட்டினார் ரஜினிகாந்த். நடிகருக்கு உடல்தான் மூலதனம் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வைக்குமாறு தன்னிடம் எம்ஜிஆர் கூறியிருந்ததாகவும், தனது மனைவி லதாவை திருமணம் செய்ய எம்ஜிஆர் தன் மீது வைத்திருந்த நல்ல அபிப்ராயம் முக்கிய காரணம் என்றெல்லாம் கூறினார்.

இந்தியாவிலேயே கட்சியை கட்டுப்பாட்டுடன், நல்ல ஆளுமையுடன் வைத்திருந்தவர் ஜெயலலிதா என்றும், தமிழகத்தில் நல்ல தலைமைக்கு வெற்றிடம் உள்ளது என்றார். தமிழகத்திற்கு ஒரு தலைவன் தேவை, அந்த இடத்தை நிரப்ப நான் வருகிறேன் என்று கூறிய ரஜினிகாந்த், முத்தாய்ப்பாய் சொன்னதுதான் ஹைலைட். எம்ஜிஆர் போல நான் வர முடியாது. என்றாலும் அவர் கொடுத்த ஆட்சியைபோல நான் கொடுக்க முடியும் என்றார். இதன்மூலம் எம்ஜிஆரின் அரசியல் வாரிசுதான்தான் என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் ரஜினிகாந்த்.

இங்குதான் ரஜினிகாந்த் அதிமுகவின் வாக்கு வங்கியை அப்படியே கபளீகரம் செய்கிறார். எம்ஜிஆருக்கு ரசிகர்கள் என்பதை தாண்டி பக்தர்கள் என்ற வகையில் கூட பலரும் இன்னும் உள்ளனர். அவருக்காகவே இரட்டை இலைக்கு ஓட்டு போட்டு வருகிறார்கள். எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலிதா பிம்ப அரசியலை கொண்டு சென்றார். இப்போது, பிம்ப அரசியலுக்கு பழக்கப்பட்ட அதிமுக வாக்காளர்கள் ரஜினியை அந்த பிம்ப அரசியலுக்கான மாற்றாக பார்க்க வாய்ப்புள்ளது.

அதிமுகவின் வாக்கு வங்கி என்பது பெரும்பாலும் பெண்களை உள்ளடக்கியது. ரஜினிகாந்த்துக்கும் பெண்கள் வாக்குகள் அத்தியாவசிய தேவை. அவரது பேச்சு ஸ்டைல் பாமரருக்கும் புரியும் வகையில் இருப்பது அந்த வாக்கு வங்கியை உறுதி செய்யும் என நினைக்கிறார். ஆனால் தான் அப்படி நினைக்கவில்லை என்றும் தனது பேச்சில் அவர் குறிப்பிட்டார். அதிமுகவின் வாக்குகளை காந்தம் போல ஈர்க்கும் வகையில்தான் இருந்தது ரஜினிகாந்த்தின் பேச்சு. கண்டிப்பாக இது அதிமுக நிர்வாகிகள் வயிற்றில் புளியை கரைக்கும் என்பது நிச்சயம்.